தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட 10 ஆயிரம் மாணவ-மாணவியருக்கு ஆண்டு தோறும் 24 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக்குறிப்பு:-
தூத்துக்குடி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைகளின் மூலம் 10 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.24 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி உதவித்தொகை பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தைக் கருத்திற்கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வங்கியில் அவர்களது பெயர்களில் கணக்கு துவங்கப்பட்டு தொகை வரவு வைக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் தேவையற்ற அலைச்சல் தவிர்க்கப்படுவதோடு, காலதாமதங்களும் தவிர்க்கப்படுகின்றது.
கிராமப்புறப் பகுதிகளில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்தில் மாவட்டத்திலுள்ள 37 விடுதிகளில் 7 விடுதிகள் வாடகை கட்டிடத்தில் இயங்கியவற்றை, அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன விடுதிகள் 4.62 கோடி ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்டு வருகின்றது. இதனால் வாடகைக் கட்டிடத்தில் எந்த விடுதியும் இயங்கவில்லை என்ற அரசின் நோக்கம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கருக்கு வருடந்தோறும் 4 செட் சீருடைகள், உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கு வாரம் 5 முட்டைகள், புதன்கிழமைதோறும் ஆட்டு இறைச்சி, கோழிக்கறி, சுகாதாரம் பேணிக் காக்கின்ற வகையில் குளியல் சோப், சலவை சோப், தேங்காய் எண்ணெய், பாய் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
பொது அறிவை வளர்க்கின்ற வகையில் சிறிய நூலகம் அமைக்கப்பட்டு அதில் தினசரி தமிழ், ஆங்கில நாளிதழ் வாங்கப்பட்டு வருகின்றது.
மேலும் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வாங்கப்பட்டு, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. உடல் நலனைப் பாதுகாக்கின்ற வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.
அரசின் சீரிய பல நல்ல திட்டங்களினால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பதோடு அவர்களின் குடும்பங்களும் பொருளாதார மேம்பாடு அடைந்து வருகின்றன.
இவ்வாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். |