பெங்களூரு நகரில் வேலைவாய்ப்பு தேடி வருவோருக்காக தங்கும் விடுதி (ஹாஸ்டல்) திறக்கப்பட்டுள்ளது. பெங்களூரு காயல் நல மன்றத்தின் பொதுக்குழுவின்போது நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஹாஸ்டல் கட்டிக் கொடுத்த மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி குடும்பத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தங்கும் விடுதி திறப்பு விழா:
இறையருளால் எமது பெங்களூரு காயல் நல மன்றத்தின் 10ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் தங்கும் விடுதி திறப்பு விழா கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11.00 மணியளவில், மர்ஹூம் ஆடிட்டர் புகாரி ஹாஜி அவர்களது ஆடிட்டர் புகாரிய்யா மன்ஸிலில் நடைபெற்றது. டயமண்ட் க்ரூப் நிறுவத்தைச் சேர்ந்த ஹாஜி கே.ஏ.ஆர்.அஜ்மல் புகாரீ இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அறிமுகவுரை:
ஹாஃபிழ் கே.எம்.எஸ்.முஹம்மத் உமர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மன்றத்தின் நடப்பு கூட்ட ஏற்பாட்டாளர் ஹாஃபிழ் மன்னர் செய்யித் அப்துர்ரஹ்மான் கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான மன்ற நடவடிக்கைகள் குறித்து மன்ற துணைத்தலைவர் கே.கே.எஸ்.ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் விளக்கிப் பேசினார்.
பெங்களூரு நகருக்கு வேலைவாய்ப்பு தேடி வருவோருக்காக - மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி அவர்களது குடும்பத்தார் சார்பில் தங்கும் விடுதி கட்டித் தரப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி அவர்களின் வாழ்க்கைச் சரித சுருக்கத்தை கூட்டத்தில் கலந்துகொண்டோருடன் பகிர்ந்துகொண்டார்.
காயல்பட்டினத்திலிருந்து வேலைவாய்ப்பு தேடியும், மேற்படிப்பிற்காகவும், தொழில் நிமிர்த்தமாகவும் பெங்களூரு நகருக்கு வருவோர் தம் சொந்த இல்லத்தில் வந்து தங்குவதைப் போன்று கருதும் அளவுக்கு, முகமலர்ச்சியுடன் மர்ஹூம் அவர்கள் சுமார் 35 ஆண்டு காலமாக எண்ணிலடங்காத காயலர்களுக்கு அடைக்கலமளித்து உபசரித்ததை அவர் தனதுரையில் நினைவுகூர்ந்தார்.
அன்னார் விட்டுச் சென்ற சேவையைத் தொடருமுகமாக, இன்று அவர்களது குடும்பத்தார் சார்பில் ஒரு பள்ளிவாசல், ஒரு மத்ரஸா ஆகியவற்றைக் கட்டி நிர்வகித்து வருவதாகக் கூறிய அவர், தற்போது அப்பட்டியலில் இந்த தங்கும் விடுதியும் இணைந்துள்ளதாகக் கூறினார்.
தலைமையுரை:
அடுத்து, மன்றத் தலைரும் - நடப்பு கூட்டத் தலைவருமான ஹாஜி பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் உரையாற்றினார்.
வேலைவாய்ப்பு தேடி பெங்களூரு வரும் காயலர்களுக்காக தங்கும் விடுதியொன்றை மனமுவந்து கட்டியெழுப்பி, இன்று திறப்பு விழா வரை கொண்டு வந்துள்ள மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி குடும்பத்தினருக்கு மன்றத்தின் சார்பில் அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இந்த தங்கும் விடுதியில் தங்கிச் செல்வோர், தமக்குத் தகுந்த வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெற்ற பின்னர், தம் குடும்பத்தினரை நல்ல முறையில் அரவணைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்ட அவர், காயல்பட்டினத்தைச் சேர்ந்த வருங்கால மாணவர்கள் தகுந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றிட தம்மாலான அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்புகளையும் மனமுவந்து செய்திட இப்போதே எண்ணங்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
நிர்ணயிக்கப்பட்ட தங்குமிடங்களை மட்டுமே கொண்ட இந்த தங்கும் விடுதி, பெங்களூருவில் வேலை தேடி வருவோருக்காகவே முழுக்க முழுக்க பயன்படுத்தப்படவுள்ளதால், விடுதியில் சேர விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னர், விடுதியில் வந்து தங்காமல் காயல்பட்டினத்தில் நாட்களை வீணடிப்பதை மாணவர்கள் தவிர்த்துக்கொள்வதன் மூலம், அடுத்து காத்திருக்கும் மாணவர்களுக்கு தடையாக இருக்காமல் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் அவர்.
சிறப்புரை:
அடுத்து, தங்கும் விடுதியைக் கட்டித் தந்த மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி குடும்பத்தினர் சார்பில் அவர்களது மகன் அப்துல் ரஹ்மான் உரையாற்றினார்.
பெங்களூரு காயல் நல மன்றத்தின் கடந்த பொதுக்குழுக் கூட்டத்தின்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கு இன்று செயல்வடிவம் பெற்றுள்ளதாக பெருமிதத்துடன் கூறினார்.
விடுதியில் தங்குவோர் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் குறித்து பேசிய அவர், விடுதியில் தங்குவோர் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டு, தமக்கான வேலைவாய்ப்புகளைத் தேடிப் பெறுவதில் தீவிரம் காட்ட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
தனது தந்தை தம் வாழ்நாளில் பல்வேறு இடர்களைத் தாண்டி சாதனையாளராக மிளிர்ந்ததை நினைவுகூர்ந்து பேசிய அவர், அனைவரும் அவர்களைப் போல நற்குணங்களுடன் திகழ வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
விடுதியில் தங்கும் மாணவர்கள் தகுந்த வேலைவாய்ப்பைப் பெற்றிட, ஏற்கனவே பல்வேறு பணிகளிலிருக்கும் பெங்களூரு காயல் நல மன்ற அங்கத்தினர் உள்ளிட்ட அனைத்து காயலர்களும் மனமுவந்து ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
விடுதி சுத்தம் - சுகாதாரத்துடன் பராமரிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், விடுதி பராமரிப்பு மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான எந்தத் தேவை அல்லது பிரச்சினையாக இருந்தாலும், மன்ற துணைத்தலைவர் கே.கே.எஸ்.ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அவர்களைத் தொடர்புகொள்ளுமாறு கூறி தனதுரையை நிறைவுசெய்தார்.
விடுதியில் தங்க விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு:
அடுத்து, புதிதாகத் திறக்கப்பட்டுள்ள விடுதியில் முதன்முறையாக தங்க வந்திருக்கும் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தமது விண்ணப்ப படிவங்களைக் கொடுத்து முறையாக விடுதியில் இணைந்து கொண்டனர்.
வாழ்த்துரை:
அடுத்து, மஸ்ஜித் புகாரியின் இமாம் மற்றும் மத்ரஸா புகாரிய்யாவின் தலைமையாசிரியரான மவ்லவீ அபூபக்கர் ஆலிம் வாழ்த்துரையாற்றினார்.
இதுநாள் வரை, பெங்களூரு நகரில் வேலைவாய்ப்புக்காக நேர்காணலுக்கு (Interview) வருவோர், ஓரிரவு மட்டும் தங்குவதற்குக் கூட பட்ட பாடுகளை விவரித்துப் பேசிய அவர், தற்போது அக்குறை இறையருளால் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக தமது பொருளாதாரத்தைச் செலவழித்த குடும்பத்தினருக்கு ஸதக்கத்துன் ஜாரியா எனும் நீடித்த - நிலையான நன்மைகளை இக்கட்டிடம் பெற்றுத் தரும் என்றும் கூறி, மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி குடும்பத்தினர் நலனுக்காக பிரார்த்தனை செய்தார்.
செயலர் பிரியாவிடை:
அடுத்து, மன்றச் செயலாளர் எம்.என்.சுலைமான் உரையாற்றினார்.
பெங்களூரு நகரில் தனது இரண்டாண்டு பணிக்காலத்தில், பெங்களூரு காயல் நல மன்றம் - தனது பொதுவாழ்விற்கு நல்லதொரு அடையாளத்தைத் தந்ததாகவும், நிறைந்த மனதுள்ள நல்ல நண்பர்கள், எளிதில் தொடர்புகொள்ளத்தக்க நல்ல நிர்வாகிகள், என சகலத்தையும் வழங்கிய இம்மன்றத்தை தன் வாழ்நாள் முழுதும் மறக்கப் போவதில்லை என்றும், இனி எங்கு சென்றாலும் தனது தாய்க்கழகமாக இம்மன்றமே இருக்கும் என்றும் கூறிய அவர், தனது பணியிட மாற்றம் காரணமாக பெங்களூரு நகரை விட்டும் கனத்த இதயத்துடன் பிரிவதாக உருக்கத்துடன் கூறினார்.
காயல்பட்டினம் துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி மற்றும் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் ஆகிய அமைப்புகளின் நடப்புச் செயல்பாடுகள் குறித்தும் அவர் தகவல்களைக் கூறினார்.
பெங்களூரு காயல் நல மன்றத்தின் நகர்நலப் பணிகளில் இதுவரை தம்மை ஈடுபடுத்திக்கொள்ளாத காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் தன்னார்வத்துடன் முன்வந்து மன்றத்தில் இணையுமாறு கேட்டுக்கொண்ட அவர், இம்மன்றத்தின் தனிச்சிறப்பே - அதன் பெரும்பாலான உறுப்பினர்கள் இளைஞர்கள் என்பதுதான் என்றும் கூறினார்.
தனது பொறுப்புக் காலத்தில் ஏதேனும் தவறிழைத்திருப்பின் அதைப் பெரிய மனதுடன் அனைவரும் பொருந்திக்கொள்ளுமாறு கேட்டவராக தனதுரையை அவர் நிறைவு செய்தார். பின்னர் செயலரின் சேவையைப் பாராட்டி, அவருக்கு மன்றத்தின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
தீர்மானங்கள்:
உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - விடுதி கட்டித்தந்த குடும்பத்திற்கு நன்றி:
பெங்களூரு நகரில் வேலைவாய்ப்பு தேடி வரும் காயலர்கள் தங்குவதற்காக விடுதி கட்டித் தந்து, அதன் நிர்வாகப் பொறுப்பை பெங்களூரு காயல் நல மன்றம் வசம் ஒப்படைத்துள்ள மர்ஹூம் ஆடிட்டர் புகாரீ ஹாஜி குடும்பத்தினருக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதுடன், மர்ஹூம் அவர்களுக்கு கருணையுள்ள அல்லாஹ் மஃக்ஃபிரத் எனும் பாவப் பிழை பொறுப்பை வழங்கி, அவர்கள் விட்டுச் சென்ற சேவையை இன்னும் அதிகளவில் தொடர அக்குடும்பத்தினருக்கு சர்வ தகுதிகளையும் வழங்கியருள இக்கூட்டம் மனதார பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 02 - இக்ராஃவுக்கு நன்றி:
விடுதியில் தங்க இடம் கோரும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்க இசைவு தெரிவித்து ஒத்துழைப்பு நல்கி வரும் காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 03 - நஸூஹிய்யா மத்ரஸாவிற்கு வாழ்த்து:
காயல்பட்டினம் நஸூஹிய்யா மத்ரஸா சார்பில் வரும் டிசம்பர் மாதம் 28, 29, 30 தேதிகளில் நடத்தப்படவுள்ள - தமிழகம் தழுவிய மாமறை குர்ஆன் மனனப் போட்டி சிறப்புற நடந்தேறவும், அதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவும் இக்கூட்டம் வாழ்த்திப் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 04 - சாதனை மாணவியருக்கு வாழ்த்து:
மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக் கழக அளவில்,
விலங்கியல் பாடப்பிரிவு மற்றும் பாடத்தில் முதலிடம் பெற்ற காயல்பட்டினம் நெசவுத் தெருவைச் சேர்ந்த மாணவி ஜெ.ராபியத்துல் ஃபஹ்மிய்யா,
கணினி அறிவியல் பாடப்பிரிவு மற்றும் பாடத்தில் முதலிடம் பெற்ற காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சேர்ந்த மாணவி எஸ்.என்.அஹ்மத் ஹலீமா,
அரபி மொழி பாடத்தில் முதலிடம் பெற்ற காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மாணவி நஹ்வீ எஸ்.எச்.யாஸ்மின் ஃபர்ஹானா
ஆகியோரின் சாதனைகளை இக்கூட்டம் மனதாரப் பாராட்டுவதோடு, அவர்களது வருங்காலம் சிறப்புற வாழ்த்திப் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 05 - விடைபெறும் மன்றச் செயலாளருக்கு நன்றி:
பெங்களூரு நகரில் இதுகாலம் வரை பணியாற்றி, தற்போது கத்தர் நாட்டிற்குப் பணியாற்றச் செல்லும் - மன்றச் செயலாளர் எம்.என்.சுலைமான் அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்கு மன்றம் தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதோடு, அவரது வருங்காலம் ஒளிமயமாக இக்கூட்டம் வாழ்த்திப் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 06 - தற்காலிக செயலாளர் நியமனம்:
மன்றச் செயலர் எம்.என்.சுலைமான் விடைபெறுவதையொட்டி, அடுத்த செயலர் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் வரை செயலர் பொறுப்பை தற்காலிகமாக ஹாஃபிழ் மன்னர் அப்துர்ரஹ்மான் அவர்கள் வசம் ஒப்படைத்தும்,
துளிர் பள்ளி தொடர்புகள் மற்றும் அதற்கான உண்டியல் வசூல் உள்ளிட்டவற்றுக்கு ஹாஃபிழ் முஹம்மத் உமர் அவர்களைப் பொறுப்பாளராக நியமித்தும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 07 - அரசுப் பதிவு:
மன்றத்தை முறைப்படி அரசுப்பதிவு செய்வதற்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் செய்து தர, ஆடிட்டர் புகாரீ ஹாஜி குடும்பத்தினர் வசம் இக்கூட்டம் பொறுப்பளிக்கிறது.
தீர்மானம் 08 - பயன்படுத்தப்பட்ட நல்லாடை சேகரிப்பு:
காயல்பட்டினத்திலுள்ள ஏழை - எளிய மக்கள் பயன்பெற்றிடுவதற்காக, மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களின் பயன்படுத்தப்பட்ட நல்லாடைகளை சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு, மன்றத்தின் துணைச் செயலாளர் மக்கீ இஸ்மாஈல் வசம் இக்கூட்டம் பொறுப்பளிக்கிறது.
தீர்மானம் 09 - KCGCயின் ஒத்துழைப்பு:
புதிதாகத் திறக்கப்பட்டுள்ள விடுதியில் தங்குவதற்காக சென்னையிலிருந்து வரும் மாணவர்களை விசாரித்து பரிந்துரை செய்திட, காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு அமைப்பு (KCGC) அமைப்பிடம் பொறுப்பளிக்க இக்கூட்டம் தீர்மானிப்பதுடன், அதுகுறித்து அவ்வமைப்பை முறைப்படி தொடர்புகொண்டு அதன் இசைவைப் பெற்றிடவும் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 10 - காயல் கைடு நூல்:
காயல்பட்டினம் சார்ந்த பல்வேறு தகவல்களை உள்ளடக்கி அச்சாகிக் கொண்டிருக்கும் காயல் கைடு நூலைப் பெற்று வினியோகிப்பதற்கு, மன்றப் பொருளாளர் வாவு முஹம்மத் அவர்களிடம் இக்கூட்டம் பொறுப்பளிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்றியுரையைத் தொடர்ந்து, ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஹாஜிர் துஆ ஓத, ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு பெங்களூரு காயல் நல மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் ஹாஜி பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல் & படங்கள்:
K.K.S.முஹம்மத் ஸாலிஹ் (துணைத்தலைவர்)
ஹாஃபிழ் மன்னர் B.A.செய்யித் அப்துர்ரஹ்மான் (ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்)
இப்றாஹீம் நவ்ஷாத் (ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்)
செய்தியாக்கம்:
S.K.ஸாலிஹ் |