17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் - தமிழ்நாடு மாநில அளவிலான சீனியர் பிரிவு கால்பந்து சுற்றுப்போட்டியில் காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது. விபரம் வருமாறு:-
17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் - தமிழ்நாடு மாநில அளவிலான சீனியர் பிரிவு கால்பந்து சுற்றுப்போட்டி மதுரையில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும் பங்கேற்று விளையாடி வருகிறது.
இம்மாதம் 28ஆம் தேதி காலையில் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில், எல்.கே.பள்ளி அணி தஞ்சாவூர் டான் பாஸ்கோ மேனிலைப்பள்ளி அணியை எதிர்த்தாடியது. போட்டி சமனில் முடிவுற்றதையடுத்து, சமனுடைப்பு முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் எல்.கே.பள்ளி வென்று, காலிறுதிக்குள் நுழைந்தது.
இன்று (ஜனவரி 29) காலையில் நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் எல்.கே.பள்ளி அணியும், ஈரோடு ராஜேந்திரா மேனிலைப்பள்ளி அணியும் மோதின. இப்போட்டியும் சமனில் முடிவுற்றதையடுத்து, சமனுடைப்பில் 4-3 என்ற கோல் கணக்கில் எல்.கே.பள்ளி அணி வென்று, அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
இன்று மாலையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், எல்.கே.பள்ளி அணியும், காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா மேனிலைப்பள்ளி அணியும் மோதின. இதில், எல்.கே.பள்ளி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
நாளை (ஜனவரி 30) காலையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இவ்வணி, கடலூர் நோபல் அகடமி பள்ளி அணியுடன் களம் காணவுள்ளது.
எல்.கே.மேனிலைப்பள்ளியின் சீனியர் அணி, கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் வென்றதன் மூலம், மண்டல அளவில் விளையாட தகுதி பெற்றது.
அதனைத் தொடர்ந்து, அக்டோபர் மாதம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற மண்டல அளவிலான கால்பந்துப் போட்டியில் வென்றதன் மூலம், மாநில அளவிலான போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இறுதிப்போட்டிக்குள் நுழைகிறது. 2012ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் தோல்வியுற்றது.
2013ஆம் ஆண்டில் இறுதிப்போட்டியில் வென்று, அதன் தொடர்ச்சியாக டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சுப்ரடோ கோப்பை கால்பந்துப் போட்டியிலும் பங்கேற்று வந்தது. நடப்பாண்டு இறுதிப்போட்டியில் நாளை விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்:
ஆசிரியர் S.B.B.புகாரீ |