கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி:
காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) பகுதியில் அமைந்துள்ளது கடற்கரை முஹ்யித்தீன் பள்ளிவாசல். சுற்றியுள்ள ஏழை மீனவ மக்கள் இப்பள்ளியில் நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்று வருகின்றனர்.
நிர்வாகம்:
‘ஜுவெல் ஜங்ஷன்’ கே.அப்துர்ரஹ்மான் இப்பள்ளியின் தலைவராகவும், ‘டேக் அன் வாக்’ என்.டி.இஸ்ஹாக் லெப்பை ஜுமானீ செயலாளராகவும், இப்பள்ளியின் நலனில் அக்கறை கொண்டுள்ள சிலர் அதன் செயற்குழு உறுப்பினர்களாகவும் சேவையாற்றி வருகின்றனர்.
இமாம் - பிலால்:
இப்பள்ளியில் ஐவேளை தொழுகை, மாணவர்களுக்கான மக்தப் உள்ளிட்ட அனைத்தையும் கவனித்துக் கொள்வதற்காக - கனிசமான தொகை மாத ஊதியத்துடன் இமாம் நியமனம் உண்டு. இதுவரை இப்பள்ளியில் இமாமாக இருந்தவர் சுமார் ஒன்றரை மாதங்களுக்கு முன் பணியை முடித்துச் சென்றுவிட்டதால், நடப்பாண்டு ரமழான் மாதத்தில் ஐவேளை தொழுகை நடத்துவதற்குத் தனியாகவும், தராவீஹ் தொழுகை நடத்துவதற்குத் தனியாகவும் என இருவர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
தொழுகை நேரம்:
ரமழான் மாதம் முழுக்க நாள்தோறும் இஷா தொழுகை 20.45 மணிக்கும், தராவீஹ் தொழுகை 21.00 மணிக்கும் நடைபெற்றது.
நோன்புக் கஞ்சி:
வழமை போல நடப்பாண்டிலும், இப்பள்ளியில் கஞ்சி தயாரிக்கப்பட்டு, மாலையில் ஊற்றுக்கஞ்சி வினியோகம் செய்யப்பட்டது. அதனை அப்பள்ளியைச் சுற்றியுள்ள ஏழை முஸ்லிம் மீனவ குடும்பத்தினர் பெற்றுச் செல்கின்றனர். ஆர்வத்துடன் கேட்கும் கிறிஸ்துவ மீனவ குடும்பத்தினருக்கும் கஞ்சி வழங்கப்படுகிறது.
இஃப்தார் நிகழ்ச்சி:
இங்கு நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் நாள்தோறும் 40 முதல் 60 பேர் வரை பங்கேற்றனர். அவர்களுள் பெரும்பாலோர் சிறுவர் - சிறுமியர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாக்கெட், கஞ்சி, வடை, அவ்வப்போது குளிர்பானம் பரிமாறப்படுகிறது.
ஆண்டுதோறும் ரமழான் கடைசி பத்து நாட்களுள் ஏதேனும் ஒரு நாளில், நகரப் பிரமுகர்கள் பங்கேற்கும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, இப்பள்ளி மக்தபில் பயின்று வரும் மாணவ-மாணவியருக்கு பெருநாள் புத்தாடை அன்பளிப்புச் செய்யப்படுவது வழமை. நடப்பாண்டு 22.07.2014 அன்று இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
07.07.2014 அன்று இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-
நடப்பாண்டு கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு இஃப்தார் மற்றும் மாணவ-மாணவியருக்கு பெருநாள் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹிஜ்ரீ 1433இல், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பாண்டு நகர பள்ளிவாசல்களில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |