காயல்பட்டினம் நகராட்சியின் 07ஆவது வார்டுக்குட்பட்ட தீவுத்தெரு, 08ஆவது வார்டுக்குட்பட்ட முத்துவாப்பா தைக்கா தெரு ஆகிய பகுதிகளில் பல மாதங்களாக தெரு விளக்குகள் பல எரியவில்லை என்றும், பலமுறை இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் அவை சரி செய்யப்படவில்லை என்றும் கூறி, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில், இன்று மாலை 04.30 மணியளவில் நகராட்சிக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இளைஞர் ஐக்கிய முன்னணியின் நடப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா, 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா, 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாப்தீன், 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக நிகழ்விடம் வந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டம் துவங்க ஆயத்தமான நேரத்தில் அங்கு வந்த - இளைஞர் ஐக்கிய முன்னணியின் மூத்த உறுப்பினர் நஹ்வீ அஹ்மத் முஹ்யித்தீன், “அதான் தெரு விளக்குதான் பொருத்தப்படுகிறதே...? ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்ய வேண்டியதுதானே...? என்று கேட்டபோது, திட்டமிட்ட படி ஆர்ப்பாட்டம் நடக்கும் என, ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
தொடர்ந்து நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களால், இளைஞர் ஐக்கிய முன்னணியையொட்டிய - ஸீ கஸ்டம்ஸ் சாலை பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. சில நிமிடங்களில் அவ்விடம் வந்த ஆறுமுகநேரி காவல்துறையினர், காவல்துறை முன்னனுமதி பெறாததைச் சுட்டிக்காட்டி, ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுமாறு கூறினர். அடுத்த சில நிமிடங்களில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
பின்னர், இளைஞர் ஐக்கிய முன்னணியின் கோட்டைச் சுவரையொட்டிய மின் கம்பத்தில் ஹரிக்கேன் விளக்கு எரிய விடப்பட்டது.
ஆர்ப்பாட்ட நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன், முத்துவாப்பா தைக்கா தெருவில் - தெரு விளக்குகள் எரியவில்லையெனக் கூறப்பட்ட மின் கம்பங்களில், 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி மேற்பார்வையில் புதிய தெரு விளக்குகள் நிறுவும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அவரிடம், எரியாத தெரு விளக்குகள் தொடர்பான முறையீடுகள் குறித்து வினவியபோது,
“எனது 07ஆவது வார்டுல 45 லைட் எரியலை... போன தடவையே எம்.இ. (நகராட்சி பொறியாளர்) உங்க வார்டுக்கு லைட் தாறேன்னு சொன்னாரு... போன திங்க கிழமை இவங்ககிட்டலாம் சொல்லிட்டு போனேன்... ஆர்ப்பாட்டம்லாம் பண்ணாதீங்க... லைட்டு தாறேன்னுட்டாங்கன்னு சொல்லி...
அதுக்குப் பிறகு எம்.இ. ஒரு வாரமா ஃபோனையே எடுக்கிறது கெடையாது... இன்னிக்கு ஃபோன எடுத்திருக்காரு... லைட்ட தாறேன்னு சொல்லியிருக்காரு... இன்னிக்கு போயி கேட்டிருக்கேன்... அதுக்கெடையில ஜெ.இ. (மின்வாரிய துணைப் பொறியாளர்) ஆள் விடவில்லை... அப்புறம் ஜெ.இ. கிட்ட ஆள் கேட்டு, அவரு நாலு மணிக்குப் பிந்திதான் ஆள் விட்டிருக்கிறாரு... இப்ப லைட்ட மாட்டிக்கிட்டு இருக்கோம்...
ஏன்னா, இந்த லைட்டு வந்து அரசியல் ஓடுற மாதிரி ஓடிக்கிட்டு இருக்கு... நான் லைட் கேட்டதற்குப் பிறகு கேட்ட நாலு வார்டுகளுக்கு மாட்டுறதுக்கு ஆள் விட்டுட்டாங்க... ஐந்தாவதாதான் எனக்கு தந்திருக்காங்க... இவங்க போராட்டம் பண்றாங்கன்னு சொன்னப்புறம்தான் லைட் தந்திருக்காங்க...” என்றார்.
“போராட்டம் அறிவிக்கப்பட்ட பிறகுதான் இந்த முயற்சியை எடுத்தீர்களா, முன்பே எடுத்தீர்களா?” என கேட்கப்பட்டபோது,
“அதுக்கு முன்னாடி ஒன்னரை மாசமா கேட்டுக்கிட்டு இருக்கேன்... இன்னைக்குத் தாறேன், நாளைக்குத் தாறேன்னு (அதிகாரிகள்) ஏமாத்திக்கிட்டே இருக்காங்க...” என்றார் அவர்.
“எங்கெங்கு எவ்வளவு காலமாக விளக்குகள் எரியவில்லை?” என்று கேட்கப்பட்டதற்கு,
“தீவுத்தெரு, சிங்கித்துறை, ஈக்கியப்பா தைக்கா தெரு, பண்டகசாலை தெரு ஆகிய இடங்களில் 45 தெரு விளக்குகள் எரியவில்லை” என்றார்.
“இதுக்கிடையில், லைட் மாட்டுன காசக் கூட இன்னும் வாங்கவில்லை... மாசம் மூன்றரையாயிட்டு! போன வாட்டி மாட்டுன காசக் கூட இன்னும் தரலை... ஒரு லைட்டுக்கு 30 ரூபாய் கொடுத்து மாட்டுறோம்... நகராட்சியிலேர்ந்து இருபது ரூபாய் தரனும்... காசே தர மாட்டேங்கறாங்க... எங்க கையிலேர்ந்துதான் கொடுக்கனும் அத!”
இவ்வாறு, 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி கூறினார். உறுப்பினர் ஜெ.அந்தோணியின் இந்த கருத்துக்களை உள்ளடக்கிய அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் தெரு விளக்குகள் பல காலமாக எரியாமல் உள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்களால் தொடர்ந்து முறையிடப்பட்டும் வருகிறது.
மின் கம்பங்களில் தெரு விளக்குகளைப் பொருத்துவதற்கென நகராட்சியில் சிறப்பு ஊழியர்கள் இல்லாமையும், அவ்வப்போது தற்காலிகமாக பொறுப்பமர்த்தப்படும் ஊழியர்கள் சொற்ப காலத்தில் பணியை விட்டுவிட்டுச் சென்றுவிடுவதும் நகராட்சி நிர்வாகத்தால் பல்வேறு தருணங்களில் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு காயல்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சி, நகராட்சி தரத்தைப் பெற்றது. மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920இன் படி, நகராட்சியில் அமைந்துள்ள தெரு விளக்குகளை நகராட்சியே பராமரிக்க வேண்டும் என்று உள்ளது. இருந்தும், கடந்த 9 ஆண்டுகளாக அதற்கென அரசால் பணியிடம் உருவாக்கப்படவோ, ஊழியர்கள் நியமிக்கப்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், நகராட்சி தெரு விளக்குகள் பராமரிப்பில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.
இந்நிலையில், காயல்பட்டினம் நகராட்சியின் தெரு விளக்குகள் பராமரிப்பை தனியார்மயமாக்க - அண்மையில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது. |