பிறையை அடிப்படையாக கொண்ட இஸ்லாமிய மாதங்கள் துவக்கப்படுவதில், முஸ்லிம்கள் மத்தியில் பல கருத்து வேறுபாடுகள்,
உலகின் பல்வேறு நாடுகளில், நிலவுகிறது. ஒத்த கருத்தில் முஸ்லிம் சமுதாயத்தைக் கொண்டு வர ஒரு சில முயற்சிகள் - மாநாடுகள், கருத்தரங்குகள் மூலமாக,
அவ்வப்போது செய்யப்பட்டு வந்துள்ளன.
இது ஒருபுறமிருக்க, பிறை குறித்த விவாதத்தில் - அறிவியல் ரீதியான சில அடிப்படை விஷயங்களில் தெளிவற்ற நிலை பரவலாக நிலவுகிறது. அதில் ஒன்று - அமாவாசை (New Moon / Conjunction) அன்று தேயும் பிறையையோ (Waning Crescent), வளரும் பிறையையோ (Waxing Crescent) காண இயலாது - என்பதாகும். விஞ்ஞானப்பூர்வமாக இது முழுமையான தகவல் அல்ல.
அமாவாசை என்பது - அதாவது சூரியனும், சந்திரனும் ஒரே கோட்டில் வருவது - ஒரு நாளின் எந்த நேரத்திலும் நிகழலாம்.
உதாரணமாக கடந்த ஆண்டு, டிசம்பர் 03 அன்று அமாவாசை - நள்ளிரவு (இங்கிலாந்து நேரப்படி) 00:22 மணிக்கு நிகழ்ந்தது. மே 10 அன்று
அமாவாசை - நள்ளிரவு (இங்கிலாந்து நேரப்படி) 00:29 மணிக்கு நடந்தது. அக்டோபர் 05 அன்று அமாவாசை - நள்ளிரவு (இங்கிலாந்து நேரப்படி) 00:35 மணிக்கு நிகழ்ந்தது.
மேலும் - கடந்த ஆண்டு, செப்டம்பர் 05 அன்று அமாவாசை - மதியம் (இங்கிலாந்து நேரப்படி) 11:36 மணிக்கு நடந்தது. நவம்பர் 03 அன்று
அமாவாசை - மதியம் (இங்கிலாந்து நேரப்படி) 12:50 மணிக்கு நிகழ்ந்தது.
அது போல - கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 06 அன்று அமாவாசை - இரவு (இங்கிலாந்து நேரப்படி) 9:51 மணிக்கு நிகழ்ந்தது.
காலை, மதியம், இரவு என ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அமாவாசை நிகழ்வது இல்லை என்பதை இதன்மூலம் அறியலாம். எனவே - அமாவாசை நிகழும் நேரத்தைப் பொருத்து, சில மாதங்களில், அமாவாசையன்று, அதிகாலையில் தேயும் பிறையை (Waning Crescent) காணலாம். அது போல சில மாதங்களில், அமாவாசையன்று, மாலையில் வளரும் பிறையையும் (Waxing Crescent) காணலாம்.
உதாரணமாக, மே 10, 2013 அன்று அமாவாசை - நள்ளிரவு (இங்கிலாந்து நேரப்படி) 00:29 மணிக்கு நடந்தது. அன்று மாலை - அமெரிக்காவின்
கலிபோர்னியா மாநிலத்தில் வளரும் பிறை (Waxing Crescent) தென்பட்டது.
அது போல, அமாவாசை நிகழும் நேரத்தை பொருத்து, அமாவாசை அன்றும், தேயும் பிறையையும் (Waning Crescent), அதிகாலை சூரியன்
உதயத்திற்கு முன்னர் காணலாம்.
ஆகஸ்ட் 06, 2013 அன்று அமாவாசை - இரவு (இங்கிலாந்து நேரப்படி) 09:51 மணிக்கு நடந்தது. அன்று அதிகாலை தென் கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் - தேயும் பிறையை (Waning Crescent) காண வாய்ப்பிருந்தது. அன்று, மலேசியா நாட்டில் - தேயும் பிறை காணப்பட்டது.
அமாவாசை அன்று பிறையை காணக்கூடிய சில மாதங்களில் - ஜனவரி 30, 2014 தினமும் ஒன்றாகும்.
நாளை (ஜனவரி 30), இங்கிலாந்து நேரப்படி இரவு 09:38 மணியளவில், அமாவாசை நிகழ்கிறது. நாளை அதிகாலை, சூரியன் உதயத்திற்கு முன்னர், இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் உட்பட தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் - தேயும் பிறையைக் காணலாம்.
காயல்பட்டினத்தில் நாளை அதிகாலை சூரியன் உதயம் ஆகும் நேரம் அதிகாலை 06:38 மணி. கிழக்கு திசையில், சந்திரன் உதயம் ஆகும் நேரம் அதிகாலை 05:45 மணி.
காயல்பட்டினத்திலோ அல்லது தேயும் பிறையை நாளை காண வாய்ப்புள்ள பிற பகுதிகளிலோ (இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங்) தேயும் பிறையைக் நாளை கண்டால் - புகைப்படத்துடன், அவ்விபரங்களை news@kayalpatnam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தர வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். |