இறைத்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் ரபீஉல் அவ்வல் முதல் நாள் முதல் 12ஆம் நாள் வரை, காயல்பட்டினத்தின் பெரும்பாலான பள்ளிகளில் மவ்லித் மஜ்லிஸும், சில பள்ளிகளில் கூடுதலாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளும், மத்ரஸாக்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் ஸலவாத் மஜ்லிஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், நடப்பாண்டு மீலாதுன் நபி நாளை முன்னிட்டு, காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபில் இயங்கி வரும் ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவின் சார்பில் ஸலவாத் மஜ்லிஸ் இம்மாதம் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (நேற்று) காலை 09.00 மணியளவில், ஹாஜி ஒய்.எஸ்.முஹம்மத் ஃபாரூக் தலைமையில் நடைபெற்றது.
ஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத் ஃபைஸல் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் என்.எம்.இசட்.அஹ்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஹாஜி ‘கூபா’ என்.டி.ஷெய்கு மொகுதூம் வரவேற்றுப் பேசினார்.
ஹாமிதிய்யா முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். தொடர்ந்து, நபிகளார் மீது ஸலவாத் ஓதப்பட்டது.
ஹாமிதிய்யா பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ ‘ஸலவாத் ஓதுவதின் மகிமைகள்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
‘முத்துச்சுடர்’ ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் நன்றி கூற, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. |