இக்ராஃ கல்வி சங்கம் மூலம் கல்வி உதவி பெறும் காயல் பூர்வீக மாணவர், தனது மேற்படிப்பை ஐக்கிய ராஜ்ஜியம் (UNITED KINGDOM) நாட்டில் தொடர - தமிழக அரசால்
தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்த விபரம் வருமாறு:
காயல்பட்டினம் பெரிய நெசவு தெருவை பூர்விகமாக கொண்டவர்
முஹம்மத் ஹசன் யாசீன். எல்.கே. மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாவது வகுப்பு வரை படித்த இவர், தொழில் காரணமாக தந்தை சென்னை செல்ல,
தனது 6வது வகுப்பு முதல், தனது படிப்பை சென்னையில் தொடர்ந்து வருகிறார்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவருக்கு (இவரின் தந்தை பாதுகாப்பு பணியில் உள்ளார்), புது கல்லூரியில் இளங்கலை பட்டம் பயிலவும்,
அதனை தொடர்ந்து சென்னை அம்பேத்கர் கலைக்கல்லூரியில் முது கலை பட்டப்படிப்பு பயிலவும் இக்ராஃ கல்வி சங்கம் உதவி புரிந்துள்ளது.
இவரின் தந்தை முஹம்மத் சரீஃபிற்கு மூன்று குழந்தைகள். மூத்தவர் யாசீன். இரட்டையரான பெண் குழந்தைகள் தற்போது ஐந்தாம் வகுப்பு
சென்னையில் பயில்கின்றனர்.
சென்னை அம்பேத்கர் கலைக்கல்லூரியில் எம்.எஸ்.சி. கணிதம் பயின்று வரும் இந்த மாணவர் தற்போது இரண்டாம் ஆண்டின் இறுதி செமஸ்டர் படிப்பினை மேற்கொள்ள ஐக்கிய ராஜ்ஜியம்
நாட்டிற்கு ஜனவரி 11 அன்று புறப்பட்டு சென்றார். அங்குள்ள லண்டன் பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் ராயல் ஹாலோவே கல்லூரியில் 6 மாதம் பயின்று இவர் ஜூன் மாதம் நாடு திரும்புவார்.
மாணவர் யாசீன் பயில சென்றுள்ள கல்லூரி ...
இவருடன் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த 11 மாணவர்கள் - தமிழகத்தில் உள்ள அரசு கலை கல்லூரிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டு,
ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பயில சென்றுள்ளனர்.
டிசம்பர் 13, 2012 அன்று சென்னையில் உள்ள பிரிட்டிஷ் நாட்டு தூதரகமும், தமிழ்நாடு உயர்கல்வி மன்றமும் - தமிழக முதல்வர் ஜெயலலிதா
முன்னிலையில் ஒப்பந்தம் ஒன்றில்
கையெழுத்திட்டனர். அதன்படி - தமிழகத்தில் உள்ள 59 அரசு கலை கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் பயிலும் ஏழ்மையான குடும்பங்களை
சார்ந்த திறமையான மாணவர்கள், தங்களின் இறுதி ஆண்டு படிப்பினை ஐக்கிய ராஜ்ஜியம் நாட்டில் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என முடிவு
செய்யப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு இத்திட்டம் குறித்த முழு விபரத்தை வழங்கியது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் முன்னிலையில் 13.12.2012 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கற்கும் திறன் மற்றும் புரிந்து கொள்ளும் ஆற்றலை அதிகரிக்கவும், பேராசிரியர்களது கற்பிக்கும் திறனை மேம்படுத்திடவும் மாணவர்களையும் பேராசிரியர்களையும் புகழ் பெற்ற அயல்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி கல்வி
கற்கச் செய்யவும் ஒருங்கிணைந்த சிறப்புப் பயிற்சி மற்றும் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளவும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கும் தென்னிந்திய பிரிட்டீஷ் கவுன்சிலுக்கும் (South India British Council) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது போன்று அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரை அரசு செலவில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஒரு பருவம் பயில அனுப்புவது இந்தியாவிலேயே முதன்முறையாக செயல்படுத்தப்படும் முன்னோடி திட்டமாகும். உலகத்தரம் வாய்ந்த சிறந்த உயர்கல்வியினை அனைத்து மாணவ, மாணவியரும் குறிப்பாக அரசு கல்லூரிகளில் பயிலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவியரும் பெற வேண்டும் என்பது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் விருப்பமாகும்.
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் திறன் மேம்பாடு உடையவர்களாக திகழ வேண்டும் என்பது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வை திட்டத்தின் ஒரு அம்சமாகும். இதன் அடிப்படையில் மாணவர்களின் கற்கும் திறன் மற்றும் புரிந்து கொள்ளும் ஆற்றல், பேராசிரியர்களின் கற்பிக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டு மாணவர்களையும், பேராசிரியர்களையும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி கல்வி கற்கச் செய்யவும், ஒருங்கிணைந்த சிறப்புப் பயிற்சி மற்றும் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளவும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் மற்றும் மிகச்சிறந்த அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, 2013-ம் ஆண்டு முதல் 25 மாணவர்கள் மற்றும் 5 பேராசிரியர்கள் அயல்நாடு சென்று கல்வி கற்கவும் பயிற்சி மேற்கொள்ளவும் பிரிட்டீஷ் கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு, ஒவ்வொரு மாணவருக்கும் பேராசிரியருக்கும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் மூலம் 15 லட்சம் ரூபாய் அனுமதித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், முதல் வருடம் முதுகலை பயிலும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டாம் வருடத்தின் மூன்றாவது பருவத்தை அயல்நாட்டில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கும், அதே பருவத்திலேயே பேராசிரியர்களும் உரிய பயிற்சி மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பான உயர்கல்வியை வழங்குவதன் மூலம் மாணவர்களின் கல்வி அறிவு பெரிதும் மேம்பட்டு அவர்களது எதிர்கால வாழ்வு சிறப்பாக அமைய வழிவகை ஏற்படும்.
இதனடிப்படையில், தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களையும், பேராசிரியர்களையும் அயல்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி கல்வி கற்க செய்யவும், ஒருங்கிணைந்த சிறப்புப் பயிற்சி மற்றும் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளவும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கும் தென்னிந்திய பிரிட்டீஷ் கவுன்சிலுக்கும் இடையே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் முன்னிலையில் 13.12.2012 அன்று தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் சிந்தியா பாண்டியன் அவர்களும், தென்னிந்திய பிரிட்டீஷ் கவுன்சில் சார்பில் அதன் இயக்குநர் திரு. பால் செல்லர்ஸ் (Director, South India British Council – Thiru Paul Sellers) அவர்களும் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு நிதியமைச்சர், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், சென்னையிலுள்ள இங்கிலாந்து நாட்டின் துணைத் தூதரக அதிகாரி திரு.மைக் நித்தாவ்ரியானகிஸ் (British Deputy High Commissioner, Chennai – Thiru Mike Nithavrianakis), சென்னை பிரிட்டீஷ் கவுன்சில் டிவிஷன் அலுவலர்
திரு. எல். தனசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதல் பிரிவு மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் ஐக்கிய ராஜ்ஜியம் புறப்படுவதற்கு முன்னர் தமிழக முதல்வருடன்
...
துவக்கமாக 14 மாணவர்கள், 3 பேராசிரியர்கள் - கடந்த ஆகஸ்ட் மாதம், ஐக்கிய ராஜ்ஜியம் சென்றனர். அம்மாணவர்கள் தங்கள் படிப்பை
முடித்துக்கொண்டு இம்மாதம் இந்தியா திரும்புகின்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது 11 மாணவர்களும், 2 பேராசிரியர்களும் - ஐக்கிய ராஜ்ஜியம்
புறப்பட்டு சென்றுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு மாணவர் ஒவ்வொருவருக்கும் சுமார் 15 லட்சம் ரூபாய் செலவு செய்கிறது. ஓர் ஆண்டின் நிறைவில் இத்திட்டம்
குறித்து ஆய்வு செய்யப்பட்டு, மூன்றாண்டுகள் வரை இத்திட்டம் நீட்டிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.
ஜனவரி 11 அன்று ஐக்கிய ராஜ்ஜியம் புறப்பட்ட மாணவர்கள் குறித்து புதிய தலைமுறை கல்வி வாரப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள
செய்தி ... (ஜனவரி 20, 2014 பதிப்பு)
|