காயல்பட்டினம் புதுக்கடைத் தெரு - காட்டு தைக்கா தெரு குறுக்குச் சாலையில் அமைந்துள்ள செண்டு ஆலிம் தைக்கா அருகில், முஹம்மத் இஸ்மாஈல் (வயது 65) என்பவருக்குச் சொந்தமான குடிசையில் இன்று 14.30 மணியளவில் திடீரென தீ பற்றி எரிந்தது.
இதைக் கண்ணுற்ற சுற்றுவட்டாரத்தினர், அருகிலுள்ள தோட்டக் கிணற்றிலிருந்து தண்ணீர் இரைத்து, இயன்றளவு நெருப்பை அணைத்துக்கொண்டிருந்தனர்.
மறுபுறம் திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கும், காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது.
மின் வாரியத்திலிருந்து வந்த அலுவலர், அப்பகுதியில் மின் வினியோகத்தை நிறுத்தி, தீ எரிந்து சேதமுற்றிருந்த மின் கம்பி வடங்களை வெட்டியகற்றினார்.
திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில், ஏட்டு அனந்த பெருமாள், அலுவலர்கள் நாகமூர்த்தி, மாரியப்பன், சுந்தரவேல், ராஜ்குமார், கார்த்திக் ஆகியோர் அடுத்த சில நிமிடங்களில் நிகழ்விடம் விரைந்து வந்து தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பலானது. சுற்றுவட்டாரத்திலுள்ள வீடுகளின் சுவர்களும், மின் கம்பி வடங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
தகவல்:
ஹாஃபிழ் M.A.செய்யித் முஹம்மத் |