காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை
குறித்த ‘தந்தி டிவி’யின் ‘உள்ளது உள்ளபடி’ நிகழ்ச்சி குறித்து, டி.சி.டபிள்யு.
தொழிற்சாலையின் துணைத் தலைவர் (வேலைகள்) ஜெயகுமார் தந்தி டிவிக்கு பேட்டி வழங்கியுள்ளார். அப்பேட்டியில் அவர்
தெரிவித்துள்ள கருத்துகளுக்கு காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு
(KEPA) சார்பாக பதில் வழங்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை
குறித்த ‘தந்தி டிவி’யின் ‘உள்ளது உள்ளபடி’ என்ற தலைப்பிலான நேரலை நிகழ்ச்சி
ஜனவரி 31 அன்று ஒளிபரப்பட்டது. அந்நிகழ்ச்சியில் காயல்பட்டினம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் நிர்வாகிகள் உட்பட சமூக ஆர்வலர்கள் பலர்
தங்கள் கருத்துகளை வழங்கினர். நேரடி ஒளிபரப்பின்போது பங்கேற்க மறுத்த
டி.சி.டபிள்யு. தொழிற்சாலை, நிகழ்ச்சி முடிந்தபின், அதன் துணைத் தலைவர்களுள்
ஒருவரான திரு. ஜெயகுமார் மூலம் ‘தந்தி டிவி’க்கு விளக்கம்
அளித்துள்ளது.
அவர் அளித்துள்ள அவ்விளக்கங்கள் ஏற்புடையதாக இல்லை. ‘தந்தி டிவி’க்கு தான்
வழங்கிய பேட்டியில் திரு. ஜெயகுமார், “அரசு மூலமான தகவல்களைப் பார்த்ததில்
(காயல்பட்டினத்தில்) புற்று நோய் பரவுவதாக இல்லை...” என்று கூறியுள்ளார்.
அப்படிக் கூறிய அவர், அரசின் எந்த அறிக்கை அவ்வாறு கூறுகிறது என
தெரிவிக்கவில்லை.
காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் சென்னை போராட்டத்திற்குப்
பிறகு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ராமச்சந்திரா தனியார் மருத்துவ
பல்கலைக்கழகம் மூலம் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடுவதாகக் கூறியது. அது இன்று வரை
நடைபெறவில்லை.
சில மாதங்களுக்கு முன்னர் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை
அடையார் புற்று நோய் மையத்தைத் தொடர்புக்கொண்டு, காயல்பட்டினத்தில் புற்று
நோய் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள கேட்டுக்கொண்டது. அடையார் புற்று நோய்
மையமும், 3 மாதங்களில் அந்த ஆய்வை முடித்துத் தருவதாக - மாசு கட்டுப்பாட்டு
வாரியத்திற்குத் தெரிவித்தது. ஆனால் - மாசு கட்டுபாட்டு வாரியம், அந்த ஆய்வைத்
தொடங்கிட இன்று வரை உத்தரவு பிறப்பிக்கவில்லை.
தூத்துக்குடியின் முன்னாள் மாவட்ட ஆட்சியர் திரு. ஆசிஷ் குமார் IAS, ஆகஸ்ட்
07, 2013 அன்று இணை இயக்குனர் (சுகாதாரம்) - தூத்துக்குடி மாவட்டத்திற்கும்,
தூத்துக்குடி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் - காயல்பட்டினத்தில்
புற்று நோய் பரவல் குறித்த புள்ளிவிபரங்களை சேகரிக்குமாறு கூறியிருந்தார்.
ஆனால் இன்று வரை எந்த அறிக்கையையும் அது சம்பந்தமாக அரசு அதிகாரிகளால்
தயாரிக்கப்படவில்லை. இதுதான் தற்போதைய நிலவரம்.
ஆனால் DCW தொழிற்சாலையின் துணைத் தலைவர் திரு. ஜெயகுமார் தனது பேட்டியில் அரசு
ஆவணங்கள் காயல்பட்டினத்தில் புற்று நோய் பரவுவதாக இல்லை என தெரிவித்துள்ளதாகக்
கூறியுள்ளார். அது எந்த அரசு அறிக்கை? ஜெயகுமார் அவர்கள் - அவ்வப்போது
நகரில் மாவட்ட சுகாதார அலுவலர்களால் நடத்தப்படும் முகாம்களில்
தெரிவிக்கப்படும் புள்ளிவிபரங்களைக் கூறுகிறாரா? ஆம் எனில் - அது போன்ற
அறிக்கைகள் நம்பத் தகுந்தவை அல்ல என்பதே எங்களுக்கு காலம் சொல்லித் தந்துள்ள
பாடம். காரணம், அந்த முகாம்களில் நடக்கும் குளறுபடிகளுக்கு நாங்களே நேரடி
சாட்சிகள்.
அண்மையில், காயல்பட்டினத்தில் ஒரே நேரத்தில் - எந்த முன்னறிவிப்பும் இன்றி, பல
இடங்களில் அரசு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த முகாம்களுள் ஒன்றில்
கலந்துகொண்ட ஒரு தாய், தன் மகனுக்கு ஏற்படும் மூச்சுக் குழாய் பிரச்சனையைத்
தெரிவிக்கிறார். அதனை பதிவு செய்யவேண்டிய மருத்துவர், பதிவு செய்ய
மறுக்கிறார். இதுகுறித்து KEPA நிர்வாகிகளுக்கு தகவல் வரவே, உடனடியாக அந்த
முகாமிற்குப் பொறுப்பான தலைமை மருத்துவரிடம் KEPA முறையிட்டது. பின்னர், தன்
மகன் குறித்த அந்தத் தாயின் குறைபாடு பதிவு செய்யப்பட்டது. இதுதான் அரசு
முகாம்களின் நிலை. இதுபோன்ற முகாம்களின் மூலம் வெளியிடப்படும் புள்ளிவிபரங்களை
KEPA ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
காயல்பட்டினத்தில் - தன்னார்வலர்களைக் கொண்டு, சமூக ஆர்வலர்கள் சிலரால், ஜனவரி
2011இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, நகரில் புற்றுநோய்களின் தாக்கத்தை
வெளிப்படுத்தியுள்ளது. நகரில் புற்றுநோய் பரவியுள்ளதா, இல்லையா என்பதற்கு -
தேவைப்படும் இடத்தில், தேவைப்படும் வேளையில் - நூற்றுக்கணக்கான சாட்சிகள்
வருவார்கள்.
‘தந்தி டிவி’ பேட்டியில் திரு. ஜெயகுமார், “சில பிரீதிங் டிரபல் (Breathing
Trouble), காஃபு (Cough), கீஃபு (???) எல்லாம் வரலாமே தவிர புற்றுநோயெல்லாம்
காற்று சுவாசிச்சு வரவே வராது” என்று கூறியுள்ளார். இதன் மூலம், DCW
தொழிற்சாலை - காற்றை மாசு படுத்துகிறது என பகிரங்கமாக தொலைகாட்சியில்
ஒத்துக்கொண்டுள்ளதாக KEPA எடுத்துக்கொள்கிறது. இது பெரிய முன்னேற்றமே.
மேலும் ஜெயகுமார் அவர்கள் - காற்று சுவாசிச்சு எல்லாம் புற்று நோய் வராது
எனக்கூறியுள்ளார். அவருக்கு - அக்டோபர் 17, 2013 அன்று வெளியான உலக சுகாதார
அமைப்பின் (WHO), புற்றுநோய்க்கான சிறப்புப் பிரிவின் (INTERNATIONAL AGENCY
FOR RESEARCH ON CANCER) Outdoor air pollution a leading environmental cause
of cancer deaths என்ற தலைப்பிலான அறிக்கையை சமர்ப்பணம் செய்கிறோம். அந்த
அறிக்கை, காற்று மாசு - புற்றுநோய் மரணங்களுக்கு முக்கிய காரணம் என
தெரிவிக்கிறது.
திரு. ஜெயகுமார் அவர்கள், “மீனை சாப்பிட்டால் எல்லாம் புற்றுநோய்...” என தன்
பேச்சைத் துவக்கி முடிக்கவில்லை. அதனால் அவர் என்ன சொல்ல வந்தார் என
அறியமுடியவில்லை.
காயல்பட்டினம் கடலோர மீன்கள் - மாசுவால் பாதிக்கப்படவில்லை என சொல்கிறாரா? ஆம்
எனில், காயல்பட்டினம் கடலோர மீன்கள் - DCW தொழிற்சாலை கடலில் கலக்கும்
கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன என 1980களில் துவங்கி, CENTRAL MARINE FISHERIES RESEARCH INSTITUTE (CMFRI) என்ற மத்திய
அரசின் அமைப்பு வெளியிட்டுள்ள பல அறிக்கைகளை தங்கள் பார்வைக்கு அனுப்பித்
தருகிறோம்.
அவ்வாறு மீன்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், அதனால் மனிதர்களுக்கு - நோய்கள்
வராது என அவர் கூற வருகிறாரா? ஆம் எனில், மினமாட்டா முதல் துவங்கி இதுகுறித்த அனைத்து
ஆவணங்களையும் தங்களுக்கு அனுப்பித் தருகிறோம்.
தனது பேட்டியில் திரு. ஜெயகுமார் அவர்கள் மிகவும் பெருமிதமாக - “DCW
தொழிற்சாலை, 2002-2003ஆம் ஆண்டின் சிறந்த காஸ்டிக் சோடா உற்பத்தி நிறுவனம்
என்றும், அங்கீகரிக்கப்பட்ட அளவை விட மிகவும் குறைந்த (???) அளவிலேயே மெர்குரி
இருந்ததாகவும் கூறியுள்ளார். இதன்மூலம், மெர்குரி கடலில் கலக்கப்பட்டது
(குறைந்த அளவு?) என DCW தொழிற்சாலை சார்பாக பகிரங்கமாக அவர் ஒப்புதல்
வாக்குமூலம் வழங்கியுள்ளதாக நாம் இதனை எடுத்துக் கொள்வோம்.
2002ஆம் ஆண்டின் அச்சாதனை என்ன என திரு. ஜெயகுமார் அவர்கள் தெரிவிக்கவில்லை.
DCW நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்த்தோம். CENTRE FOR SCIENCE AND
ENVIRONMENT (CSE) என்ற அமைப்பின் மூலம் Green Rating Two Leaves Award
வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதில் பெருமிதம் கொள்ள ஏதாவது
உள்ளதா?
5 leaves என்ற உச்ச நிலை விருது பெற்றிருக்க வேண்டும். ஆனால் 2 leaves என்ற
நிலையிலான விருது வழங்கப்பட்டுள்ளது. 99.3 மதிப்பெண்கள் கூடுதலான வாய்ப்புள்ள
மதிப்பெண் என்ற இடத்தில், 28 மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது
28.2 சதவீத மதிப்பெண். தர வரிசையிலோ 14ஆவது இடம். சுற்றுச்சூழல்
பாதுகாப்புக்கான ஒரு விருது விஷயத்தில், DCW நிறுவனத்தின் மிகவும் தாழ்ந்த
இந்நிலை குறித்து, வருத்தப்பட்டிருக்க வேண்டிய அதன் துணைத் தலைவர், அதற்காக
பெருமிதப்பட்டுக் கொள்வது சுற்றுச்சூழல் குறித்த அவர்களின் எண்ண அலைகளைத்தான்
வெளிபடுத்துகிறது.
அது மட்டுமல்ல! DCW தொழிற்சாலைக்கு விருது கொடுக்கப்பட்டதாக துணைத் தலைவர்
கூறும் 2003ஆம் ஆண்டில் கூட, தொழிற்சாலையை ஒட்டியுள்ள கடலோரத்தில் CMFRI -
மேற்கொண்ட ஆய்வுகள் என்ன கூறுகிறது என்று பாருங்கள்:
The mean concentration of Cd in the water (1.01 μg.l-1) and sediment (1.65
μg.g-1); Cu in the water (7.45 μg.l-
1) and clam tissue (17.97 μg.gl-1) and Zn in the water (27.83 μg.l-1)
samples were the highest at station 2, indicating heavy metal pollution
caused by DCW.
[Source: Heavy metal concentration in sea water, sediment and bivalves off
Tuticorin
* P. S. Asha, P. K. Krishnakumar, P. Kaladharan, D. Prema, K. Diwakar, K. K.
Valsala and G. S. Bhat]
DCW நிறுவன துணைத் தலைவர் திரு. ஜெயகுமார் அவர்கள் 2007ஆம் ஆண்டு முதல்
மெர்குரி பயன்பாட்டில் இருந்து விடுபட்டு, காஸ்டிக் சோடா உற்பத்தி செய்ய,
மெம்ப்ரேன் (Membrane) முறைக்கு DCW நிறுவனம் மாறியதாகக் கூறுகிறார்.
உண்மைதான்! ஆனால், கடந்த 49 ஆண்டுகளாக மெர்குரி எனும் பாதரசத்தைக் கொண்டு
காயல்பட்டினம் சுற்றுச்சூழலை, நிலத்தை, நீர் ஆதாரங்களை, காற்றை, DCW
தொழிற்சாலை மாசுபடுத்தியுள்ளதே...? அதற்கு என்ன நிவாரணம்? அழிய ஆயிரமாயிரம்
ஆண்டுகள் எடுக்கும் மெர்குரி, பரிசோதனைகளில் இன்று வரை தென்படுகிறதே, இதற்கு
என்ன நிவாரணம்?
நீங்கள் மெம்ப்ரேன் முறைக்கு மாறியது - மக்கள் நலனைக் கருத்தில் கொண்டா?
மெர்குரி முறையால் சுற்றுசூழலுக்கு ஆபத்து என்று 1986ஆம் ஆண்டு முதல்,
மெர்குரி அடிப்படையிலான எந்த புது காஸ்டிக் சோடா தொழிற்சாலைக்கும் அரசு அனுமதி
வழங்கவில்லை. அப்போதே நீங்கள் - மெம்ப்ரேன் முறைக்கு மாறியிருந்தால் -
சுற்றுச்சூழல் இவ்வளவு சீரழிந்திருக்குமா?
2003ஆம் ஆண்டு அரசுக்கும், தொழிற்சாலைகளுக்கும் ஏற்பட்ட ஒப்பந்த (Charter on
Corporate Responsibility & Environmental Protection) அடிப்படையில்தானே DCW
நிறுவனம் 2007இல் மெர்குரி முறையை விட்டு வெளியில் வந்தது. இந்த ஒப்பந்த
வேளையில் கூட, 2003ஆம் ஆண்டில், பல நிறுவனங்கள் மெர்குரியை விட்டும் மாறி இதர
வழிகளில் காஸ்டிக் சோடா உற்பத்தி செய்து வந்தன (2003இல் 71 சதவீதம் உற்பத்தி
மெர்குரி அடிப்படை இல்லாமல்). முடிந்தளவு - சுற்றுச்சூழலை மாசுபடுத்தி எவ்வளவு
லாபம் சம்பாதிக்க முடியுமோ, அவ்வளவு சம்பாதித்த பின்பு DCW தொழிற்சாலை -
அரசின் 2012ஆம் ஆண்டு என்ற கெடு நெருங்கியதால் - தொழில்நுட்பத்தை மாற்றியது
என்பதே உண்மை.
தனது பேட்டியில் - அடிக்கடி சோதனைகளை மேற்கொள்வதாகவும், எந்தப் பிரச்சனையும்
இல்லை என்றும் கூறியுள்ளார். DCW நிறுவனத்தின் மற்றும் இதுகாலம் வரையிலான மாசு
கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிசோதனைகளின் நம்பகத்தன்மை, 2012 டிசம்பரில்
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் - கேள்விக்குறியானதை, DCW நிறுவனத்தின்
துணைத் தலைவர், இவ்வளவு சீக்கிரம் மறந்தது நியாயம் இல்லை.
மேலும் திரு. ஜெயகுமார் அவர்கள் தனது பேட்டியில், சோழமண்டலம் MS அசோசியேட்ஸ்
நிறுவன அறிக்கை உள்ளதாகவும் கூறியுள்ளார். கடந்த காலங்களில்
பல்வேறு தனியார் நிறுவனங்கள் மூலம் பரிசோதனைகளை மேற்கொண்டு, தனக்குத் தானே,
பொய்யாக DCW நிறுவனம் நற்சான்றிதழ் வழங்கிக்கொண்டதை, சமகால - CMFRI அறிக்கைகள்
தெளிவுபடுத்தியுள்ளன என்பதனை DCW தொழிற்சாலையின் துணைத் தலைவர் திரு.
ஜெயகுமார் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.சாலிஹ்,
செய்தி தொடர்பாளர், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA). |