இந்தியாவின் 65ஆவது குடியரசு நாள் இம்மாதம் 26ஆம் தேதி நாடெங்கும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, காயல்பட்டினம் மகாத்மா காந்தி ஞாபகார்த்த வளைவு அருகில், வழமை போல இவ்வாண்டும், குடியரசு தினத்தன்று விழா நடத்தப்பட்டது.
துவக்கமாக, அன்று காலை 07.00 மணியளவில், மிதிவண்டி மெதுவோட்டப் போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 09.00 மணியளவில் மேடை நிகழ்ச்சி துவங்கியது. ஐக்கிய விளையாட்டு சங்க துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர் தேசிய கொடியேற்றி வைத்தார்.
நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்த இவ்விழாவில், துவக்கமாக கராத்தே பயிற்சியாளர் ஏ.இர்ஃபான் ஒருங்கிணைப்பில், கராத்தே வீரரின் மீது மோட்டார் சைக்கிளை ஏற்றிச் செல்லல், தலை மற்றும் உடலின் பல பாகங்களில் அடுக்கு ஓடுகளை உடைத்தல் உள்ளிட்ட கராத்தே சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, 7 வயது சிறுமி எம்.எஸ்.பிரஷா, “நாம் பிறந்த மண் - இந்தியா” என்ற தலைப்பில் எழுச்சி உரையாற்றினார்.
நிறைவில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மிதிவண்டி மெதுவோட்டப் போட்டியில் முதல் மூன்றிடங்களை வென்ற வீரர்களுக்கு முறையே ரூபாய் 1000, 750, 500 பணப்பரிசுடன், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதுபோல, கராத்தே சாகச நிகழ்ச்சியை நடத்திக் காண்பித்த வீரர்களுக்கும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், நகரின் சர்வ சமய பெரியோர், பொதுநல அமைப்பினர், நகரப் பிரமுகர்கள், வணிகர்கள், வாகன ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், மாணவ-மாணவியர் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிகளை ஜெ.ஏ.லரீஃப் நெறிப்படுத்தினார். விழா ஏற்பாடுகளை, சமூக ஆர்வலர் ஆர்.எஸ்.கோபால் தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
M.ஜஹாங்கீர்
ஷேக் முஹம்மத்
A.K.இம்ரான்
மற்றும்
ஹிஜாஸ் மைந்தன்
(செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்)
அனைத்து சமுதாய மக்கள் சார்பில் கடந்தாண்டு நடத்தப்பட்ட குடியரசு நாள் விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |