வீட்டு உபயோகத்துக்கான மானிய விலை கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 9-ல் இருந்து 12 ஆக உயர்த்த, மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
டெல்லியில் பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், மானிய விலை சிலிண்டர்கள் பெறுவதற்கு ஆதார் அட்டையையோ அல்லது ஆதார் அட்டை எண்களையோ சமர்ப்பிக்க வேண்டும் என்ற திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
ஆதார் அட்டை தொடர்பாக குழு ஆய்வு நடத்தி, இது தொடர்பான முடிவு இறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இப்போது ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படுகின்றன. கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பரில் மானிய விலை கேஸ் சிலிண்டர்கள் ஓராண்டுக்கு 6 மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. பின்னர் 2013 ஜனவரியில் இந்த எண்ணிக்கை 9 ஆக அதிகரிக்கப்பட்டது.
காங்கிரஸ் கட்சியில் இருந்து தொடர்ந்து கோரிக்கை எழுந்த போதிலும், மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் யோசனை எதுவும் இல்லை என்று வீரப்ப மொய்லி தெரிவித்திருந்தார். பின்னர், கட்சி அளித்த நெருக்குதலை அடுத்து, சிலிண்டர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசிய கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, "நான் பிரதமரிடம் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். 9 சிலிண்டர்கள் போதாது. இந்தியப் பெண்களுக்கு 12 சிலிண்டர்கள் வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக, மானிய சிலிண்டர் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது என்றும், மத்திய அமைச்சரவையில் முறைப்படி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
தி இந்து |