காயல்பட்டினம் இரத்தினபுரி அருகே அம்மன் பீடத்தை உடைத்து சேதப்படுத்தியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காயல்பட்டினம் இரத்தினபுரி மங்கள விநாயகர் கோயில் தெருவில் இசக்கி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 10) மதியம் நீல நிற காரில் வந்த மர்ம நபர்கள் கோயிலில் உள்ள இசக்கி அம்மன் பீடத்தை கடப்பாரை, மண்வெட்டியால் சேதப்படுத்தியதுடன், அதனையொட்டியுள்ள வேப்பமரத்தில் பக்தர்கள் குழந்தை நேர்த்திக் கடனாக கட்டியிருந்த தொட்டில்கள், பட்டுச் சேலைகளையும் எடுத்துச் சேதப்படுத்தி அருகில் உள்ள முட்புதரில் பீடத்துடன் தூக்கி வீசியுள்ளனர்.
கோயில் பீடம் சேதப்படுத்தும் தகவல் அறிந்ததும் பொதுமக்கள் திரண்டு சென்றதாகவும், மக்கள் வருவதைக் கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து காரில் ஏறி தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிகழ்வு காரணமாக அப்பகுதியில் பொதுமக்கள் திரளவே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் பி.பி.சக்திவேல், ஒன்றிய தலைவர்கள் கே.ஜெயசிங், ஜி.ராமசாமி, நகர துணைத் தலைவர் மணிகண்டன், ஆறுமுகனேரி நகர செயலாளர் கசமுத்து ஆகியோர் நிகழ்விடத்திற்கு வந்தனர்.
அதுபோல, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ், திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ், ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் சவீதா, திருச்செந்தூர் வட்டாட்சியர் நல்லசிவம் ஆகியோர் தகவலறிந்து நிகழ்விடம் வந்து, அம்மன் சிலை சேதப்படுத்திய மர்ம நபர்களை விரைவில் பிடிப்பதாக உறுதி அளித்ததுடன், சேதப்படுத்தப்பட்ட சிலையை மீண்டும் சீரமைத்தும் கொடுத்தனர்.
இந்நிகழ்வு தொடர்பாக கோயில் பூசாரி பேச்சிமுத்து அளித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |