காயல்பட்டினம் மத்ரஸத்துன் நஸூஹிய்யா சார்பில், தமிழ்நாடு மாநிலந்தழுவிய மாமறை குர்ஆன் மனனப் போட்டி, கடந்த டிசம்பர் மாதம் 28, 29, 30 தேதிகளில் (சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில்) காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் நடைபெற்றது.
நிறைவு நாளான டிசம்பர் 30ஆம் நாள் இரவு நடைபெற்ற பரிசளிப்பு விழாவின்போது பல்வேறு மார்க்க அறிஞர்களும், சமுதாயப் பிரமுகர்களும் உரையாற்றினர்.
அந்த வரிசையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் பேசியதாவது:-
தமிழகத்தின் இஸ்லாத்தின் நுழைவு வாயில் என கூறப்படும் நமதூர் காயல்பட்டினத்தின் பூர்வீகப் பகுதியான இப்பள்ளிவாசல் வளாகத்தில் தமிழகம் தழுவிய திருக்குர்ஆன் ஹிப்ளு போட்டி நடத்துவதற்கு முதலில் என் பாராட்டை தெரிவித்துக் கொள் கிறேன். காயல் பகுதியின் வரலாற்றில் இந்நிகழ்ச்சி ஒரு மைல் கல் என கூறலாம்.
ஹாபிழ்களை உருவாக்குவோம்
திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்கள் நமதூரில் நிறைய பேர் இருக்கின்றார்கள். அவர்களை உற்சாகப்படுத்துவதோடு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு ஹாபிழ், ஒரு ஹாபிழாவை உருவாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் நண்பர் கிதர் முஹம்மது ஹல்லாஜி இந்நிகழ்ச்சியை மிகவும் சிரமப்பட்டு ஏற்பாடு செய்து வெற்றி கண்டுள்ளார். தாயின் பெயரில் மத்ரஸா நிறுவி அளப்பரிய சேவையாற்றி இருக்கின்றார்.
இயற்கை வேதம்
உலகிலும், நம் நாட்டிலும் நிலவி வரும் பல்வேறு குழப்பங்களுக்கு திருக்குர்ஆனே அருமருந்தாக இருந்து வருகின்றது. திருக்குர்ஆனின் உண்மைகளை, வாழ்வியல் தத்துவங்களை அனைத்து மக்களுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் உள்ளோம். திருக்குர்ஆன் இயற்கையோடு ஒன்றிணைந்து அருளப்பட்ட அற்புத வேதமாகும். அதில் `சப்அ சமாவாத்தி’ என்று ஏழு வானங்களை பற்றி அல்குர்ஆனில் ஏழுமுறை கூறப்பட்டுள்ளது. அதேபோல் `ஷஹ்ர்’ என்ற மாதத்தை பற்றி 12 முறையும், `யவ்மு’என்ற நாட்களை பற்றி 365 முறையும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.ஏழு வானங்கள், 12 மாதங்கள், 365 நாட்கள் என்பதுதானே நியதி.
உலகின் கணிதவியல் வல் லுநர்கள் ஆய்வில் குர்ஆனில் எண் 19-தை சிறப்பாக கணக்கிடுகின்றனர். முதல் வசனம் `இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதி ஹலக்’ என்பதையும், இறுதி வசனம் `இதா ஜாஅ நஸ்ருல்லாஹி வல்ஃபத்ஹ்’ என்ற வசனத்தையும் தனித்தனி எழுத்தாக கூட்டினால் 19 என்ற எண் வரும்.
அரபி மொழியின் சிறப்பு
திருக்குர்ஆன் அருளப்பட்ட அரபி மொழியும் சிறப்பிற்குரியதாகும். தாவூத் நபிக்கு ஜபூர் வேதம் யூனானி மொழியிலும், ஈஸா நபிக்கு பைபிழ் என்ற இஞ்சீல் வேதம், சுர்யானீ என்ற ஹிப்ரூ மொழியிலும், மூஸா நபி வேத மொழியும் இன்ன பல வேதங்கள் அருளப்பட்ட மொழிகள் இன்று நடைமுறையிலும் இல்லை - மக்கள் பயன்பாட்டிலும் இல்லை.
ஆனால் திருக்குர்ஆன் அருளப்பட்ட அரபி மொழியை இன்று உலகில் 160 மில்லியன் மக்கள் பேசுகின்றார்கள் என்பதை கேம்பிரிஜ் பல்கலைக் கழகம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. 23 நாடுகளில் தாய்மொழியாக அரபி மொழி விளங்குகின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகரிக்கப்பட்ட ஆறு மொழிகளில் ஒரு மொழியாக அரபி மொழி விளங்குகின்றது.
குர்ஆன் பல்கலைக்கழகம்
இப்படியாக திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது அனைத்தும் உண்மையே. இதை வாழ்க்கை நெறியாக பின்பற்றுவது நம் கடமையாகும். திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அனைத்து விசயங்களையும் தெளிவாக ஆய்வு செய்து நன்னெறியைப் பரப்பிடும் பணிகளை நாம் செய்ய வேண்டும். இதற்கு திருக்குர்ஆன் பல்கலைக் கழகத்தை தமிழகத்தில் - அதுவும் காயல் பகுதியில் உருவாக்க வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாகத் தெரிவிக்கின்றேன்.
இந்த முயற்சிக்கு அனைத்து ஜமாஅத்தினரும், உலமா பெருமக்களும், சமுதாயப் பெரியவர்களும் முழு ஒத்துழைப்பை வழங்கிடுங்கள். எங்களின் ஒத்துழைப்பு என்றும் இருக்கும். வெற்றி பெற்ற இளம் ஹாபிழ்களுக்கு வாழ்த்துக்கள்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார். |