காயல்பட்டினத்திலுள்ள - திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ்கள் நலனுக்காக, காயல்பட்டினத்தில் அண்மையில் நடைபெற்ற மாநிலந்தழுவிய மாமறை குர்ஆன் மனனப் போட்டியையொட்டி ஹாஃபிழ்கள் கூட்டமைப்பு துவக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன் முறைப்படியான துவக்க விழா, 31.07.2014 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், அமைப்பிற்கான புதிய நிர்வாகிகள், ஆலோசகர்கள் மற்றும் அகில உலக பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 08) வெள்ளிக்கிழமை - ஜும்ஆ தொழுகைக்குப் பின், 13.30 மணியளவில், காயல்பட்டினம் ஹாஃபிழ்கள் கூட்டமைப்பின் அலுவலக திறப்பு விழா, சிறிய குத்பா பள்ளியையொட்டி அமைந்துள்ள மன்பஉல் பரக்காத் சங்க வளாகத்தில், அதன் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் கத்தீபு கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் ஏ.ஆர்.அப்துல் வதூத், கவுரவ ஆலோசகர்களான - அல்ஜாமிஉஸ் ஸகீர் சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைவரும் தக்பீர் முழங்க, நகரின் மூத்த மார்க்க அறிஞர் மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழீ அலாவுத்தீன் ஆலிம், அலுவலகத்தைத் திறந்து வைத்து, அரபி - தமிழ் மொழிகளில் துஆ பிரார்த்தனை செய்தார்.
பின்னர், அமைப்பின் செயல்திட்டங்களை இறுதி வடிவம் செய்வது குறித்தும், முதற்கட்டமாக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டுவது குறித்தும் விவாதித்து, முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், நகரின் மார்க்க அறிஞர்கள், மஹல்லா ஜமாஅத்துகளின் நிர்வாகிகள், ஹாஃபிழ்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை, அமைப்பின் ஏற்பாட்டாளர் ஏ.டபிள்யு.ஹிழ்ரு முஹம்மத் ஹல்லாஜ் ஒருங்கிணைப்பில், அமைப்பின் துணைச் செயலாளர்களான ஹாஃபிழ் என்.டி.ஸதக்கத்துல்லாஹ் ஜுமானீ, ஹாஃபிழ் எஸ்.கே.ஏ.நத்ஹர் ஸாஹிப், பொருளாளர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத், ஒருங்கிணைப்பாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை, துணை ஒருங்கிணைப்பாளர்களான ஏ.எம்.நூர் முஹம்மத் ஜக்கரிய்யா, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.செய்யித் முஹம்மத் தாவூதீ உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர் செய்திருந்தனர்.
காயல்பட்டினம் ஹாஃபிழ்கள் கூட்டமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|