சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில், ஏழை - எளியோர் நலத்திட்ட உதவிகளுக்காக ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
செயற்குழுக் கூட்டம்:
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 01ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 19.45 மணிக்கு, மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
மன்றத்திற்கு புதுவரவான ஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத் பாதுஷா கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
ஆலோசகர் உரை:
மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
சிங்கப்பூருக்கு புதிதாக காயலர்கள் வந்துகொண்டிருப்பதைக் கருத்திற்கொண்டு, அவர்கள் யாவருக்கும் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு கிடைத்திட மன்றத்தினர் யாவரும் முழு மனதுடன் ஒத்துழைத்து உதவ வேண்டுமென்று தனதுரையில் கேட்டுக்கொண்ட அவர், மன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் பிரித்து, அனைத்து உறுப்பினர்களுக்குமே அவரவர் வசதிக்கேற்ப பொறுப்புகளைப் பகிர்ந்தளிக்க வேண்டுமென்றும், அதன் காரணமாக மன்றத்தின் அனைத்துறுப்பினர்களுமே மன்ற நடவடிக்கைகளில் முழு ஈடுபாடு காண்பிக்க வாய்ப்பேற்படும் என்றும் கூறினார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
கூட்ட ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் தைக்கா ஸாஹிப் உரையாற்றினார். மன்றக் கூட்டத்தை ஒருங்கிணைப்பதற்கு முதன்முறையாக தனக்குக் கிடைக்கப்பெற்ற வாய்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், அனைத்து வகைகளிலும் தம்மாலியன்ற பொருளாதாரத்தை சந்தாவாகவும், நன்கொடைகளாகவும் உறுப்பினர்கள் பங்களிப்புச் செய்வதன் மூலம், மன்றத்தின் நகர்நல நடவடிக்கைகள் தொய்வின்றி நடைபெற வாய்ப்பேற்படும் என்றும் கூறினார்.
புதிய உறுப்பினர் அறிமுகம்:
இம்முறை சிங்கப்பூருக்கு புதிதாக வந்து, மன்ற உறுப்பினராக இணைந்துள்ள காயல்பட்டினம்
(1) கே.டி.எம். தெருவைச் சேர்ந்த ஸுஹைல் புகாரீ,
(2) குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத் பாதுஷா
ஆகியோர் இக்கூட்டத்தில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
மன்றத்தின் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான மன்ற நிர்வாகத்தின் நடவடிக்கைகள் குறித்து செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசினார். உரைச்சுருக்கம் வருமாறு:-
(அ) கல்வி மற்றும் மனிதாபிமான உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான விசாரணையை அவற்றுக்கான குழு முறைப்படி நிறைவு செய்துள்ளது.
(ஆ) பயன்படுத்திய நல்லாடை வினியோகத் திட்டத்தின் கீழ், 3ஆம் கட்டமாக உடைகள் காயல்பட்டினத்தைச் சென்றடைந்துள்ளது.
(இ) இறையருளால், முதியோர் நல உதவித் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தற்போது 6 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
(ஈ) தற்போது, மருத்துவ உதவி கோரும் விண்ணப்பங்கள் அனைத்தும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் பரிசீலனைக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, ஏற்கப்பட்டவற்றுக்கு அக்குழுவால் - ‘ஷிஃபா’ மூலம் அவற்றுக்கான நிதி அனுப்பி வைக்கப்படும் நடைமுறை பேணப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, தேவையற்ற சர்ச்சைகளுக்கு இடமளிக்காமல், நன்முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவியலும்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் மஹ்மூத் ரிஃபாய் கூட்டத்தில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றதுடன், திட்டங்களுக்காக செய்யப்பட்டுள்ள நிதியொதுக்கீடுகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
உதவி கோரும் விண்ணப்பங்கள் மீதான விசாரணை நிலை:
உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும், அதற்கென நியமிக்கப்பட்ட - ஹாஃபிழ் ஃபஸல் இஸ்மாஈல், ஹாஃபிழ் சோனா அபூபக்கர் ஸித்தீக், நூருல் அமீன் ஆகியோரடங்கிய குழுவால் விசாரணை செய்து முடிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
நிதியொதுக்கீடு:
மருத்துவம் மற்றும் மனிதாபிமான உதவிகள் கோரி பெறப்பட்டவற்றுள் ஏற்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு, ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் தொகை நிதியொதுக்கிடு செ்யயப்பட்டுள்ளது. மருத்துவ உதவித் தொகை ‘ஷிஃபா’ மூலம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெற்றிப் பாதையி்ல் முதியோர் சமூக நலத் திட்டம்:
கடந்த மாத கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது போல, முதியோர் சமூக நலத்திட்ட உதவித் திட்டத்தின் கீழ், தகுதியான 6 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும், மன்ற உறுப்பினர்களால் பெயர் முன்வைக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பயனாளிகளுக்கு, கடந்த அக்டோபர் மாதம் முதல் மாதந்தோறும் ரூபாய் 1,500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இப்பயனாளிகளுக்கு இந்த உதவித்தொகை துவக்கமாக மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படும்.
நிதிநிலையறிக்கை:
2014ஆம் ஆண்டிற்கான மன்றத்தின் நிதிநிலையறிக்கையை ஆயத்தம் செய்திட, மன்றத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் இஸ்மாஈல் வசம் இக்கூட்டம் பொறுப்பளிக்கிறது.
உண்டியல் திறப்பு:
மன்ற உறுப்பினர்களின் உண்டியல்கள் சேகரிக்கப்பட்டு, வரும் டிசம்பர் மாதம் 06ஆம் தேதியன்று அவை திறக்கப்பட்டு, பெறப்படும் நிதி மன்றக் கருவூலத்தில் சேர்க்கப்படும்.
குடும்ப சங்கமம்:
மன்றத்தின் அடுத்த குடும்ப சங்கம நிகழ்ச்சி, வரும் 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆவது வாரத்தில், மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களது இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியாக நடைபெறும்.
கூட்ட நிறைவு:
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. பின்னர் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
நிறைவில், அனைவருக்கும், இட்லி - வடை - சாம்பார் - சட்னி ஆகிய பதார்த்தங்களை உள்ளடக்கிய சைவ உணவு வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹாஃபிழ் M.A.C.செய்யித் இஸ்மாஈல்
நிர்வாக ஒருங்கிணைப்பாளர்
காயல் நல மன்றம் - சிங்கப்பூர் |