கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில், உறுப்பினர் ஒருநாள் ஊதிய நன்கொடை மூலம் ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரம் தொகை நகர்நல நிதியாக சேகரிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்.
பொதுக்குழுக் கூட்டம்:
வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது கத்தர் காயல் நல மன்றத்தின் 21ஆவது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி இம்மாதம் 11ஆம் நாள் - ரமழான் பிறை 13 வெள்ளிக்கிழமை மாலையில், அலிஷான் ஓய்வுணவக கேளரங்கில், மன்ற உறுப்பினர் மக்தூம் மீரான் தலைமையில் நடைபெற்றது. மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் முன்னிலை வகித்தார். ‘ஜபல் அல் நூர் இன்டர்நேஷனல் (க்ளிக் ஆன்)’ நிறுவனத்தின் கத்தர் - குவைத் - பஹ்ரைன் - ஓமான் நாடுகளுக்கான நிர்வாக இயக்குநர் ஜுரைஜ் அப்துர்ரஹ்மான் இதிலோட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
மன்ற உறுப்பினர் எம்.என்.சுலைமான் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் ஏ.எச்.எஸ்.ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் அவர்கள் இறைமறையின் வசனங்களை கிராஅத்தாக ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
மன்றத்தின் மூத்த உறுப்பினர் சொளுக்கு செய்யித் முஹம்மத் ஸாஹிப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ‘இசைக்குயில்’ ஏ.எச்.ஃபாயிஸ் - ரமழானின் சிறப்பை விளக்கும் இஸ்லாமிய பாடல் பாடி அனைவரையும் இன்னிசை மழையில் நனைய வைத்தார்.
சிறப்பு விருந்தினர் அறிமுகம்:
சிறப்பு விருந்தினர் குறித்து அறிமுகவுரை ஆற்றிய கவிமகன் காதர் பேசுகையில், "மன்றத்தின் துவக்க காலம் முதலே, அதன் நற்பணிகளுக்காக துணை நின்று வருகின்ற எமது நிர்வாக இயக்குனர், எனது நீண்ட கால நண்பரும் ஆவார். அவரது நிறுவனத்தில் நான், முஹைதீன் தம்பி எனப்படும் மச்சான்ஜி மற்றும் ஆசாத் தெரு முஹம்மத் அலி ஆகிய மூன்று காயலர்களும், ஏராளமான தமிழர்களும் பணியாற்றி வருகின்றோம்... அவரது நல்ல மனதிற்கும், செயலுக்கும் இந்தப் புனிதமான மாதத்தில் பிரார்த்தனையுடன் கூடிய நன்றியைப் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்" என்றார்.
மறைந்தோருக்கு இரங்கல்:
காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் தலைவரும், காயல்பட்டினம் நாட்டாண்மை முஸ்லிம் முத்துச்சாவடி பொருளாளரும், நெல்லை முஸ்லிம் அநாதை நிலையத்தின் (MOC) முன்னாள் துணைத் தலைவரும், ‘மரைக்கார் இன்டஸ்ட்ரீஸ்’ எனும் தொழிற்சாலை மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கியவருமான தொழிலதிபர் மற்றும் சிறந்த சமூக சேவகர் - அண்மையில் காலமான மர்ஹூம் பாஜுல் அஸ்ஹப் ஹாஜியார் அவர்களின் சமூக செயல்பாடுகள் குறித்து மன்ற செய்தி தொடர்பாளர் கவிமகன் காதர் அவர்கள் விவரித்துக் கூறினார்.
அவர்களுக்கும், மன்றத்தின் முன்னாள் பொருளாளர் "டொஷிபா" முஹ்யித்தீன் தம்பி அவர்களின் தந்தை மர்ஹூம் இக்பால் மற்றும் நம் நகரில் அண்மையில் காலமான அனைவருக்காகவும் இரங்கல் தெரிவித்து மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை பாக்கவீ தலைமையில் பாத்திஹா துஆ ஓதி ஈஸால் தவாப் செய்யப்பட்டது.
சிறப்பு விருந்தினர் உரை:
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - ‘ஜபல் அல் நூர் இன்டர்நேஷனல் (க்ளிக் ஆன்)’ நிறுவனத்தின் கத்தர் - குவைத் - பஹ்ரைன் - ஓமான் நாடுகளுக்கான நிர்வாக இயக்குநர் ஜுரைஜ் அப்துர்ரஹ்மான் இதிலோட் சிறப்புரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம்:-
இறை விசுவாசமும், தாய்க்கு செய்யும் பணிவிடையும் ஒரு மனிதனை உயர்த்துகின்ற முதல் இரு காரணிகளாகும்...
இந்த உலகத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவனும், அவனது இரசூலும் பொதுவானவர்கள்... ஆதலால், அனைத்து மனிதர்களின் மீதும் அன்பும், பரிவும் காட்டுவதோடு, வறுமையில் தவிக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் ஜாதி, மத பாகுபாடின்றி உதவ வேண்டியது முஸ்லிம்கள் அவசியம் ஆற்ற வேண்டிய பணியாகும்.
இவ்வாறு பேசிய சிறப்பு விருந்தினர், தனதுரையின் நிறைவில், "பற்றி எரிகின்ற பாலஸ்தீனத்தின் அமைதிக்காக, இந்தப் புனிதமிகு ரமழானில் நாம் அனைவரும் துஆ செய்ய வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
சிறப்பு விருந்தினருக்கு மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
மன்ற செயல்பாடுகள்:
மன்றத்தின் நகர்நல செயல்பாடுகள் குறித்து மன்ற துணைத்தலைவர் வி.எம்.டி.அப்துல்லாஹ் விளக்கிப் பேசினார். அவரது உரையில் இடம்பெற்ற தகவல்கள்:-
>>>நீரிழிவு (சர்க்கரை) நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்குடன், நம் மன்றத்தின் ஒருங்கிணைப்பில் காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், மலேஷிய காயல் நல மன்றம், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புகள் இணைந்து, கடந்த பிப்ரவரி 22ஆம் நாள் நீரிழிவு நோய் விழிப்புணர்வு நடைப்பயணம் - KAYAL WALKATHON 2014 மற்றும் பிப்ரவரி 23ஆம் நாள் சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம் நிகழ்ச்சியை இணைந்து இங்கே சொடுக்குக!
>>>ஏழை எளிய மாணவ-மாணவியருக்கான பள்ளிச் சீருடை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது...
>>>வழமை போல இவ்வாண்டும் இக்ராஃ மூலம் மாணவர்களுக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது...
>>>இக்ராஃ வருடாந்திர நிர்வாகச் செலவினத்திற்காக வழமையான அனுசரணைத் தொகையை அதிகரித்து, கூடுதல் அனுசரணைத் தொகை வழங்கப்படுகிறது...
>>> ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் நிர்வாகச் செலவினத்திற்காக பங்களிப்பு செய்யப்படுகிறது...
>>> தக்வாவின் ஒருங்கிணைப்பில், இமாம் - முஅத்தின் நோன்புப் பெருநாள் ஊக்கத் தொகை செயல் திட்டத்தில் பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது...
>>> துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி நலனுக்காக நன்கொடை வழங்கப்பட்டுள்ளது...
>>>இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து, நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி (Inter School Quiz Competition) நடத்தப்பட்டுள்ளது...
இன்னும் பல செய்தும் / செய்யவும் உள்ளதால், உறுப்பினர் அனைவரது நிறைவான ஒத்துழைப்புகளும் இன்னும் அதிகளவில் தேவை என்று அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
வாழ்த்துரை:
அதனைத் தொடர்ந்து, மன்றத்தின் மன்றத்தின் மூத்த உறுப்பினர் கே.வி.ஏ.டி.செய்யித் அஹ்மத் கபீர் வாழ்த்துரை வழங்கினார்.
ஒற்றுமை, தர்மம் செய்தல் ஆகியவற்றின் அவசியம் மற்றும் பலன்கள் குறித்து அழகுற விளக்கிப் பேசிய அவர், "தான தருமங்களை செய்கிறவர்கள் ஒருபோதும் ஏழையாக மாட்டார்" எனும் நபிமொழியை மேற்கோள் காட்டி, புண்ணியங்கள் பூத்துக் குலுங்கும் இப்புனிதமிகு ரமழானில் நாம் அதிகமாக தான தருமங்களை வறியோருக்கு வழங்கிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மார்க்க சொற்பொழிவு:
அடுத்து, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை ஜுமானீ பாக்கவீ – “நோன்பு மற்றும் சதக்காவின் சிறப்புகள்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு - செலவு கணக்கறிக்கை அடங்கிய நிதிநிலை அறிக்கையை, மன்றப் பொருளாளர் அஸ்லம் சமர்பிக்க, கூட்டம் அதனை ஒருமனதாக அங்கீகரித்தது.
மன்ற உறுப்பினர்களுள் குறைந்த அளவில் சந்தா தொகையை வழங்கும் உறுப்பினர்கள் அதனை மறுபரிசீலனை செய்து சற்று அதிகப்படுத்தவும், இதுவரை சந்தா செலுத்தாத அல்லது சந்தா தொகை நிலுவையிலுள்ள உறுப்பினர்கள், மன்றத்தின் நகர்நலப் பணிகள் மென்மேலும் தொய்வின்றித் தொடர தமது சந்தாக்களை விரைந்து செலுத்தி நிலுவையைத் தவிர்திடும்மாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஒருநாள் ஊதிய நன்கொடை:
பின்னர், மன்ற உறுப்பினர்கள் - மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்காக தமது ஒருநாள் ஊதியத்தை, அதற்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெட்டியில் ஆர்வமுடன் நன்கொடையாக சேர்த்தனர்.
இதன்மூலம், ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரம் தொகை நகர்நல நிதியாக சேகரிக்கப்பட்டது. அத்தொகை மன்றக் கருவூலத்தில் சேர்ப்பிக்கப்பட்டது.
வாழ்த்துரை:
மன்றத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர் கே.வி.ஏ.டி.ஹபீப் முஹம்மத் வாழ்த்துரை வழங்கினார். மன்ற உறுப்பினர் ஹாபிழ் எஸ்.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி:
கூட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து, பல்வேறு உணவுப் பதார்த்தங்களுடன் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மக்ரிப் தொழுகைக்கு பிறகு, அனைவருக்கும் பஃபே முறையில் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது. அத்துடன் அனைத்து நிகழ்ச்சிகளும் இறையருளால் இனிதே நிறைவுற்றன. நிகழ்வுகள் அனைத்திலும், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் தம் குடும்பத்தினருடன் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
பொதுக்கூட்டம், இஃப்தார் நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்திற்கான ஏற்பாடுகளையும், எஸ்.ஏ.முஹ்யித்தீன் தம்பி (மம்மி), ஹாஃபிழ் எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை, ஹுசைன் ஹல்லாஜ் குழுவினர் சிறப்புற செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கத்தரிலிருந்து...
M.N.சுலைமான் மூலமாக
எஸ்.கே.ஸாலிஹ்
உள்ளூர் பிரதிநிதி
கத்தர் காயல் நல மன்றம்
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |