"10 - 30 நாட்களில், 30 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்! செய்யவேண்டியது எல்லாம் வங்கி கணக்கு திறக்க ஒரேயொரு கையெழுத்து மட்டும் போடவேண்டும்."
இந்த ஆசை வார்த்தைகளை நம்பி - காயலர்கள் உட்பட பலர், ஆழத்தை அறியாமல் இதற்கு சம்மதிப்பதாக - இது குறித்த விஷயம் அறிந்த ஒருவர், காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் அண்மையில் தெரிவித்தார். பெயர் குறிப்பிட விரும்பாத அவர் தெரிவித்த தகவல்களின் தொகுப்பு இதோ:-
"காயல்பட்டினம் உட்பட தமிழகத்தின் சில ஊர்களில், இடைத்தரகர்கள் மூலம் ஒரு சிலர் அணுகப்படுகின்றனர். அவர்களிடம் - நீங்கள் 10 - 30 நாட்களில், 30,000 ரூபாய் முதல் 1 லட்சம் வரை சம்பாதிக்கலாம்! செய்யவேண்டியது எல்லாம் வங்கி கணக்கு திறக்க ஒரேயொரு கையெழுத்து மட்டும் போடவேண்டும்... அவ்வளவுதான்!” என ஆசை வார்த்தைகள் கூறப்படுகின்றன.
ஆர்வம் காண்பிக்கும் சிலரிடம் கூடுதல் விபரம் வழங்கப்படுகிறது. அதன்படி, பாஸ்போர்ட் வைத்துள்ள நபர்களுக்கு மட்டுமான இந்தப் பணியில், சம்மதிக்கும் நபருக்கு வெளிநாடு சென்று திரும்ப விசா, டிக்கெட் செலவுகள், தங்கும் வசதி போன்றவை பொறுப்பேற்கப்படும் என்றும், அவர்கள் செய்யவேண்டியது எல்லாம் - அவர்கள் அழைத்துச் செல்லப்படும் நாட்டில் - புதிய வங்கிக் கணக்கைத் திறக்க விண்ணப்பம் நிரப்பி கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து அழைத்து வந்து - ஏன் அந்த நபரின் பெயரில் வங்கி கணக்கு துவக்கப்படுகிறது என்ற விபரம் மட்டும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
ஏன் இவ்வாறு சம்பந்தமில்லாத நபர் பெயரில் வங்கி கணக்கு துவக்கப்படுகிறது என்று காயல்பட்டணம்.காம் இணையதளம் வினவியதற்கு, அந்த நாடுகளில் - ஏதாவது ஒரு காரணத்திற்காக சிலரால் புதிய வங்கிக் கணக்கு துவங்க முடியாத சூழல் இருக்கும் என்றும், அது போன்றவர்கள் - அந்நாடுகளில் எளிதாக இருக்கும் வங்கி கணக்கு திறக்கும் வசதியை இவ்வாறு தவறாகப் பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் -
"இவ்வாறு துவக்கப்படும் கணக்குகள் ஏதாவது தவறான வழியில் பயன்படுத்தப்பட்டால் - அந்த நாட்டில் யார் பெயரில் வங்கிக் கணக்கு துவக்கப்பட்டதோ - அவர்தான் சட்டப்படி குற்றவாளி. உண்மையாக - யாருடைய பயன்பாட்டுக்காக அந்த வங்கிக் கணக்கு துவக்கப்பட்டதோ, அவர் தப்பித்து விடுவார்.
கணக்கு துவக்கியவர், அடுத்த சில நாட்களிலேயே தன் தாய்நாட்டிற்குத் திரும்பியிருந்தாலும், அவரது விபரங்கள் அந்த நாட்டில் பாதுகாக்கப்பட்டு வரும். வருங்காலங்களில் - அவர் பெயரில் துவக்கப்பட்ட வங்கிக் கணக்கு தவறாக பயன்படுத்தப்பட்ட விபரத்தை அறியாமல், அவர் அந்த நாட்டிற்கு மீண்டும் வேறு காரியமாக வரும்போது - அங்கே அவர் கைது செய்யப்பட்டு, காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் ஆபத்து உள்ளதை அவர்கள் அறியாமல் உள்ளனர்..."
என்றார் அவர்.
பல ஆண்டுகள் கழித்தும் - சில அரசாங்கங்கள், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களை எவ்வாறு கண்காணிக்கிறது என்பதற்கு உதாரணம் கூறிய அவர், அண்மையில் ஒருவர், தன் மகன் வெளிநாட்டில் திடீரென இறந்ததால், அவரது உடலைக் காண அந்நாட்டிற்கு வந்ததாகவும், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு பதிவு செய்யப்பட்ட வழக்கு காரணமாக அப்போது அவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு 40 ஆண்டுகள் கழித்து மறக்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையில் அந்நாட்டிற்கு அவர் வந்தார் என்றும், "கணினிகள் இல்லாத காலத்தில் பதிவான புகார்கள் மீதே இந்த நடவடிக்கை என்றால், தற்போதைய கணினி உலகில் - இது போன்ற தவறுகளில் இருந்து தப்பிப்பது கடினம்" என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.
இது போன்று விபரம் அறியாமல், காயல்பட்டினத்திலிருந்து - இதுவரை, 10க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டுக்கு சென்று வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். |