மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவே தேமுதிக தொண்டர்கள் விரும்புவதாக, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மாநாட்டில் தெரிவித்தார்.
தேமுதிக மாநாட்டில் தொண்டர்களிடம் கருத்து கேட்டு, கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று கூறி வந்த நிலையில், விஜயகாந்த் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
அதேவேளையில், கூட்டணி விஷயத்தில் கட்சித் தலைமையின் முடிவை தொண்டர்கள் ஏற்பார்கள் என்று கூறியிருப்பது, மக்களவைத் தேர்தலில் தேமுதிக கூட்டணி தொடர்பான ஊகங்களை நீட்டித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பேசியது:
"விழுப்புரத்தில் கடல் இல்லையே என்று நினைத்தேன். கடல் இருக்கிறது என்பதை இங்கே கூடியிருக்கும் மக்கள் கடல் நிரூபித்திருக்கிறது. இங்கே கூடியிருப்பவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதில் மகிழ்ச்சி.
தற்போது காவல் துறையின் நிலையைக் கண்டு, இதுவரை திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்ததற்கு வெட்கப்படுகிறேன். இனி, அது நிகழாது.
இந்தியா முழுவதும் ஊழல் நிறைந்திருக்கிறது. அரசு இலவசங்களை வழங்குகிறது. ஆனால், அவற்றை வினியோகிப்பதில் லஞ்சம் மிகுதியாக இருக்கிறது.
இளைஞர்களைக் கெடுப்பதற்காகவே அரசு மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக் கடைகளை திறந்து வைத்திருக்கிறது. டாஸ்மாக்கில் இலக்கு நிர்ணயிக்கும் அரசு, விவசாயத்திலும் இலக்கை நிர்ணயிக்கலாமே?
தமிழக முதல்வர் ஜெயலலிதா, விதி எண் 110-ன் கீழ் அறிக்கை வாசித்தால், அதை எதிர்த்துப் பேசக் கூடாது என்பதால், அதையே கடைப்பிடிக்கிறார்.
இலவசமாக தண்ணீர் தர வேண்டிய முதல்வரே, தண்ணீரை 10 ரூபாய்க்கு விற்கிறார். மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது.
கூடங்குளம் மக்களை மாநில அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. அந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது?
சாதி, மதத்தை வைத்துக்கொண்டோ, இலங்கைத் தமிழரின் கண்ணீரை வைத்துக்கொண்டோ அரசியல் செய்ய விரும்பவில்லை.
டெல்லி செங்கோட்டைக்குச் சென்றாலும் சரி, சென்னை ஜார்ஜ் கோட்டைக்குச் சென்றாலும் சரி, இனி ஆளப்போவது தேமுதிகதான்.
தமிழகத்தில் மின்வெட்டு உள்ளிட்ட எத்தனையோ குறைகள் இருக்கிறது. அவற்றை எல்லாம் சரிசெய்ய முடியவில்லை. இவர் (ஜெயலலிதா) பிரதமராகி என்ன செய்யப் போகிறார்?
என் மனைவி சொன்னதுபோலவே எதிரிகளை மன்னித்தாலும் மன்னிப்பேன்; ஆனால், துரோகிகளை மன்னிக்க மாட்டேன்.
முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி அதிகாரிகளையும், அமைச்சர்களையும் மாற்றி வருவதால், மக்களுக்குத்தான் பிரச்சினை.
நம் மாநிலத்தில் இப்போது சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. உள்ளதைச் சொன்னால், அவதூறு வழக்கு போடுகிறார்கள்.
அதிமுக, திமுகவை மக்கள் புறக்கணிக்கத் தொடங்கிவிட்டார்கள். 2016-ல் தேமுதிக ஆட்சி அமைப்பது உறுதி.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்கலாமா வேண்டாமே என்று உங்களைப் பார்த்துக் கேட்கிறேன். சொல்லுங்கள். கூட்டணி வேண்டாம் என்று தொண்டர்கள் சொல்கிறார்கள். அதுதான் தேமுதிகவின் முடிவு.
ஆனால், தேர்தல் கூட்டணி விவகாரத்தில் தலைவர் வேறு முடிவு எடுத்தால், அதனை தொண்டர்கள் ஏற்பார்கள்" என்றார் விஜயகாந்த்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பேச்சின்போது, தமிழக அரசையும், முதல்வர் ஜெயலலிதாவையும் பல்வேறு விவகாரங்களில் கடுமையாக சாடினார். அதேவேளையில், திமுக குறித்து எதுவும் பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக, தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு துரோகம் செய்ததால்தான், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அண்ணா விருது வழங்கப்பட்டதாக, தேமுதிக மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். 2ஜி ஊழல் விவகாரத்தில் திமுகவை குற்றம்சாட்டி அவர் பேசினார்.
நன்றி:
‘தி இந்து’ தமிழ் நாளிதழ் |