காயல்பட்டினம் நகராட்சியின் 01வது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அவ்விடம் ஓர் ஆண்டுக்கும் மேலாக வெற்றிடமாக உள்ளது.
இப்பொறுப்புக்கான இடைத்தேர்தல் செப்டம்பர் 18 வியாழன் அன்று நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 20ஆம் நாள் சனிக்கிழமையன்று நடைபெறும் என்றும், வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க இறுதி நாள் ஆகஸ்ட் 13 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினத்தின் 01ஆவது வார்டு உட்பட, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் வெற்றிடங்களுக்கும் ஒரே நாளில் நடைபெறவுள்ள இத்தேர்தல் குறித்து, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ம.ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
சென்னை - மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 18.09.2014 அன்று நடைபெறவுள்ள மேற்காணும் பதவியிடங்களுக்கான தேர்தலுக்கு, தொடர்புடைய அலுவலகங்களான
மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்திலும்,
தூத்துக்குடி மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு, தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்திலும்,
காயல்பட்டினம் நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திலும்,
பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு தொடர்புடைய பேரூராட்சி அலுவலகங்களிலும்,
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி அலுவலகத்திலும்,
வட்டார ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு மற்றும் சிற்றூராட்சி தலைவர் தேர்தலுக்கு தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலங்களிலும்,
சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு தொடர்புடைய சிற்றூராட்சி அலுவலகங்களிலும்
06.08.2014 முதல் 13.08.2014 வரை முற்பகல் 11.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 14:56 / 06.08.2014] |