நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே கூட்டணி உடன்பாடு திங்கள்கிழமை ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவும் மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் கூட்டாக இதை அறிவித்தனர்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக இந்திய கம்யூனிஸ்ட் இணைந்து போட்டியிடுவது குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை உடன்பாடு எட்டப்பட்டது.
இந்நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரகாஷ் காரத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி. ஆகியோர் திங்கள்கிழமை (பிப்ரவரி 3) மதியம் 2.40 மணிக்கு போயஸ் கார்டனுக்கு வந்தனர்.
சட்டப்பேரவைக் கூட்டம் முடிந்து முதல்வர் ஜெயலிலதா 2.50 மணியளவில் அங்கு வந்தார். மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் உடனிருந்தனர். பிற்பகல் 3.10 மணிக்கு பேச்சுவார்த்தை முடிந்தது.
பின்னர் முதல்வர் ஜெயலலிதா, மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். கூட்டணி உடன்பாடு ஏற்பட்டதற்கான அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். ‘‘வரும் நாடாளு மன்றத் தேர்தலில் அதிமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று அவர் கூறினார்.
தொடர்ந்து நிருபர்களிடம் பிரகாஷ் காரத் கூறியதாவது:
தமிழ்நாட்டில் ஏற்கெனவே சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இணைந்து செயல்பட்டு வெற்றி கண்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இணைந்து செயல்பட உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.
தேசிய அளவில் அரசியல் மாற்றத்தை உண்டாக்கும் வகை யில் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். அந்த வகையில், அதிமுகவைப் போன்று தேசிய அளவில் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.
‘இந்த கூட்டணி வெற்றி பெற்றால் யார் பிரதமர்?’ என்று நிருபர்கள் கேட்க.. உடனடியாக குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, ‘‘நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது, வெற்றி பெறுவது குறித்துதான் இப்போது பேச்சுவார்த்தை நடத்துகிறோம். ஆலோசனை செய்கிறோம். பிரதமர் யார் என்பது குறித்து இப்போது பேசவில்லை. பேசவும் மாட்டோம். பிரதமர் யார் என்பதை தேர்தலுக்குப் பிறகு சேர்ந்து முடிவு செய்வோம்’’ என்றார்.
புகைப்படங்கள் மற்றும் தகவல்:
தி இந்து |