தொழிற்சாலை ஆதரவாளர்களின் எதிர்ப்பையும் தாண்டி, ‘தந்தி டிவி’யில், டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்த நேரலை நிகழ்ச்சி இன்று 14.00 மணி முதல் 15.00 மணி வரை ஒளிபரப்பானது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்து ‘தந்தி டிவி’யின் ‘உள்ளது உள்ளபடி’ என்ற தலைப்பிலான நேரலை நிகழ்ச்சி இன்று 14.00 மணி முதல் 15.00 மணி வரை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஒளிபரப்புக் குழுவினர், இன்று, 13.30 மணியளவில், காயல்பட்டினம் புறவழிச் சாலையில், டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் தென்பகுதியில் முகாமிட்டபோது, திடீரென அங்கு திரண்டு வந்த சிலர் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை குறித்து எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்பக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.
உடனடியாக அங்கிருந்து காயல்பட்டினம் ஐசிஐசிஐ வங்கி முனையருகில் ஒளிபரப்புக் குழு வந்தபோது, பின்தொடர்ந்து வந்த ஆலை ஆதரவாளர்கள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜும்ஆ தொழுகையை நிறைவு செய்துவிட்டு, பள்ளிவாசல்களிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் இதனைக் கண்ணுற்று, ஒளிபரப்புக் குழுவினருக்கு ஆதரவாகப் பேசி, ஆலை ஆதரவாளர்களைக் கண்டித்து திருப்பியனுப்பினர். அதனைத் தொடர்ந்து, 14.00 மணிக்கு நேரலை நிகழ்ச்சி துவங்கியது.
இதில், ஆறுமுகநேரியில் உப்பு உற்பத்தி செய்வோரும், விவசாயிகளும், ஆறுமுகநேரி பேரூராட்சி உறுப்பினர் ஒருவரும் ஆலையின் மாசு காரணமாக தங்கள் தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எவ்வித பாதிப்புமின்றி தொழிலைச் செய்திட அரசு ஆவன செய்திட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதன் தொடர்ச்சியாக, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா, துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர், ஆலையின் மாசு குறித்தும், அதனால் காயல்பட்டினத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் விரிவாக கருத்து தெரிவித்தனர். KEPA தலைவர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா உடனிருந்தார்.
அவர்களைத் தொடர்ந்து, காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிலரும் ஆலையின் பாதிப்புகள் குறித்து கருத்துக்களைக் கூறினர். 15.00 மணிக்கு நேரலை நிகழ்ச்சி நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சி இன்றிரவு 00.30 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதனை www.thanthiTv.com என்ற இணைப்பில் சொடுக்கி காணலாம்.
இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள நிகழ்ச்சியின் ஒளிப்பதிவைக் காண கீழேயுள்ள படத்தின் மீது சொடுக்குக!
கள உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
M.T.ஹபீப் (நானா தானா)
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 23:11 / 31.01.2014] |