இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைத்தலைவர் வடக்குகோட்டையார் வ.மு.செய்யது அஹமது, இம்மாதம் 03ஆம் தேதி (நேற்று) திங்கட்கிழமை 13.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 57.
கண் அறுவை சிகிச்சை முடிந்து - ஒரு மாத ஓய்வுக்குப் பின் அலுவலகம் திரும்பிய கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனை வரவேற்பதற்காக, சென்னையிலுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை அலுவலகமான காயிதேமில்லத் மன்ஸிலுக்கு வந்தபோது அவர் மாரடைப்பால் காலமானார்.
இதுகுறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ் லிம் லீகின் மாநில துணைத் தலைவரும், இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவரும், சமுதாயப் புரவலரும், இலக்கிய ஆர்வலரும், பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், கொடை வள்ளல் என்ற பன்முகத்தன்மை கொண்ட வடக்குகோட்டையார் வ.மு.செய்யது அஹமது 03-02-2014 அன்று 13.30 மணியளவில் மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் அறியத் தருகிறோம்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பெரிய தெருவைச் சேர்ந்த பாரம்பரியமிக்க வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ்வின் புதல்வராக 1957இல் பிறந்தார். வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ் அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்து அறப்பணிகளை செய்து வந்தவர். நபிகள் நாயகத்தின் மீது மிகப்பெரும் நேசரான இவர், அவர்களின் பிறந்த தின விழாக்களை ஒவ்வொரு ஆண்டும் ரபீஉல் அவ்வல் மாதத்தில் பன்னிரெண்டு நாட்கள் மிகப் பெரிய அளவில் நடத்தி தலைசிறந்த பேச்சாளர்களை அழைத்து வந்து பேசச் செய்து பணி செய்து வந்தவர்.
இறைநேசச் செல்வர்களின் விழாக்கள், சமுதாய நிகழ்ச்சிகள், அறக்காரியங்கள், நூல் வெளியீடுகள் என இவர் செய்து வந்த தொண்டிற்கு ஈடு இணையில்லை.
சிறந்த கவிஞரும், எழுத்தாளருமான இவர் நல்ல இலக்கிய ஆர்வலர். இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவராக இருந்து இலக்கிய தொண்டாற்றி வந்தவர். விளம்பரத்தின் வெளிச்சமின்றி இவரால் வளர்க்கப்பட்ட இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஏராளம்.
சன்மார்க்கத்தைப் பரப்புவது, சமய நல்லிணக்கத்தை வளர்ப்பது, ஏழை எளியோருக்கு சாதிமத வேறுபாடின்றி உதவுவது, தமிழ்த் தொண்டும், சமுதாயத் தொண்டும் ஆற்றுவது என்ற நன்னோக்கங்களை கொண்டு வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ் அறக்கட்டளை நிறுவப்பட்டது.
கட்டிடப் பராமரிப்புத் துறையின் முன்னோடியாகத் திகழ்ந்த இவர், சென்னையின் முக்கிய இடங்களில் பல வணிக வளாகங்களையும், குடியிருப்புகளையும் உருவாக்கியவர்.
சிறந்த எழுத்தாளரான இவர், இஸ்லாமிய கலீபாக்களின் வரலாறு, நபிகள் நாயகத் தோழர்களின் வரலாறு, அரசியல் அறம், இனிய உறவில் இரு சமூகங்கள் போன்ற பல நூல்களையும், எண்ணற்ற கவிதைகளையும் எழுதிய பெருந்தகை.
காயிதெ மில்லத் மன்ஸிலில் உயிர் பிரிந்தது
முஸ்லிம் லீகின் மீது அளப்ப ரிய பற்றும், சேவையும் கொண் டிருந்த வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது நேற்று மதியம் 1 மணியளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகமான சென்னை காயிதேமில்லத் மன்ஸிலுக்கு வருகை தந்தார்.
கண் அறுவை சிகிச்சை செய்து ஒருமாத ஓய்வுக்குப் பின் சென்னை திரும்பியுள்ள தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். தலைமை நிலையத்திற்கு வருகை தந்திருந்த மாநில, மாவட்டங்களின் நிர்வாகிகள், முன்னோடிகள் அனைவரையும் பார்த்து நலம் விசாரித்தார். நிர்வாகிகளிடம் அவர் உரையாடிக் கொண்டிருந்தபோதே கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்கள் விரைந்து வந்து முதலுதவி செய்தும் எந்தப் பயனும் அளிக்காமல் உயிர் பிரிந்துவிட்டது. இன்று இன்று
அவரது ஜனாஸா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீராம் நகர் வடக்குத் தெருவில் உள்ள 3/36 இலக்க வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தலைவர்கள் நிலைகுலைந்தனர்
சற்று நேரத்திற்கு முன் கம்பீரமாக வருகை தந்து புன்னகை பூத்த முகத்தோடு நலம் விசாரித்தவர் நம் கண் முன்னே வீழ்ந்து கிடக்கிறாரே என்பதை கண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துல் ரஹ்மான், எம்.பி., மாநில துணைத் தலைவர்கள் சேலம் காதர் உசேன், லால்பேட்டை தளபதி மவ்லானா ஷபீகுர் ரஹ்மான், மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப், திருப்பூர் எம்.ஏ.சத்தார், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், மாநில துணைச் செயலாளர்கள் ஆப்பனூர் ஜபருல்லாஹ், எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, அணிகளின் நிர்வாகிகளான கே.எம்.நிஜாமுதீன், வி.ஏ.செய்யது பட்டாணி, டி.கே.ஷாநவாஸ், கே.டி.கிஸர் முகம்மது, ஏம்பல் தஜமுல் முகம்மது, மாவட்டங்களின் நிர்வாகிகளான எம். ஜெய்னுல் ஆபிதீன், ஏ.எச்.இஸ்மாயில், பூவை முஸ்தபா, ஹைதல் அலிகான், எம்.எஸ் அப்துல் வஹாப், வந்தவாசி பீர்முகம்மது, பெரியகுளம் நஸீர் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் இச்சம்பவத்தால் நிலைகுலைந்து போயினர்.
எல்லாம்வல்ல அல்லாஹ் வடக்குகோட்டையார் வ.மு.செய்யது அஹமது அவர்களின் நற்சேவைகளை அங்கீகரித்து பிழைகளை பொறுத்து மேலான சுவனத்தை அளிப்பதற்கு அனைவரும் துஆ செய்யுமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |