முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் இம்மாதம் 28ஆம் தேதியன்று ‘சிறை செல்லும் போராட்டம்’ நெல்லை, கோவை, திருச்சி, சென்னை ஆகிய நான்கு இடங்களில் நடத்தப்பட்டது.
நெல்லையில், வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் போராட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கேரள மாநிலத்திலிருந்தும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பெருந்திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலாண்மை குழு உறுப்பினர் எம்.எஸ்.சுலைமான் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்களான நெல்லை செய்யித் அலி, மதுரை முஹம்மத் அலி, தேனி பஷீர், விருதுநகர் அபூபக்கர், ராமநாதபுரம் சுலைமான், தூத்துக்குடி அப்பாஸ், குமரி அப்துல் ஸலீம், திருவனந்தபுரம் மண்டலம் ஷாநவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாண்மைக் குழு தலைவர் சம்சுல்லுஹா கண்டன உரையாற்றினார்.
‘சிறை செல்லும் போராட்டம்’ என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்நிகழ்ச்சி கண்டன ஆர்ப்பாட்டமாக நடத்தப்பட்டது. இப்போராட்டம் காரணமாக நெல்லை நகரம் ஸ்தம்பித்தது. போராட்டத்தை முன்னிட்டு நெல்லையில் பேருந்து போக்குவரத்து வழி மாற்றி விடப்பட்டிருந்தது. நெல்லையில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து டக்கம்மாள்புரம், கே.டி.சி. நகர், சங்கர் நகர் வழியாக சென்றது. மதுரையில் இருந்து நெல்லை வந்த பேருந்துகளும் இதே பாதையில் மாற்றி விடப்பட்டன.
இதுபோல நெல்லைக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் அனைத்தும் மாற்றுப் பாதையில் மாற்றி விடப்பட்டிருந்தது.
இப்போராட்டத்தில், காயல்பட்டினத்திலிருந்தும் திரளானோர் பங்குபெற்றமை குறிப்பிடத்தக்கது.
படங்கள்:
‘தேக்’ முஜீப் |