மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பின், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், அதிமுக அணியில் கூட்டணி தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன், தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி மற்றும்
மாநிலச் செயலர் தா.பாண்டியன் ஆகியோரைக் கொண்ட குழு, அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவை இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில் நடந்த இந்தச் சந்திப்பு நடந்தது.
இதைத் தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதேவேளையில், தொகுதி மற்றும் போட்டியிடும் விவரங்கள் அனைத்தும் பின்னர் பின்னர் தெரிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அமைதி, வளம், முன்னேற்றம் என்பதே அதிமுக கூட்டணியின் தேர்தல் முழக்கம் என்று முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக, நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் முதல்வரைச் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வடசென்னை, நாகப்பட்டினம் மற்றும் தென்காசி ஆகிய 3 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக ஒதுக்கியது. அதில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட பி.லிங்கம் வெற்றி பெற்றார்.
அதேபோல் மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோவை ஆகிய 3 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. இதில் கோவையில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
தி இந்து
|