காயல்பட்டினத்தில், கழிவு நீர் கடலில் கலக்கும் ஓடையருகில், துணை வட்டாட்சியர் உத்தரவிட்ட பிறகும் அகற்றப்படாதிருந்த - அங்குள்ள குடிசை தற்போது அகற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் கடையக்குடி பகுதியில், கழிவுநீர் கடலில் கலக்கும் பொது ஓடையை சில கூலியாட்கள் சட்ட விரோதமாக அடைத்து வைத்து, நாள் கூலி அடிப்படையில் அங்கு பணியாற்றி வருவதாக அறிய முடிகிறது. அவர்கள் பணியிலிருக்கும்போது ஓய்வெடுப்பதற்காக, ஓடையையொட்டி தென்கிழக்குப் பகுதியில் குடிசை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து கிடைக்கப்பெற்ற தகவலின் படி அங்கு வந்த துணை வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், குடிசையை உடனடியாக அகற்றி அப்புறப்படுத்திவிட்டு தகவல் தெரிவிக்குமாறு கிராம நிர்வாக அலுவலகத்திற்கு உத்தரவிட்டதோடு, அக்குடிசையில் குவித்து வைக்கப்பட்டிருந்த சாக்குப் பைகளையும் கைப்பற்றி எடுத்துச் சென்றார்.
அடுத்த சில நாட்களில் குடிசை அகற்றப்பட்டுவிட்டதாக துணை வட்டாட்சியருக்கு, காயல்பட்டினம் கிராம நிர்வாக அலுவலகத்திலிருந்து தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இம்மாதம் 22ஆம் நாள் காலை 08.00 மணியளவில் ஓடையருகே சென்று பார்த்தபோது, குடிசை அகற்றப்படாமல் அப்படியே இருந்தது. அத்துடன், கழிவு நீரோடையும் மணல் மூடைகளைக் கொண்டு வழமை போல அடைத்து வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து, மீண்டும் துணை வட்டாட்சியருக்கு தொலைபேசி வழியே தகவல் தெரிவிக்கப்பட்டது. நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, இம்மாதம் 30ஆம் தேதி காலையில் கழிவு நீரோடை அருகில் சென்று பார்த்தபோது, அக்குடிசை அகற்றப்பட்டிருந்தது. எனினும், ஓடை அடைத்தே வைக்கப்பட்டிருந்தது. பணியாட்கள் சிலரும் அங்கிருந்த முட்புதருக்கடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர்.
இவ்வாறு, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கள உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் |