திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி யாரைக் கைகாட்டுகிறாரோ அவர்தான் இந்தியாவின் பிரதமராவார் என, காயல்பட்டினத்தில் நடைபெற்ற திமுக மாநாடு விளக்கப் பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா எம்.பி. பேசியுள்ளார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகர தி.மு.க. இளைஞர் அணி, ஒன்றிய இளைஞர் அணி சார்பில், திருச்சியில் நடைபெறவிருக்கின்ற மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெற்றது. தி.மு.க. நகர இளைஞர் அணி அமைப்பாளர் பி.எம்.அப்துல்காதர் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் ஒன்றிய அமைப்பாளர் பீட்டர் பொன்சிங் வரவேற்றுப் பேசினார்.
இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட - திமுக கொள்கை பரப்பு மாநில செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது:-
மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதும் முதன் முதலில் கலைஞர் பட்டணமாம் காயல்பட்டினத்துக்கு வந்துள்ளேன். சட்டசபையில் தி.மு.க.வுக்கு 23 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கூட்டணி கட்சிகளான புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சிகளையும் சேர்த்து மொத்தம் 26 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளேன். இது எப்படி நடந்தது என்று எல்லோரும் வியக்கின்றனர். அதுதான் கலைஞர் கருணாநிதியின் சாணக்கியத்தனம். மு.க.ஸ்டாலினின் சாதுர்யம்.
எனது வேட்பு மனுவை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா ஆகியோர் முன்மொழிந்து வாழ்த்தினர்.
ஒருவேளை மாநிலங்களை உறுப்பினர் தேர்தலுக்கு போட்டி ஏற்பட்டு இருந்தாலும், தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். அதற்கான பணிகள் நடந்து கொண்டுதான் இருந்தன. நான் எம்.பி. என்று கூறிக் கொள்வதை விட கலைஞரின் அன்பு தம்பி என்பதையே பெரிதாக நினைக்கிறேன்.
முன்பு பா.ஜனதா ஆட்சியின்போது, கூட்டணி கட்சியாக தி.மு.க. இருந்தது. அப்போது, மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரியாக முரளி மனோகர் ஜோஷி இருந்தார். இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் ஜோதிடத்தை ஒரு பாடமாகக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். நான் அதை எதிர்த்து பேசினேன்.
பா.ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அது நடக்காது. கலைஞர் யாரை கைகாட்டுகிறாரோ, அவர்தான் பிரதமர் ஆக முடியும். மத்தியில் மதசார்பற்ற அரசுதான் அமையும்.
தமிழகத்தில் பஸ் கட்டணம், பால் விலை, மின்சார கட்டணம் உயர்ந்ததால், விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுபற்றி சட்டசபையில் எதிர்க்கட்சிகளைப் பேச அனுமதிப்பது இல்லை. மக்கள் பிரச்சினைகளுக்காக பாராளுமன்றத்தில் தி.மு.க. குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். அதற்கு நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. பேசினார். கூட்டத்தில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிகுப்பம் புகழேந்தி, முன்னாள் எம்.பி. ஏ.டி.கே.ஜெயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் புதுக்கோட்டை ஆர்.செல்வம், மருத்துவ அணி நிர்வாகி டாக்டர் வெற்றிவேல், காயல்பட்டினம் பாலப்பா, உடன்குடி தனபால் உள்பட பலர் பேசினர்.
நகர தி.மு.க. செயலாளர் மு.த.ஜெய்னுதீன், முன்னாள் நகர செயலாளர் எம்.என். சொளுக்கு, கவுன்சிலர் ஓடை ஆர்.சுகு, மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், கே.எஸ்.ஏ.முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பில்லா ஜெகன், விவசாய அணி துணை அமைப்பாளர் டி.டி.சி.ராஜேந்திரன், வக்கீல் கிருபாகரன், வேல்ராமகிருஷ்ணன், மேலாத்தூர் சதீஸ்குமார், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம், பஞ்சாயத்து தலைவர்கள் ஜனகர், கானம் செந்தமிழ் சேகர், தென்திருப்பேரை ராமஜெயம், கொம்மடிக்கோட்டை காசியானந்தம் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர். ஒன்றிய இளைஞர் அணி நிர்வாகி என்.வெங்கடேஷ் நன்றி கூறினார்.
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருச்சி சிவா எம்.பி.க்கு கூட்டத்தின்போது கட்சியின் சார்பில் மலர்மாலை அணிவித்து பாராட்டப்பட்டது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர் |