ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் உள்ள காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமப் பகுதிகளை, ஆறுமுகனேரி வருவாய் கிராமத்துடன் இணைக்கும் பிரச்னை தொடர்பாக திருச்செந்தூரில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் தீர்வு காணப்பட்டது.
ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் உள்ள 18 வார்டுகளில் 10 வார்டுகள் காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமத்தில் உள்ளன. இதன் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் காயல்பட்டினத்தில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலகப் பணிகளுக்கு காயல்பட்டினத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் உள்ள காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமப் பகுதிகளை, ஆறுமுகனேரி வருவாய் கிராமப் பகுதிகளுடன் இணைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து பேரூராட்சி மன்றத்திலும் இரு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாஜக மற்றும் கட்சிகள் இணைந்து இக்கோரிக்கையை நிறைவேற்றக் கோரி ஆக. 10ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தது. இதையடுத்து திருச்செந்தூரில் வட்டாட்சியர் நல்லசிவம் தலைமையில் புதன்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
இதில், ஆறுமுகனேரி பேரூராட்சித் தலைவர் அ.கல்யாணசுந்தரம், நிர்வாக அதிகாரி தனசிங், காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆறுமுகனேரி பேரூராட்சிப் பகுதியில் உள்ள காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராமப் பகுதிகளை இணைப்பது தொடர்பாக ஆக. 30-க்குள் அரசாணை பெற்றுத் தரப்படுமென அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது.
தகவல்:
தினமணி
|