வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப் பெட்டிகள் பாதுகாப்பிடமாகவும், வாக்கு எண்ணும் மையமாகவும், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி பயன்படுத்தப்படவுள்ளது.
இக்கல்லூரியில் மின்னணு வாக்குப் பெட்டிகளைப் பாதுகாப்பாக வைக்கும் இடம் மற்றும் வாக்கு எண்ணும் இடங்களை, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா.துரை ஆகியோர் இன்று (ஜனவரி 05) ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திக்குளம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு செய்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கும் அறைகள் மற்றும் வாக்கு எண்ணும் அறைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணும் இடங்களுக்கு வருவதற்கான பாதைகள் மற்றும் இருக்கைகள் ஏற்பாடு செய்தல் போன்ற பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மா.துரை ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
இவ்வாய்வின்போது, தூத்துக்குடி கோட்டாட்சியர் நாகஜோதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், வட்டாட்சியர் ஆழ்வார், தேர்தல் வட்டாட்சியர் நெல்லைநாயகம், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் சி.குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். |