பிப்ரவரி 04 அன்று உலக புற்றுநோய் நாளாகும். இதனை முன்னிட்டு, உலகின் பல்வேறு பகுதிகளில் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிவாரணத்திற்காக பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு.
அதனடிப்படையில், காயல்பட்டினத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணித்த மற்றும் சிகிச்சை பெற்று வருவோருக்காக, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில், இன்று (பிப்ரவரி 04) 17.00 மணியளவில் ‘துஆ மஜ்லிஸ்’ - பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி தலைவர் நஹ்வீ இ.எஸ்.புகாரீ ஆலிம் தலைமை தாங்கினார். மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத், ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு முதன்மை ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மவ்லவீ ஏ.எல்.ஜஃபர் ஸாதிக் மன்பஈ சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, காயல்பட்டினத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணித்த மற்றும் சிகிச்சை பெற்று வருவோருக்காக அரபி மற்றும் தமிழ் மொழிகளில் துஆ பிரார்த்தனை செய்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் செய்திருந்தார். |