இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், அதன் புதிய தலைவராக, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பொதுக்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இறையருளால் 29.05.2014 வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் இக்ராஃ அலுவலகத்தின் எதிரே உள்ள கலீஃபா அப்பா தைக்கா அரங்கில், இக்ராஃ கல்விச் சங்கத்தின் தலைவரும், ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் தலைவருமான ஹாஜி குளம் எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன் தலைமையில் நடைபெற்றது. இக்ராஃ துணைத்தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஏ.கே.கலீல் மற்றும் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜித்தா காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.எஸ்.எல்.முஹம்மத் ஆதம் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவர் ஹாஜி குளம் எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசி, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
ஆண்டறிக்கை:
இக்ராஃ செயலாளர் ஊரில் இல்லாததால் அவர் சார்பாக நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், கடந்த பொதுக்குழுக் கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் இக்ராஃவின் 2013 - 2014 ஆண்டறிக்கையை வாசித்தார். வாசிக்கப்பட்ட ஆண்டறிக்கையின் சுருக்கம் வருமாறு:-
கல்வி உதவித்தொகை:
>>> காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் அனுசரணையுடன் இக்ராஃ கல்விச் சங்கம் வழங்கி வரும் கல்வி உதவித்தொகை குறித்து விளக்கப்பட்டது.
>>> கடந்த 2013-14 கல்வியாண்டில் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.உள்ளிட்ட படிப்புக்கு 48 மாணவ-மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 2,40,000/- உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மாணவர்கள்-22, மாணவியர் -26.
>>> கடந்த 2013-14 கல்வியாண்டில் ஜகாத் நிதியின் கீழ் கிடைக்கப்பெற்ற தொகை ரூபாய் 2,40,600/- . அனைத்து வகை மேற்படிப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ-மாணவியர் - 25 பேர்.
அவர்களுள் மாணவர்கள் - 22, மாணவியர் - 03.
வழங்கப்பட்ட ஜகாத் உதவித்தொகை ரூபாய் 2,40,600/-
>>> கடந்த கல்வியாண்டில் (2013-14) இக்ராஃ மூலம் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை (ஜகாத் நிதி உட்பட) ரூபாய் 9,28,100/-
>>> கடந்த 8 ஆண்டுகளாக இக்ராஃ மூலம் 489 மாணவ-மாணவியருக்கு வழங்கிய மொத்த கல்வி உதவித்தொகை ரூபாய் 59.5 இலட்சம்.
>>> அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை குறித்தும், பல்வேறு தனியார் அமைப்புகள் வழங்கும் கல்வி உதவித்தொகைகள் குறித்த தகவல் மற்றும் அதற்கான விண்ணப்பப் படிவங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு அவற்றையும் மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான மாணவர்கள் கணிசமான உதவித் தொகைகள் கிடைக்கப்பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இக்ராஃ மூலம் தேர்வு செய்து தரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு பொறியியல் கல்வி இலவசமாக வழங்குவதாகவும், கட்டணச் சலுகை அளிப்பதாகவும் பொறியியல் கல்லூரியிலிருந்து தரப்பட்டுள்ள வாக்குறுதி மற்றும் அவர்களிடமிருந்து பெறப்பட்ட கடிதம் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2013 நிகழ்ச்சியறிக்கை:
கடந்த வருடம் நடத்தி முடிக்கப்பட்ட ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2013’ நிகழ்ச்சி தொடர்பான முழு விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.
கல்வி ஒளிபரப்பு:
வழமை போல நடப்பாண்டும், ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரசுப் பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவியர் நலனுக்காக கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சி, முஹ்யித்தீன் டிவி, மீடியா டிவி ஆகிய அலைவரிசைகளில் ஒளிபரப்பப்பட்ட விபரம் தெரிவிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடப்பாண்டு ஐ.ஐ.எம். டிவி அலைவரிசையில் கல்வி ஒளிபரப்பு செய்ய இயலாமற்போனதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ப்ளஸ் 2 கல்வி ஒளிபரப்பை முஹ்யித்தீன் டிவியில் ஒளிபரப்பியும், பத்தாம் வகுப்பு கல்வி ஒளிபரப்பை மீடியா டிவியில் ஒளிபரப்பச் செய்து, அதற்கான முழு செலவினத்தையும் தமது அனுசரணையாக வழங்கியும் உதவிய முஹ்யித்தீன் டிவி நிர்வாகத்திற்கும், எல்லா ஆண்டுகளையும் போல நடப்பாண்டிலும் கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தித் தந்த ஆசிரியர் எம்.ஏ.புகாரீ அவர்களுக்கும் கூட்டத்தில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.
தம்மாம் கா.ந.மன்றத்தின் ஆங்கில பேச்சுப் பயிற்சி:
தம்மாம் காயல் நற்பணி மன்றம் சார்பாக இக்ராஃவின் ஒருங்கிணைப்பில், ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு (Spoken English summer Class) கடந்த 28-04-2014 முதல் 28-05-2014 வரை ஒரு மாதம் தினமும் இரண்டு மணி நேரம் மாணவர்களுக்கு இரு பிரிவுகளாக தனியாகவும், மாணவியருக்கு தனியாகவும் நடத்தப்பட்டது. ஏறக்குறைய 100 மாணவர்கள் வரை கலந்து கொண்டனர். மாணவ-மாணவியரிடம் இந்த வகுப்பு எதிர்பார்த்ததை விட கூடுதலான வரவேற்பைப் பெற்றது குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது. இந்த மாணவ-மாணவியருக்கான சான்றிதழ் (course complete certificate ) வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டு, அதில் அனைரும் கலந்துகொள்ளுமாறும் இக்ராஃ நிர்வாகி கேட்டுக்கொண்டார்.
இக்ராஃ உறுப்பினர்கள்:
நடப்பாண்டில் 45 பேர் இக்ராஃவின் புதிய உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
இது வரை இக்ராஃவில் 444 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.
அவர்களுள் ரூபாய் 15 ஆயிரம் பணம் செலுத்தி, இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்களாக தம் பெயர்களைப் பதிவு செய்துகொண்டோர் 106 பேர். அவர்களுள் 92 பேர் பின்வருமாறு காயல் நல மன்றங்கள் மூலம் சேகரித்து தரப்பட்டவர்கள்:-
தாய்லாந்து காயல் நல மன்றம் - 30
ரியாத் காயல் நல மன்றம் - 9
சிங்கப்பூர் காயல் நல மன்றம் - 16
ஜித்தா காயல் நல மன்றம் - 15
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் – 10
கத்தர் காயல் நல மன்றம் - 10
ஓமன் காயல் நல மன்றம் - 2
ஆயுட்கால உறுப்பினர்களாவர்களுள், இதுவரை 61 பேர் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும், மீதமுள்ளவர்களிடம் விரைவில் சேகரிக்கப்படும் என்றும், ஆயுட்கால உறுப்பினர் சந்தா மூலம் பெறப்படும் தொகை - இக்ராஃவுக்கு சொந்த இடம் வாங்குவதற்காகவும், கட்டிடம் கட்டுவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இத்தகவல் கூறப்பட்டதைத் தொடர்ந்து, புதிதாக இருவர் (எஸ்.எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ் மற்றும் கே.ஏ.ஆர்.செய்யது அப்துல் காதர் ) நடப்பு கூட்டத்தில் தம்மை ஆயுட்கால உறுப்பினர்களாக்கிட விருப்பம் தெரிவித்தனர்.
கல்வி உதவித்தொகை விளக்கப் பிரசுரம்:
இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பாண்டு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்களை வரவேற்று, வழமை போல பிரசுரம் வெளியிடப்பட்டுள்ள செய்தி அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டு, வெளியிடப்பட்ட பிரசுரமும் காண்பிக்கப்பட்டது.
கல்வி உதவித்தொகை கோரி இதுவரை 73 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அனுசரணைத் தொகையோ 11 பேருக்கு மட்டுமே இதுவரை பெறப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
உதவித்தொகையில் பயின்று உயர்விடம் பெற்ற மாணவரின் நன்றிக் கடிதம்:
இக்ராஃ மூலம் கல்வி உதவித்தொகை பெற்று சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வரும் - காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த மாணவர், தமிழக அரசின் பரிந்துரையில் - அதன் முழுச் செலவில் (ரூபாய் பதினைந்து இலட்சம்) லண்டன் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது அங்கு பயின்று வரும் செய்தி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அம்மாணவர் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு நன்றிப் பெருக்குடன் கடிதம் அனுப்பியுள்ள செய்தியும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக்ராஃ வருடாந்திர நிர்வாகச் செலவுகளுக்கு அனுசரணை:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் வருடாந்திர நிர்வாகச் செலவினத்திற்காக காயல் நல மன்றங்கள், இக்ராஃ அங்கத்தினர் மற்றும் தனி ஆர்வலர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள அனுசரணைத் தொகை விபரம், மொத்த தேவை, பெறப்பட்ட அனுசரணைகள் போக இன்னும் தேவைப்படும் தொகை உள்ளிட்ட விபரங்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.நிர்வாகச் செலவினங்களில் ஏறக்குறைய ரூபாய் ஒரு இலட்சம் வரை நிதி பற்றாக்குறை ஏற்படுவதாகவும், மன்றங்களால் இவ்வகைக்காக வழங்கப்படும் வருடாந்திர அனுசரணைத் தொகையை அதிகப்படுத்தித் தருமாறு அனைத்து அனுசரணையாளர்களுக்கும் கோரிக்கை மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து சில மன்றங்கள் தமது அனுசரணைத் தொகையை உயர்த்தித் தந்துள்ளதாகவும், எனினும் புதிதாக காயல் நல மன்றங்களோ தனி நபர்களோ, கல்வி ஆர்வலர்களோ இதற்கான கணிசமான நிதி அளித்தால்தான் இப்பற்றாக்குறையை (Deficit) முழுமையாக தவிர்க்கவியலும் என்றும் விபரம் தெரிவிக்கப்பட்டது.
இவை, இக்ராஃ கல்விச் சங்க நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது கூட்டத்தில் சமர்ப்பித்த ஆண்டறிக்கையின் சுருக்கமாகும்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
2013 - 2014 பருவத்திற்கான இக்ராஃவின் வரவு - செலவு கணக்கு ஆண்டறிக்கையை இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் கூட்டத்தில் சமர்ப்பித்தார்.
அதில் ஏற்பட்ட சில சந்தேகங்களுக்கு தேவையான விளக்கங்கள் பெறப்பட்ட பின், கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதல் அளித்தது.
புதிய தலைவர் தேர்வு:
சுழற்சி முறையிலான 2014-15 வருடத்திற்கான இக்ராஃவின் புதிய தலைவராக, ரியாத் காயல் மன்றத்தின் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூது இத்ரீஸ் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இக்ராஃவின் கடந்த பருவத்தில் (2013-2014) தலைமைப் பொறுப்பை ஏற்று சேவையாற்றிய தலைவர் ஹாஜி குளம் எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன் அவர்களுக்கும், அவர்களுடன் இணைந்து உதவியும் - ஒத்துழைப்பும் நல்கிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
அங்கத்தினர் விலகல் கடிதங்கள் பரிசீலனை:
அடுத்து இக்ராஃவின் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது அவர்கள் மற்றும் இணைச்செயலர் எஸ்.கே.ஸாலிஹ் அவர்கள் முந்தைய செயற்குழு கூட்டத்தில் அளித்த ராஜினாமா கடிதங்கள் குறித்து பரிசீலித்து,அவர்களிடம் மீதமுள்ள இரண்டு வருடங்களுக்கும் அதே பொறுப்பில் தொடருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும், அதனை அவ்விருவரும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அடுத்து இக்ராஃ செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், பணிப்பளு காரணமாக தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அளித்த கடிதம் குறித்து அவரிடம் விசாரிக்கப்பட்டது. தொடர்ந்து செயற்குழு உறுப்பினராக செயலாற்றுமாறும் கோரப்பட்டது. ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அவர், பொறுப்பில் இருந்துதான் செயலாற்ற வேண்டுமென்பதில்லை; இக்ராஃவுக்கான தனது ஒத்துழைப்பு பொறுப்பிலில்லா நிலையிலும் என்றும் தொடரும் என்றும், எனவே மேலும் வற்புறுத்தாமல் தனது விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் கூறவே அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது. இதனால் வெற்றிடமான செயற்குழு உறுப்பினர் பொறுப்பில், இக்ராஃ பொதுக்குழு உறுப்பினர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இக்ராஃவுக்கு சொந்த இடம்:
இக்ராஃவிற்கு சொந்த இடம் வாங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் இறுதிகட்ட நடவடிக்கைகள் குறித்து செயற்குழு உறுப்பினர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் விளக்கிப் பேசினார்.
நிலத்தை வாங்குவதில் உள்ள நடைமுறை சட்ட திட்டங்கள் குறித்து ஆய்ந்தறியப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், நிலத்தை வாங்குவதற்காக தான் நில உரிமையாளரிடம் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில், நியாயமான விலை பேசி முடிக்கப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே பேசப்பட்ட படி பண்டக சாலை தெருவில் தென் சரகில் 2000 சதுர அடி கொண்ட B 26 எண் பிளாட்டை (நிலத்தை) கிரயத்திற்கும் , இதர 2000 சதுர அடி கொண்ட B 25 பிளாட்டை ( நிலத்தை) அன்பளிப்பாகவும் அதன் உரிமையாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ .ஆர்.ஹபீபுல்லாஹ் அவர்கள் தர இசைவு தெரிவித்துள்ளதாகவும், இதனை வரும் ஜூன் 02ஆம் நாளன்று பத்திரப்பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம்:
அடுத்து கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்து தெரிவிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது கருத்து தெரிவித்தவர்கள் - தெரிவித்த கருத்துக்களின் விபரம் வருமாறு:-
எம்.எம்.மொகுதூம் முஹம்மத் (செயலாளர், சிங்கை காயல் நல மன்றம்)
(1) இக்ராஃ துவங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், துவக்கத்தில் ஓராண்டு கல்வி உதவித்தொகையாக நிர்ணயிக்கப்பட்ட ரூபாய் 5 ஆயிரம் தொகையே இன்றளவும் கொடுக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய தேவைக்கேற்ப தொகை உயர்த்தப்பட்டு, அதற்கேற்ப அனுசரணைகளைப் பெற்றிட செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்றும், விண்ணப்பங்களின் எண்ணிக்கையை குறைத்து, அவர்களுக்கு முழுத்தொகையையும் வழங்கவோ அல்லது மதிப்பெண்களின் அடிப்படையில் தொகையை கூட்டியோ வழங்க முயற்சிக்கலாம்.
(2) மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட Professional Courses படிப்புகளுக்கும் இக்ராஃவின் வழமையான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நல்ல மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு Scholarship வழங்கப்பட வேண்டும். இதற்காக அனைத்து காயல் நல மன்றங்களையும் அணுகி, மருத்துவ உதவிக்காக ஷிஃபா அமைப்பால் ஒருங்கிணைந்த நிதி பெறப்படுவதைப் போல இக்ராஃ மூலமும் ஒருங்கிணைந்த கல்வி நிதி உதவித்திட்டத்தின் கீழ் நிதியைப்பெற்று மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். விண்ணப்பங்களை முறையாகப் பரிசீலித்து, அறிக்கை சமர்ப்பிக்கும் பணியை மட்டும் இக்ராஃ தன் பொறுப்பில் செய்ய வேண்டும். நிதியை மன்றங்கள் பகிர்ந்தளிக்க வேண்டும்.இவ்வாறு செய்தால், இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் முன்பு இருந்ததை விட மேம்படும். மன்றங்களின் சிரமங்களும் குறையும்.
(3) ப்ளஸ் 2 வரை படித்து முடித்த பின்பும் கூட, அடுத்து என்ன படிப்பது என்று தெரியாமல் விழிக்கும் மாணவர்கள் அதிகம் உள்ள நிலை காயல்பட்டினத்தில் சாதாரணமாக இருந்து வருவதைக் காண முடிகிறது.அவர்களுக்கு வழிகாட்டும் வகையில், தேவையான தகவல்களுடன் - இக்ராஃ சார்பில் மாணவ-மாணவியருக்கு முறையான கலந்தாய்வு (கவுன்சிலிங்) நடத்தப்பட வேண்டும்.
ஹாஜி எம்.எம்.செய்யித் இஸ்மாஈல் (துணைச் செயலர், தம்மாம் காயல் நற்பணி மன்றம்)
மருத்துவ உதவித் திட்ட வகைக்காக ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பு எவ்வாறு காயல் நல மன்றங்களின் கூட்டு செயல்திட்ட அடிப்படையில் செயல்பட்டு வருகிறதோ அதுபோல, கல்வி உதவித்தொகை திட்ட வகைக்காக இக்ராஃ கல்விச் சங்கமும் செயல்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், இனி யாரும் - எந்த வகையான கல்வி உதவித்தொகைக்காகவும் ஒவ்வொரு மன்றங்களுக்காக அனுப்பிக்கொண்டிருக்காமல், இக்ராஃவையே நாடுமாறு செய்யலாம். இக்ராஃ மூலம் பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் மன்றங்கள் உதவித்தொகைகளை இணைந்து - பகிர்ந்து வழங்கலாம்.
(மேற்கண்டவற்றுக்கு பதிலளித்துப் பேசிய நிர்வாகி தர்வேஷ் முஹம்மது, இது வரவேற்கத்தக்க கருத்துக்கள் என்றும் இதனை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கலாம் என்றும், இது குறித்து அனைத்து காயல் நல மன்றங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் தெரிவித்து அவர்களின் கருத்தையும் கேட்டறிந்து அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும், மாணவ-மாணவியருக்கான முறையான கலந்தாய்வு (கவுன்சிலிங்) பொருத்தமான காலத்தில் நடத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.)
ஹாஜி ஸ்மார்ட் எம்.எஸ்.அப்துல் காதர் (செயற்குழு உறுப்பினர், இக்ராஃ கல்விச் சங்கம்)
நாம் வழங்கும் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இதர ஏழை மாணவ-மாணவியர்களுக்கு உதவிகள் கிடைக்காமல் போய் விடக்கூடாது. காரணம் நாம் இக்ராஃவை துவக்கும் போது KAYAL LITERACY VISION - (காயலில் கல்லாமை இல்லாமை)- அனைவர்களையும் பட்டதாரிகளாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஆரம்பித்தோம்.எனவே அதனையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் (செயற்குழு உறுப்பினர், இக்ராஃ கல்விச் சங்கம்)
கல்வி உதவித்தொகை கோரி அனைத்து விண்ணப்பங்களும் பெறப்பட்ட பின், தேவைப்படும் மொத்த நிதியைக் கணக்கிட்டு, அதை அறிவிக்க வேண்டும். தற்போது வாங்குவதைப் போல, ஓர் அனுசரணையாளர் ஆண்டொன்றுக்கு ரூபாய் 5 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு 15 ஆயிரம் என்ற நிலையை மாற்றி, யாரும் அனுசரணையளிக்கலாம்; எவ்வளவு தொகை வேண்டுமானாலும் அளிக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
அவ்வாறு செய்தால், ஆண்டுக்கு 5 ஆயிரம் செலுத்த இயலாதவர்கள் கூட ஆயிரம், 2 ஆயிரம், 3 ஆயிரம், 4 ஆயிரம் என செலுத்தி, அவர்களும் இத்திட்டத்தின் கீழ் அனுசரணையாளர்களாக வாய்ப்பு ஏற்படும்.
எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் (செயற்குழு உறுப்பினர், இக்ராஃ கல்விச் சங்கம்)
வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை, 5 ஆயிரம், 10 ஆயிரம் என இரண்டு தரங்களாகப் பிரித்து, மாணவ-மாணவியரின் தகுதிகளுக்கேற்ப வழங்கலாம்.
ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ (உறுப்பினர், இக்ராஃ கல்விச் சங்கம்)
இக்ராஃ மூலம் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவ-மாணவியரின் தற்போதைய நிலை குறித்து அறியப்பட வேண்டும்.அவர்கள் பயிலும் போது arrears உள்ளதா என்று கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு இக்ராஃ மூலம் போதிய சமூக அக்கறை ஊட்டப்பட வேண்டும். அவ்வாறு செய்வதால், வருங்காலங்களில் அவர்கள் நல்ல நிலைக்கு வரும்போது, இதுபோன்று பலருக்கும் உதவ முன்வருவர்; சமூக ஆர்வலர்களாக மாறுவர்.
(மாணவ-மாணவியருக்கு, அவர்களின் mark sheet பெறப்பட்டு, அதில் arrears இல்லை என்பதை தெளிவு படுத்திய பின்பே அடுத்த பருவத்திற்கான கல்வி நிதி வழங்கப்படுவதாகவும், கல்வி உதவித்தொகை வழங்கும்போதே மாணவ-மாணவியருக்கு சமூக ஆர்வம் குறித்தும், வருங்காலத்தில் அவர்களும் இது போன்று இதர ஏழைகளின் நலனுக்காக சேவையாற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்படுவதாகவும் இக்கருத்துக்கு விளக்கமளிக்கப்பட்டது. உதவித்தொகை பெறும் மாணவ-மாணவியரின் வளர்ச்சி நிலை குறித்து கூடிய விரைவில் தகவல்கள் சேகரிக்கப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ (செயற்குழு உறுப்பினர், ரியாத் காயல் நற்பணி மன்றம்)
ஹாஜி மக்கீ நூஹுத்தம்பி (உறுப்பினர், இக்ராஃ கல்விச் சங்கம்)
கடன் அடிப்படையில் கல்வி உதவித்தொகையை வழங்கலாம்.
(இக்ராஃவில் ஜகாத், ஸதக்கா நிதிகளின் கீழ் கல்வி உதவித்தொகை பெறப்படுவதால் ,அதனை கடன் அடிப்படையில் வழங்கவியலாது என்றும் ,அவ்வாறு வழங்குவதற்கென்றே தனியாக நிதி திரட்டி, அந்த நிதியின் கீழ் செய்தால் தவறில்லை என்றும், இக்ராஃவின் நடப்பு செயல்திட்டத்தில் அது இல்லை என்றும் கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.)
ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் (செயற்குழு உறுப்பினர், இக்ராஃ கல்விச் சங்கம்)
ஜகாத் நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்படும்போது எவ்வித நிபந்தனையும் விதிக்கக் கூடாது; அது ஆகுமானதல்ல.
ஹாஜி எல்.கே.கே.லெப்பைத்தம்பி (உறுப்பினர். இக்ராஃ கல்விச் சங்கம்)
ஒரு வருடம் ஒருவரிடம் ஜகாத் நிதி பெற்றால், அடுத்தாண்டும் அவரிடமிருந்து பெற்றிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்காக அவருக்கு அதுகுறித்து நினைவூட்டப்பட வேண்டும்.
(ஜகாத் அனுசரணையாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் கடிதங்கள் மூலம் முறையாக நினைவூட்டப்பட்டு வருவதாக இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் தெரிவித்தார்.அதற்கு பதிலளித்து பேசிய அவர் ,கடிதமோ, மின்னஞ்சலோ பார்வையில் படாமல் போக வாய்ப்புள்ளது என்றும், அவற்றைச் செய்வதுடன் - தொலைபேசி வழியாகவும் தொடர்புகொண்டு நினைவூட்டலாம் என்றும் கூற, அது ஏற்கப்பட்டது.)
எஸ்.கே.ஸாலிஹ் (துணைச் செயலாளர், இக்ராஃ கல்விச் சங்கம்)
இவ்வாண்டு நடத்தப்படவுள்ள ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2014’ நிகழ்ச்சி குறித்து பொது அறிக்கை வெளியிடப்படும். அனைவரும் அவசியம் பங்கேற்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியை கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைகளைக் களைந்து இன்னும் சிறப்புற நடத்திட, பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் (செயற்குழு உறுப்பினர், இக்ராஃ கல்விச் சங்கம்)
(1) இலவச கல்வி வழங்குவதாக சில கல்லூரிகளிலிருந்து பெறப்பட்ட மதிப்புமிக்க தகவல்கள் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இத்தோடு நின்றுபோகாமல் அனைவருக்கும் சேர்க்கப்பட வேண்டும்.அந்த கடிதங்களை அனைத்து ஜமாஅத்துகளுக்கும் அனுப்பி வைத்து மக்களுக்கு அச்செய்தியை எத்தி வைக்க வேண்டும்.
(2) காயல்பட்டினத்தில் செயல்பட்டு வரும் அனைத்து இணையதளங்களுக்கும் இக்ராஃவின் செய்திகள் அனுப்பப்பட வேண்டும்.
(3) கல்வி உதவித்தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே இக்ராஃவால் வழங்கப்பட்டு வரும் நிலையில், தேவைப்படும் எஞ்சிய தொகைக்காக மாணவர்கள் பிறரை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்திட சிறந்த மதிப்பெண்கள் (MERIT) அடிப்படையில் கல்வி உதவித்தொகைக்கான பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முழு தொகையையும் வழங்கலாம். தற்போது அதை முழுமையாகச் செயல்படுத்த முடியாவிட்டாலும் கூட, இக்கூட்டத்திலிருந்து சிறிதளவிற்கேனும் அத்திட்டத்தைத் துவக்கி செயல்படுத்தலாம்.
இவ்வாறு, கூட்டத்தில் பங்கேற்றோரிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டன. அவற்றுள், காயல் நல மன்றங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கருத்துக்கள் முறைப்படி மின்னஞ்சல் வழியே தெரிவிக்கப்படும் என்றும், இதர கருத்துக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இக்ராஃ நிர்வாகக் குழு அல்லது செயற்குழுவில் இதுகுறித்து இறுதி முடிவு செய்யப்படும் என்றும் இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது கூறினார்.
சிறப்புத் தகுதி அடிப்படையிலான மாணவர்களுக்கு முழு கல்விச் செலவினத்திற்கு அனுசரணை:
இறுதியாக பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில், இவ்வருடம் ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களுக்கான முழு செலவினத்தையும் கல்வி உதவித்தொகையாக வழங்கிட பின்வருமாறு அனுசரணையாளர்கள் விருப்பம் தெரிவித்தனர்:-
(1) ஹாஜி குளம் அஹ்மத் முஹ்யித்தீன் (ஜித்தா கா.ந.மன்றத்தின் சார்பாக...) - 1
(2) தாய்லாந்து காயல் நல மன்றத்தின் சார்பாக - 1
(3) சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பாக - 1
(4) காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பாக - 1
(5) ஹாஜி எல்.கே.கே.லெப்பைத்தம்பி - 1 (இவ்வகைக்காக ஆண்டுதோறும் ரூபாய் 25 ஆயிரம்)
(6) ஹாஜி எஸ்.எம்.பி.இஸ்மாஈல் அவர்கள் - 1
தீர்மானங்கள்:
இறுதியாக கூட்டத்தில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 01 - வரவு-செலவு கணக்கறிக்கைக்கு ஒப்புதல்:
இக்ராஃ பொருளாளரால் நடப்பு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2013-2014ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கறிக்கைக்கு இக்கூட்டம் ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 02 - புதிய பொறுப்புக்கு தேர்வு:
இக்ராஃவின் புதிய தலைவராக ரியாத் காயல் நல மன்றத்தின் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூது இத்ரீஸ் அவர்களை இக்கூட்டம் ஏக மனதாக தேர்ந்தெடுக்கிறது.
அடுத்து பணிப்பளு காரணமாக செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் அவர்கள் அளித்த ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.அவருக்கு பதிலாக வெற்றிடமான செயற்குழு உறுப்பினர் பொறுப்பிற்கு , இக்ராஃ பொதுக்குழு உறுப்பினர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன் அவர்களை இக்கூட்டம் ஏகமனதாக தேர்ந்தெடுக்கிறது.
தீர்மானம் 03 - கடந்த தலைமைக்கு நன்றி:
இக்ராஃவின் கடந்த பருவத்தில் (2013-2014) தலைமைப் பொறுப்பை ஏற்று ஒத்துழைப்பு நல்கிய ஜித்தா காயல் நற்பணி மன்றத்திற்கும், அதன் தலைவர் ஹாஜி குளம் எம்.ஏ அஹ்மத் முஹ்யித்தீன் அவர்களுக்கும், இக்கூட்டம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 04 - பத்திரப்பதிவு:
காயல்பட்டினம், பண்டக சாலை தெருவில் , 2000 சதுர அடி கொண்ட B 26 எண் பிளாட்டை (நிலத்தை) கிரயத்திற்கு வாங்குவதற்கும், இதர 2000 சதுர அடி கொண்ட B 25 பிளாட்டை ( நிலத்தை) அதன் உரிமையாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ .ஆர்.ஹபீபுல்லாஹ் அவர்களிடமிருந்து (அன்பளிப்பு) நன்கொடையாக பெற்றும் பத்திரப்பதிவு செய்து கொள்வதெனவும்,,இக்ராஃவுக்கு சொந்த இடம் வாங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முறைப்படி நிறைவு செய்து, ஜூன் 02ஆம் நாளன்று பத்திரப்பதிவு செய்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 05 - பத்திரப்பதிவு செய்திட செயலருக்கு அதிகாரம்:
மேற்கூறப்பட்ட நிலத்தை இக்ராஃவுக்காக, இக்ராஃ கல்விச் சங்கம் பெயரில் பத்திரப் பதிவு (Register) செய்திட இக்ராஃவின் தற்காலிக செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது அவர்களுக்கு இக்கூட்டம் அதிகாரம் அளிக்கிறது.
தீர்மானம் 06 - நன்கொடையாளருக்கு நன்றி:
மேற்கண்ட 4000 சதுர அடி நிலத்தில் 2000 சதுர அடி நிலத்தை இக்ராஃவுக்கு அன்பளிப்பு செய்திடும் அதன் உரிமையாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.ஹபீபுல்லாஹ் அவர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 07 - நிர்வாகச் செலவின அனுசரணையாளர்களுக்கு நன்றி:
இக்ராஃவின் நிர்வாகச் செலவினங்களுக்காக நன்கொடையளித்து ஆதரித்து வரும் காயல் நல மன்றங்களுக்கும், கல்வி ஆர்வலர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 08 : இணையதளங்களுக்கு செய்தி:
காயல் நகரின் அனைத்து இணையதள செய்தி நிறுவனங்களுக்கும் இக்ராஃவின் செய்திகளை அனுப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 09 : கல்வி உதவித்தொகை பரிசீலனைக் கமிட்டி:
வருங்காலங்களில் இக்ராஃ மூலம் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை எந்த அடிப்படையில் வழங்கலாம் என்பது குறித்து கலந்தாலோசித்து செயற்குழுவுக்கு அறிக்கை தர கீழ்க்கண்டவர்களை இக்கூட்டம் தேர்ந்தெடுக்கிறது.
1. எஸ்.கே.ஸாலிஹ் (ஒருங்கிணைப்பாளர்)
2. எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ்
3. எம்.எம்.மொகுதூம் முஹம்மத் (சிங்கப்பூர்)
4. எம்.எம்.செய்யித் இஸ்மாஈல் (தம்மாம்)
5. எம்.இ.எல்.நுஸ்கி (ரியாத்)
6. குளம் எம்.ஏ.அஹ்மத் முஹ்யித்தீன் (ஜித்தா)
7. எஸ்.ஹெச்.ஷமீமுல் இஸ்லாம் (சென்னை)
தீர்மானம் 10 - புதிய உறுப்பினர்களுக்கு ஒப்புதல்:
இக்ராஃவின் கடந்த செயற்குழு கூட்டங்களில் (2013-14) அங்கீகரிக்கப்பட்ட 45 புதிய உறுப்பினர்களின் விண்ணப்பங்களை இக்கூட்டம் ஏகமனதாக அங்கீகரிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்கள் நன்றி கூற, ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கி அவர்கள் துஆ இறைஞ்ச, ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் மதியம் 01:30 மணியளவில் இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். இக்கூட்டத்தில், இக்ராஃ பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் அதன் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
என்.எஸ்.இ.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்
இக்ராஃ கல்விச் சங்கம் - காயல்பட்டினம்
இக்ராஃ கல்விச் சங்கத்தின் கடந்த (2013ஆம் ஆண்டு) வருடாந்திர பொதுக்குழுக் கூட்ட தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |