காயல்பட்டினம் மத்ரஸத்துன் நஸூஹிய்யா சார்பில், தமிழ்நாடு மாநிலந்தழுவிய மாமறை குர்ஆன் மனனப் போட்டி, டிசம்பர் மாதம் 28, 29, 30 தேதிகளில் (சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில்) காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் முதல் தளத்தில் நடைபெற்றது.
உள்ளூர் மாணவர்களுக்கான நுழைவுப் போட்டி:
துவக்க நாளான டிசம்பர் 28ஆம் தேதியன்று உள்ளூர் மாணவர்களுக்கான நுழைவுப் போட்டி, பெரிய - சிறிய குத்பா பள்ளிகளின் தலைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்றது.
ஊண்டி செய்கு அலீ, ஹாஜி சாளை முஹம்மத் அப்துல் காதிர், வி.எம்.ஏ.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஜி ஏ.கே.எஸ்.முஹம்மத் ரஷீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் கே.ஏ.எம்.முஹம்மத் உதுமான் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாஜி ஏ.எம்.நூர் முஹம்மத் ஜக்கரிய்யா வரவேற்றுப் பேசினார்.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த - திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ள 27 ஹாஃபிழ்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியர் ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் நன்றி கூற, சிறிய குத்பா பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் மக்கீ எம்.எம்.ஹாமித் லெப்பை ஃபாஸீ துஆவுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
வெளியூர் மாணவர்களுக்கான நுழைவுப் போட்டி:
இரண்டாம் நாளான டிசம்பர் 29ஆம் தேதியன்று வெளியூர் மாணவர்களுக்கான நுழைவுப் போட்டி, அஹ்மத் நெய்னார் பள்ளியின் தலைவர் ஹாஜி எஸ்.கே.இசட்.ஆப்தீன் தலைமையில் நடைபெற்றது.
குருவித்துறைப் பள்ளி மற்றும் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், மஹ்ழரா அரபிக் கல்லூரியின் செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர் முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப், மஸ்ஜித் மீக்காஈல் என்ற இரட்டைக் குளத்துப் பள்ளியின் தலைவர் ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை), மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணைச் செயலாளர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீலுர்ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.ஏ.உமர் ஃபாரூக் அஃழம் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ வரவேற்றுப் பேசினார்.
வெளியூர்களிலிருந்து வந்திருந்த - திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ள 17 ஹாஃபிழ்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன் நன்றி கூற, மத்ரஸத்துல் ஹாமிதிய்யா ஆசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ துஆவுடன் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இறுதிப்போட்டி:
முதல் இரண்டு நாட்களிலும் நடைபெற்ற போட்டிகளிலிருந்து தலா 10 ஹாஃபிழ்கள் இறுதிப்போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்கான போட்டி நிறைவு நாளான டிசம்பர் 30ஆம் தேதியன்று - மத்ரஸத்துன் நஸூஹிய்யா தலைவர் ஹாஜி ஸ்டார் ஏ.ஆர்.அப்துல் வதூத் தலைமையில் நடைபெற்றது.
ஜாவியா அரபிக்கல்லூரி மற்றும் கே.எம்.டி. மருத்துவமனை தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, நஸூஹிய்யா மத்ரஸா ஆலோசகர் மவ்லவீ கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஆலோசகர் ஹாஜி எஸ்.அக்பர்ஷா, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணைத்தலைவர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், நஸூஹிய்யா மத்ரஸா பொருளாளர் ஹாஜி எம்.ஓ.முஹம்மத் முஹ்யித்தீன், மத்ரஸத்துல் ஹாமிதிய்யா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, மூன் தொலைக்காட்சியின் இஸ்லாமிய நிகழ்ச்சிகள் தயாரிப்பாளர் ஹாஃபிழ் எஃப்.மீரா கஃபூர் ரஹீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியரும், நஸூஹிய்யா மத்ரஸா முதல்வருமான மவ்லவீ ஹாஃபிழ் ஏ.செய்யித் முஹம்மத் மன்பஈ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து இறுதிப்போட்டி துவங்கியது.
மூன்று நாட்களும் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளையும் – சென்னை அஷ்ரஃப் மஸ்ஜித் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் ஸித்தீக் அலீ பாக்கவீ, கேரள மாநிலம் – திருசூர் ஜாமிஆ மஸ்ஜித் கத்தீப் மவ்லவீ அப்துல் ரஹ்மான் அன்வரீ, சென்னை மஸ்ஜிதுல் அக்பர் பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் ரஜீன் ஆகியோர் நடுவர்களாக இருந்து வழிநடத்தினர்.
இறுதிப்போட்டியின் நிறைவில் அனைவரும் ஸலாம் பைத் நின்றோதினர். பின்னர் திருமறை குர்ஆனை ஏழு விதங்களில் ஓதும் கலையான ‘ஸப்ஆ கிராஅத்’ முறையில், போட்டிகளின் நடுவரான மவ்லவீ ஹாஃபிழ் ஸித்தீக் அலீ பாக்கவீ ஓதிக் காண்பித்தார்.
மற்றொரு நடுவரான மவ்லவீ ஹாஃபிழ் அப்துல் ரஹ்மான் அன்வரீ மலையாள மொழியில் சிறப்புரையாற்றினார்.
பரிசளிப்பு விழா:
அன்று மாலை 16.30 மணியளவில் இரண்டாம் அமர்வு - பரிசளிப்பு விழா நிகழ்ச்சியாகத் துவங்கியது. நஸூஹிய்யா மத்ரஸா மற்றும் மஹ்ழரா குர்ஆன் மத்ரஸா ஆகியவற்றின் பேராசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு மாணவர் கே.எம்.எச்.அப்துல் வதூத் இஸ்லாமிய பாடல் பாடினார்.
காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் வரவேற்றுப் பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், தனியார் ஹஜ் நிறுவன பங்குதாரர் ஹாஜி ஷம்ஸுல் ஹுதா, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, தமிழக அரசின் தூத்துக்குடி மாவட்ட காழீயும், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
போட்டிகளை நடத்தும் நஸூஹிய்யா மத்ரஸா குறித்து, அதன் நிர்வாகியும் - போட்டிகளின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஹாஜி ஏ.டபிள்யு.கிழுறு முஹம்மத் ஹல்லாஜ் அறிமுகவுரையாற்றினார்.
அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ சிறப்புரையாற்றினார்.
பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. பரிசு பெற்றோர் விபரம் வருமாறு:-
முதற்பரிசு:
ஹாஃபிழ் எல்.எஸ்.முஹம்மத் ஹஸன் இர்ஃபான்
த.பெ. மர்ஹூம் என்.எம்.முஹ்யித்தீன் அபூபக்கர் லெப்பை ஸாஹிப்
குறுக்கத் தெரு, காயல்பட்டினம்.
நிறுவனம்: அஹ்மத் நெய்னார் பள்ளி, காயல்பட்டினம்.
இரண்டாம் பரிசு:
ஹாஃபிழ் ஏ.முஹம்மத் யாஸீன்
த.பெ. அப்துல் ஸமீன்
ஒத்தக்கடை - மதுரை
நிறுவனம்: நாஃபிஉல் உலூம் மத்ரஸா
மூன்றாம் பரிசு:
ஹாஃபிழ் ஜே.எம்.ஷெய்கு அப்துல் காதிர்
த.பெ. ஹாஜி என்.டி.ஜமால் முஹம்மத்
தீவுத்தெரு - காயல்பட்டினம்
நிறுவனம்: மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் - காயல்பட்டினம்
முதல் மூன்று பரிசுகளைப் பெற்ற இம்மூவருக்கும் முறையே ரூபாய் 25 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது. இவர்கள் உம்றா - ஜியாரத் செல்வதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பரிசுகள்:
ஹாஃபிழ் கே.ஷாஹுல் ஹமீத்
த.பெ. என்.கலீலுர்ரஹ்மான்
கம்பம் - தேனி மாவட்டம்
நிறுவனம்: அஸ்ஸெய்யிதத்துல் காதிரிய்யா ஹிஃப்ழு மத்ரஸா
ஹாஃபிழ் பி.ஒய்.எஸ்.ஹாரிஸ் ஹல்லாஜ்
த.பெ. பி.யாஸீன் ஸிப்கத்துல்லாஹ்
குத்துக்கல் தெரு - காயல்பட்டினம்
நிறுவனம்: அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் - காயல்பட்டினம்
சிறப்புப் பரிசுகளைப் பெற்ற இவ்விருவருக்கும் தலா ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டதோடு, உம்றா - ஜியாரத் செய்வதற்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆறுதல் பரிசுகள்:
ஹாஃபிழ் எம்.ஏ.கே.செய்யித் இஸ்மாஈல்
த.பெ. மொகுதூம் அப்துல் காதிர்
நிறுவனம்: மஸ்ஜித் ஸெய்யிதினா பிலால் - காயல்பட்டினம்
ஹாஃபிழ் பி.காதிர் ஹுஸைன்
த.பெ. பீர் முஹம்மத்
நிறுவனம்: ஜாமிஆ அன்வாருல் உலூம் அரபிக்கல்லூரி - திருச்சி
ஹாஃபிழ் எஸ்.என்.தைக்கா தம்பி
த.பெ. ஷெய்கு நூருத்தீன்
நிறுவனம்: மன்பஉல் பறக்காத் சங்கம் - காயல்பட்டினம்
ஹாஃபிழ் முஹம்மத் மன்ஸூர் ஆலம்
த.பெ. முஹம்மத் ஹாஸிப்
நிறுவனம்: அல்ஜாமிஅத்துல் ஹுஸைனிய்யா நிறுவனம் - அத்திக்கடை
ஹாஃபிழ் என்.அப்துல் ஸத்தார்
த.பெ. வி.ஆர்.நூர் முஹம்மத்
நிறுவனம்: ஆமிர் கலீமி அரபிக்கல்லூரி – திருவள்ளூர்
ஆறுதல் பரிசு பெற்ற இவர்களனைவருக்கும் தலா ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசு வழங்கப்பட்டது.
போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அனைவருக்கும் அன்பளிப்புகள்:
போட்டி நடுவர்கள், பங்கேற்பாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம், இளைஞர் ஐக்கிய முன்னணி மற்றும் ஜெஸ்மின் பாரடைஸ் தனியார் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. போட்டி நடுவர்கள், மார்க்க அறிஞர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நஸூஹிய்யா மத்ரஸா செயலாளரும், போட்டிக்குழு செயலாளருமான ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை நன்றி கூற, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. மூன்று நாட்களின் நிகழ்ச்சிகளையும், ‘முத்துச்சுடர்’ ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் நெறிப்படுத்தினார்.
நகர்வலம்:
பின்னர், காயல்பட்டினம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையின் சார்பில் - போட்டியில் பங்கேற்ற அனைவரும் பைத் இசைத்து - தாயிரா முழங்க நகர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
மூன்று நாட்களிலும் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளிலும், காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள், ஹாஃபிழ்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு, காணொளி நேரலை ஏற்பாட்டுடன் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
நேரலை:
மூன்று நாட்களும் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் காயல்பட்டினம் உள்ளூர் தொலைக்காட்சியான ‘முஹ்யித்தீன் டிவி’ மற்றும் www.muhieddeentv.com என்ற அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டது.
‘ஹாஃபிழ்கள் கூட்டமைப்பு’ அறிமுகம்:
நிறைவு நாள் நிகழ்ச்சியின்போது, காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஃபிழ்கள் நலனுக்கான செயல்திட்டங்களை உள்ளடக்கி - ‘ஹாஃபிழ்கள் கூட்டமைப்பு’ துவக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாநிலந்தழுவிய மாமறை குர்ஆன் மனனப் போட்டியை முன்னிட்டு, ஆங்காங்கே பல வண்ணங்களில் விளம்பரப் பதாகைகள் நிறுவப்பட்டிருந்தது.
படங்களில் உதவி:
வீனஸ் ஸ்டூடியோ
காயல்பட்டினம் |