காயல்பட்டினம் ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி நிர்வாகத்தின் சார்பில், பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவியருக்கு மார்க்க அடிப்படைக் கல்வியைப் பயிற்றுவிப்பதற்காக, மக்தப் ஹாஃபிழ் அமீர் எனும் பெயரில் புதிய மக்தப் இம்மாதம் 03ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 17.00 மணியளவில், பள்ளிவாசல் வளாகத்தில் துவக்கப்பட்டது.
துவக்க விழா நிகழ்ச்சியை - பள்ளியின் இமாம் மவ்லவீ அபுல் ஹஸன் ஷாதுலீ ஃபாஸீ கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். பள்ளி செயலாளர் எஸ்.இப்னு ஸஊத், மகுதூம் ஜும்ஆ பள்ளியின் மக்தப் மக்தூமிய்யா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் எம்.ஏ.முஹம்மத் இப்றாஹீம் (48), எஸ்.எச்.அப்துர்ராஸிக் ஆகியோர் - ஒவ்வொரு பகுதியிலும் மக்தப் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கிப் பேசினர்.
ஏ.டீ.முஹம்மத் அப்துல் காதிர் என்ற ஏ.டீ. ஹாஜியார் - மக்தபில் புதிதாக இணைந்துள்ள மாணவர்களுக்கு முதல் பாடத்தை முன்மொழிந்து ஓதி துவக்கிக் கொடுக்க, மாணவர்கள் அதை வழிமொழிந்து ஓதினர்.
இந்த மக்தபில், 4 வயது முதல் 14 வரை வயதுள்ள மாணவ-மாணவியர் 80 பேர் இணைந்துள்ளதாகவும், சிறுவர்களுக்கு ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி வளாகத்திலும், சிறுமியருக்கு அப்பள்ளிக்குட்பட்டு - பெரிய நெசவுத் தெருவில் இயங்கி வரும் ஹமீதிய்யா பெண்கள் தைக்கா வளாகத்திலும் தனித்தனியே வகுப்புகள் நடத்தப்படும் என்றும், மக்தப் வகுப்புகள் இம்மாதம் 10ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று துவங்கும் என்றும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மக்தப் மக்தூமிய்யா ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், அதன் முதல்வர் மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஷாதுலீ ஃபாஸீ, மக்தப் ஹாஃபிழ் அமீர் மேலாண்மைக் குழு தலைவர் கோபி அஹ்மத் முஹ்யித்தீன், அதன் உறுப்பினர்கள் ஜின்னா, ஜாஹிர் ஹுஸைன், எல்.கே. மேனிலைப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற ஆசிரியர் எம்.ஏ.அஷ்ரஃப் அலீ, பாதுல் ஹஸன் உள்ளிட்டோரும், ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த ஆண் - பெண் பொதுமக்களும் கலந்துகொண்டனர். பெண்களுக்கு ஹமீதிய்யா பெண்கள் தைக்காவில் ஒலிபெருக்கி வசதியுடன் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
தகவல்:
M.ஜஹாங்கீர்
படங்களுள் உதவி:
ஜாஹிர் ஹுஸைன்
ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|