எழுத்து மேடை மையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் இம்மாதம் 01ஆம் தேதி - காயல்பட்டினத்தையடுத்துள்ள திருச்செந்தூரில் நடைபெற்றது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
எழுத்து மேடை மையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் இம்மாதம் 01ஆம் தேதி - காயல்பட்டினத்தையடுத்துள்ள திருச்செந்தூரில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது, சமீபத்தில் மறைந்த இயற்கை அறிவியலாளர் கோ.நம்மாழ்வாரின் பணிகள், அவற்றின்தாக்கங்கள் நினைவு கூறப்பட்டது.
உண்மையான வேளாண்மை, இயற்கைக்கு திரும்பும் வாழ்க்கை முறை, மாற்று அரசியல், சிறுபான்மை சமூகம் தனது இருப்பையும் அரசியல் போராட்டத்தையும் கலை இலக்கியத்தின் வாயிலாக முன்னெடுத்தல், சூழலியல் காப்பு, இலக்கியம் என கலந்துரையாடல் பல தளங்களில் சுழன்றது.
கலந்துரையாடலானது இறுக்கமான நிகழ்முறைகள் எதுவுமின்றி மனம் திறந்தும், சுவையாகவும் நெகிழ்வாகவும் நடைபெற்றது.
சமூக அக்கறையுடன் - பல விதமான மக்களின் வாழ்க்கை முறையை உணர்த்தும் நல்ல ஆவணப்படங்களை (Documentary) சேகரிக்கவும், அவை குறித்து நகர பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டி திரையிடவும் எழுத்துமேடை மையத்தின் சார்பில் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
காயலின் பாரம்பரிய களறிச்சோறு, சுக்கு காஃபி, சுண்டல், அவித்த பனங்கிழங்கு என வயிறும் மனதும் நிறைய கலந்துரையாடல் நிறைவு பெற்றது.
'பூவுலகின் நண்பர்கள்’ குழுமத்தைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநரும் – ஒளிப்படக் கலைஞருமான ஆர்.ஆர்.சீனிவாசன், கவிஞரும் - பாடலாசிரியருமான குட்டி ரேவதி, கலைஞர் முருகன் மற்றும் குழுவினர் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், காயல்பட்டினம் எழுத்துமேடை மைய அங்கத்தினரும் - இயற்கை ஆர்வலர்களுமான சாளை பஷீர், எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன், எஸ்.கே.ஸாலிஹ், பொறியாளர் ஷேக், ரிழ்வான், பி.எம்.ஸர்ஜூன், எம்.ஏ.இப்றாஹீம் (48), எழுத்தாளர் கே.எஸ்.முஹம்மத் ஷுஅய்ப், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முகாம் நிறைவில், காயல்பட்டினம் நகருக்கு வருகை தந்த ‘பூவுலகின் நண்பர்கள்’ குழுவினர் - நகரின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப்
பார்வையிட்டு, விபரங்களை சேகரித்துச் சென்றனர்.
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள உதவி & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம். |