“இந்தியாவில் வட்டியில்லா வங்கி அமைப்பதை நோக்கி” என்ற இலக்குடன் பயணித்து வரும், ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கம் நிறுவனத்தின் காயல்பட்டினம் கிளை அலுவலகம், கடந்த ஜூன் மாதம் 17ஆம் நாளன்று துவக்கப்பட்டது.
அந்நிறுவனத்தின் சார்பில், வெளிநாடு வாழ் காயலர்கள் பங்கேற்கும் ஈத் மிலன் - பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, இம்மாதம் 01ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 19.15 மணியளவில், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி (தாமரை ஸ்கூல்) வளாகத்தில் நடைபெற்றது.
ஜன்சேவா காயல்பட்டினம் கிளை துணைத்தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, செயலாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், துணைச் செயலாளர்களான எஸ்.இப்னு ஸஊத், எம்.எம்.முஜாஹித் அலீ, பொருளாளர் ‘மாஷாஅல்லாஹ்’ எஸ்.ஏ.கே.தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஹாஃபிழ் முஹம்மத் நூஹ் ரியாஸ் இறைமறை வசனங்களை கிராஅத்தாக ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய வாவு எஸ்.காதிர் ஸாஹிப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள - காயல்பட்டினத்தைச் சேர்ந்த மக்களின் நலன் காக்க அனைவருக்குமுள்ள பொறுப்புகள் குறித்தும், அந்நோக்கத்தில் ஜன்சேவாவால் வடிவமைக்கப்பட்ட வருங்கால செயல்திட்டங்கள் குறித்தும் அவர் தனதுரையில் விளக்கிப் பேசினார்.
‘ஜன்சேவா ஒரு கண்ணோட்டம்’ எனும் தலைப்பில், அதன் சென்னை மற்றும் காயல்பட்டினம் கிளைகளின் செயற்குழு உறுப்பினர் எஸ்.இப்னு ஸஊத் உரையாற்றினார்.
வட்டியில்லா பொருளாதாரத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவில் காயல்பட்டினம் உட்பட இதுவரை 21 கிளைகளைக் கொண்டு இயங்கி வரும் ஜன்சேவாவை, நாட்டின் அனைத்து கிராமங்கள் வரை கொண்டு செல்ல வேண்டிய அவசியமுள்ளதாகவும், தொழில் - வாகனக் கடன், சிறு சேமிப்புத் திட்டம், நிரந்தர வைப்புத் திட்டம் உள்ளிட்ட - இக்காலத்தில் பொதுமக்களுக்கு மிகவும் அவசியமான திட்டங்களை காயல்பட்டினம் கிளையில் விரைவில் அறிமுகப்படுத்த ஆவன செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தனதுரையில் கூறினார்.
அடுத்து, ஜன்சேவாவில் தொழில் கடன் வழங்கும் திட்டம் குறித்து செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. எஸ்.ஐ.புகாரீ தொழிற்கடனுக்கு விண்ணப்பிப்பவராகவும், ஜன்சேவா தென்மண்டல இயக்குநர் ஐ.அப்துர்ரஹீம், ‘மாஷாஅல்லாஹ்’ தாவூத் ஆகியோர் ஜன்சேவா சார்பில் அதன் நடைமுறைகளைச் செய்து அவருக்கு கடன் வழங்குவது போன்றும் வடிவமைக்கப்பட்டிருந்த இச்செய்முறை விளக்கம், 30 நிமிடங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து, ஜன்சேவா குறித்த - பார்வையாளர்களின் சந்தேகங்களுக்கு எஸ்.இப்னு ஸஊத், ஐ.அப்துர்ரஹீம் ஆகியோர் ஜன்சேவா சார்பில் விளக்கமளித்தனர்.
ஜன்சேவா காயல்பட்டினம் கிளை செயலாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் நிகழ்ச்சி முடிவுற்றது. நிகழ்ச்சியின் துவக்கம் முதல் நிறைவு வரை, ஜன்சேவா காயல்பட்டினம் கிளை துணைச் செயலாளர் எம்.எம்.முஜாஹித் அலீ நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான், தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், ஜித்தா காயல் நல மன்ற இணைச் செயலாளர் ‘மக்கா’ செய்யித் இப்றாஹீம், அதன் செயற்குழு உறுப்பினர் ‘மக்கா’ ஒய்.எம்.ஸாலிஹ், துபையிலிருந்து லேண்ட்மார்க் ராவன்னா அபுல்ஹஸன், துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம், அதன் உறுப்பினர் எஸ்.ஓ.பி.ஷக்காஃப், ஹாங்காங்கிலிருந்து ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் என்ற ஜமால் மாமா, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவர் அப்துல் அஜீஸ், அதன் நடப்பு செயலாளர் செய்யித் அஹ்மத், விளக்கு யு.நூஹ், தம்மாம் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் இம்தியாஸ், சீனாவிலிருந்து அப்துல் அஜீஸ், எம்.ஏ.இப்றாஹீம், அமெரிக்காவிலிருந்து கே.எம்.கிதுரு முஹம்மத் அப்பாஸ் உட்பட வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் வசிக்கும் காயலர்கள் சுமார் 125 பேர் கலந்துகொண்டனர்.
காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவர் அ.வஹீதா தலைமையில் சுமார் 15 பெண்களும் பங்கேற்றனர். அவர்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. பங்கேற்ற அனைவருக்கும் தேனீர் மற்றும் சிற்றுண்டி உபசரிப்பு செய்யப்பட்டதுடன், ஜன்சேவா குறித்து விளக்கும் வண்ணப் பிரசுரமும் வினியோகிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காயல்பட்டினம் ஜன்சேவா கிளை துணைப் பொருளாளர் ‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துல் ரஹ்மான், நிர்வாகிகளான எல்.டி.சித்தீக், ஏ.பி.டி. ஜாஹிர் ஹுஸைன், எல்.கே.கே.லெப்பைத்தம்பி, எல்.கே.எஸ்.இம்தியாஸ் அஹ்மத் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அபிமானிகள் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து, ஜன்சேவா தென்மண்டல இயக்குநர் ஐ.அப்துர்ரஹீம் காயல்பட்டணம்.காம் இடம் பேசுகையில் தெரிவித்ததாவது:-
வெளிநாடு மற்றும் வெளியூர்களில் வாழும் காயலர்களிடமிருந்து ஜன்சேவா கூட்டுறவு கடன் சங்கத்திற்கு நிதி திரட்டுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். நிதி திரட்டுவது என்றால் ஏதோ நன்கொடை திரட்டுவதாகக் கருதிவிடக் கூடாது. இது லாபம் வழங்கும் வகையிலான நிதி திரட்டல்.
பொதுவாக வெளிநாடுகள் - வெளியூர்களில் வசிக்கும் காயலர்கள் தமக்கென வங்கிக் கணக்கு வைத்து, அதில் தமது பணத்தை வைப்பில் வைத்திருப்பர். எடுத்துக்காட்டாக, ஒருவர் தனது வங்கிக் கணக்கில் 1 லட்சம் ரூபாய் வைப்பில் வைத்துள்ளார் எனில், அதற்கு வட்டியும் வரும். ஆனால் இஸ்லாமிய மார்க்க சட்டப்படி அந்த வட்டிப் பணத்தைப் பயன்படுத்த இயலாது.
இதனைத் தவிர்த்திட, அந்த வங்கிக் கணக்கிலிருந்து கனிசமான தொகையை - வட்டியில்லாத செயல்திட்டத்துடன் இயங்கும் ஜன்சேவாவில் டெபாசிட் செய்தால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் லாபக் கணக்கிலிருந்து, அவர் ஜன்சேவாவில் வைப்பு செய்த தொகைக்கேற்ப லாபம் வழங்கப்படும்.
இதுகுறித்த மேலதிக விபரங்களைப் பெற, காயல்பட்டினம் ஜன்சேவா கிளை அலுவலகத்தை - அதன் வேலை நேரங்களில் எப்போது வேண்டுமானாலும் தயங்காமல் அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
படங்கள்:
M.S..அப்துல் அஜீஸ்
(குவாங்ஸூ - சீனா)
ஜன்சேவா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 15:01 / 05.08.2014] |