இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஒருங்கிணைப்பில், பிப்ரவரி 18ஆம் நாளன்று நடத்தப்படவுள்ள ரயில் மறியல் போராட்டம் குறித்து, நகரின் அனைத்து அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினருடன் - திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரயில் மறியல் போராட்டம்:
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் நடைமேடையை விரிவாக்கவும், உயர்த்தவும், மேற்கூரையமைக்கவும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு, பணிகளும் துவக்கப்பட்ட நிலையில் அரைகுறையாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனைக் கண்டித்து, வரும் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில், ரயில் மறியல் போராட்டம் நடத்த, ஜனவரி 07ஆம் தேதி நடைபெற்ற நகரின் சர்வகட்சியினர் – பொதுநல அமைப்பினர் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
விளக்கப் பொதுக்கூட்டம்:
அதன் தொடர்ச்சியாக, ‘ரயில் மறியல் போராட்டம் ஏன், எதற்கு?’ எனும் தலைப்பில், விளக்கப் பொதுக்கூட்டத்தை, வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி இரவு 07.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்திடுவதென, கடந்த ஜனவரி மாதம் 26ஆம் நாளன்று - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகத்தில் மீண்டும் நடைபெற்ற சர்வ கட்சியினர் பொதுநல அமைப்பினர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.
வட்டாட்சியருடன் பேச்சுவார்த்தை:
இந்நிலையில், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, திருச்செந்தூர் வட்டாட்சியர் அழைப்பு விடுத்ததன் அடிப்படையில், இன்று மதியம் 03.00 மணியளவில், வட்டாட்சியர் நல்லசிவன் தலைமையில், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தென்னக ரெயில்வே திருநெல்வேலி மண்டல வணிக மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன், காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரயில் மறியல் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், கட்சியின் காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், மாணவரணி தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை துணைச் செயலாளர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் காயல் முத்துவாப்பா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், பாரதீய ஜனதா கட்சியின் நகர நிர்வாகிகளான மகேஷ், பண்டாரம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியின் நகர தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், சமத்துவ மக்கள் கட்சியின் நகர தலைவர் அப்துல் அஜீஸ் உட்பட, மேற்படி கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் நடைமேடையை விரிவாக்கவும், உயர்த்தவும், மேற்கூரையமைக்கவும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு, பணிகளும் துவக்கப்பட்ட நிலையில் அரைகுறையாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இக்குறையை நீக்கித் தர தொடர்வண்டித் துறையின் சென்னை பொது மேலாளர், மதுரை மண்டல மேலாளர் ஆகியோருக்கு பலமுறை கடிதங்கள் மூலமும், நேரிலும் கோரிக்கை முன்வைக்கப்பட்டும் செவிசாய்க்கப்படவில்லை என்றும், இவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக 2012ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் நாளன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டும், இன்றளவும் எந்த நடவடிக்கையுமில்லை என்றும், வேறு வழியின்றியே ரயில் மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளதாகவும், அனைத்து அரசியல் கட்சியினர் - பொதுநல அமைப்பினர் வட்டாட்சியரிடம் கூறினர்.
தொடர்ந்து பேசிய - தென்னக ரெயில்வே திருநெல்வேலி மண்டல வணிக மேலாளர் கிருஷ்ணமூர்த்தி, திருச்சியிலுள்ள வின்சென்ட் நிறுவனத்தினர் - காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய பராமரிப்புப் பணிகளுக்காக ஒப்பந்தப்புள்ளி பெற்று பணியைத் துவக்கினர் என்றும், 6 மாதங்களுக்கு முன் - பணம் முழுமையாக செலுத்தப்படாததைக் காரணங்காட்டி Foreclosure முறையில் அவர்கள் ஒப்பந்தத்தை முற்கூட்டியே முடித்துக்கொண்டதாகவும், அதனாலேயே பணிகள் இடைநின்றதாகவும் கூறினார்.
ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்து 6 மாதங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட பிறகும், விஷயத்தில் இன்றளவும் அது விஷயத்தில் அக்கறை செலுத்தாதது ஏன் என அவரிடம் கூட்டத்தினர் கேள்வியெழுப்பினர்.
நடப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட குறைகளை மேலதிகாரிகள் வட்டத்திற்கு முறைப்படி எடுத்துச் சென்று, காயல்பட்டினம் ரெயில் நிலையப் பணிகளை விரைந்து முடிக்க ஆவன செய்யப்படும் என்றும், எனவே ரயில் மறியல் போராட்டத்தைத் தவிர்க்குமாறும் வட்டாட்சியர் கேட்டுக்கொண்டார்.
ஆரோக்கியமான அனைத்து வழிகளிலும் முயற்சித்தும் கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாததாலேயே இப்போராட்டத்தை அறிவிக்க வேண்டியதாயிற்று என்றும், தேதி குறிப்பிடப்பட்டு - தொடர்வண்டித் துறையின் சார்பில் நம்பிக்கையூட்டும் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக தரப்பட்டால் மறுபரிசீலனை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூட்டத்தினர் தெரிவித்தனர்.
பிப். 11 அன்று மீண்டும் கூட்டம்:
இம்மாதம் 11ஆம் தேதி இதே அலுவலகத்தில் மறு கூட்டம் நடத்தப்படும் என்றும், அக்கூட்டத்தில் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறும், அனைவரும் கோரியது போல உறுதியான அறிவிப்பை தொடர்வண்டித் துறை அதிகாரிகள் அக்கூட்டத்தில் எழுத்துப்பூர்வமாக வழங்கிட ஆவன செய்வதாகவும் வட்டாட்சியர் தெரிவித்தார்.
இத்தகவலை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
[செய்தி திருத்தப்பட்டது @ 08:26 / 06.02.2014] |