பாலியல் வன்முறைக்குப் பலியான சிறுமி புனிதாவின் வழக்கை விரைந்து முடிக்க எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் காதர் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்தியாவில் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருவதும், கடந்த வருடம் நிருபயா (புனைப் பெயர்) என்ற பெண் டெல்லியில் கற்பழித்து கொலை செய்யப்பட்டதும், அது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதும் அனைவரும் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தின் விளைவாக இவ்வழக்கு 4 மாதத்தில் விசாரிக்கப்பட்டு உடனடியாக குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.
அதே காலக்கட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள கிளாக்குளத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுமி புனிதாவின் வழக்கு மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டும் அரசு தரப்பில் வழக்கறிஞர் நியமனம் செய்யாதது மிகவும் வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது.
எனவே உடனடியாக அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு சிறுமி புனிதாவின் வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருமாறு மாவட்ட நிர்வாகத்தை பணிவன்புடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இதற்குரிய நடவடிக்கை இல்லையென்றால், அனைத்து மகளிர் அமைப்புகளையும் ஒன்றினைத்து கையெழுத்து இயக்கம் மற்றும் தொடர் போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ. கட்சி முன்னெடுக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
செய்யது பாசுல் சமீர்
தூத்துக்குடி மாவட்ட பொதுச் செயலாளர், எஸ்.டி.பி.ஐ. கட்சி. |