அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1,000 ரூபாய் மதிப்புடைய “‘அம்மா’ குழந்தை நல பரிசு
பெட்டகம்”, அதாவது Amma Baby Care Kit வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் சுகாதாரத் துறை குறித்து முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையின் முழு விபரம் வருமாறு:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
ஏழை எளிய மக்களுக்கு, தரமான மருத்துவச் சேவை, தங்கு தடையின்றி கிடைத்திடவும், அனைத்து மக்களும் நோயற்ற வாழ்க்கை வாழவும்
தேவையான திட்டங்களை எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் கீழ்க்காணும்
திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
1) தாய் சேய் நலப் பிரிவுகளை மேம்படுத்தும் வகையில், மதுரை மற்றும் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள தாய் சேய் நலப்
பிரிவுகள் 50 கோடி ரூபாய் செலவில், மேன்மைமிகு மையங்களாக மேம்படுத்தப்படும் என என்னால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு, அதற்கான
பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் திருச்சி மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள்
மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனை ஆகியவற்றில் தலா 20 கோடி ரூபாய் வீதம் மொத்தம்
60 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று மேன்மைமிகு மையங்கள் ஏற்படுத்தப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம், மேற்படி மருத்துவமனைகளின் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைப் பிரிவுகள் வலுப்படுத்தப்படுவதோடு, 200 படுக்கைகள் கொண்ட
கட்டடம் கட்டப்பட்டு, நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும். மேலும், கூடுதலாக சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
2) திருத்தி அமைக்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், மாதவிடாய் சுகாதாரத் திட்டம், சீரமைக்கப்பட்ட மற்றும்
உயர்த்தப்பட்ட நிதி உதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், நடமாடும் மருத்துவமனைத் திட்டம் என்ற
வரிசையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1,000 ரூபாய் மதிப்புடைய “‘அம்மா’ குழந்தை நல பரிசு
பெட்டகம்”, அதாவது Amma Baby Care Kit வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பெட்டகம், குழந்தையை பாதுகாப்பாக பராமரிப்பதற்குத் தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தை உடை, குழந்தை படுக்கை, குழந்தை
பாதுகாப்பு வலை, குழந்தை நாப்கின், 100 மில்லி லிட்டர் அளவு கொண்ட எண்ணெய் டப்பா, பிளாஸ்டிக் குப்பியில் 60 மில்லி லிட்டர் ஷாம்பூ,
சோப்புப் பெட்டி, சோப்பு, நக வெட்டி, கிலுகிலுப்பை, பொம்மை, சுத்தமான கைகளுடன் குழந்தையை பராமரிக்க பிளாஸ்டிக் டப்பாவில் 250 மில்லி
லிட்டர் அளவு கை கழுவும் திரவம், பிரசவித்த தாய்க்கு 100 கிராம் எடையுள்ள சோப்பு, பிரசவித்த தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்,
தாய்ப்பாலை அதிகரிக்கவும் ‘சௌபாக்கியா’ சுண்டிலேகியம், தாய் மற்றும் பச்சிளம் குழந்தையைப் பராமரிக்க தேவையான பொருட்களை வைத்துக்
கொள்ள ஒரு பெட்டகம் என 16 பொருட்களை உள்ளடக்கியதாகும். நடப்பு ஆண்டில் இத்திட்டத்திற்கு 67 கோடி ரூபாய் செலவு ஏற்படும். இதனால்
6.7 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர்.
3) ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சைக்கு
இணையான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் கிடைக்கப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில், தனியார் அமைப்புகளுடன் இணைந்து டயாலிசிஸ் (DIALYSIS),
டயாக்னோசிஸ் (DIAGNOSIS), டயாபிடிஸ் (DIABETES) மையங்கள் நிறுவப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மையங்களில் கூடுதலாக
MRI மற்றும் C.T. ஸ்கேன்கள் நிறுவப்படும்.
4) சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து
தரும் பொருட்டு, புற நோயாளி பிரிவு, முடக்கியியல் பிரிவு, சிறு நீரகவியல் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் சிறு நீரகவியல் மருத்துவப் பிரிவு
ஆகியவற்றிற்கு 50 கோடி ரூபாய் செலவில் அடுக்கு மாடிக் கட்டடம் கட்டப்படும்.
5) நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கவும் ஏற்கெனவே உள்ள பெரிய வட்டங்களை பிரித்து, புதிய வட்டங்களை
அரசு உருவாக்கி வருகிறது. பல புதிய வட்டங்களில் தற்போது அரசு வட்ட மருத்துவமனை இல்லை. அரசு வட்ட மருத்துவமனை இல்லாத புதிய
வட்டங்களில், புதிய அரசு மருத்துவமனைகளை படிப்படியாக ஏற்படுத்தும் வகையில், முதற்கட்டமாக நடப்பாண்டில் 10 வட்டங்களில் உள்ள ஆரம்ப
சுகாதார நிலையங்கள் 25 கோடி ரூபாய் செலவில் வட்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்.
6) அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத 15 மாவட்டங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு
இணையாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற இலக்கை எய்தும் வகையில், மருத்துவர்கள், பணியாளர்களை நியமிக்கவும், உபகரணங்களை
வாங்கவும், மற்றும் கட்டடங்கள் கட்டுவதற்கெனவும் 97 கோடியே 40 லட்சம் ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள்
நடைபெற்று வருகின்றன. இந்த மாவட்ட தலைமை மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்தும் வகையில், 32 கோடியே
81 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதுவன்றி, மேலும் 12 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 31 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில்
கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
7) தமிழ்நாட்டில் தற்போது 17 மாவட்டங்களில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கரூர் மாவட்டத்தில் எந்த ஒரு அரசு
மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியும் இல்லாததைக் கருத்தில் கொண்டு, கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும், மாணவ, மாணவியரும்
பயன்பெறும் வகையில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.
8) அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கும் அவர்களுடன் வரும் உடனாளர்களுக்கும், நல்ல குடி தண்ணீர் கிடைக்க வேண்டும்
என்பதற்காக, நடப்பாண்டில் 45 மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகள், 30 மாவட்ட தலைமை
மருத்துவமனைகள், 240 வட்ட மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் என மொத்தம் 315 அரசு மருத்துவமனைகளுக்கு 40 கோடி ரூபாய்
செலவில் எதிர் சவ்வூடு பரவல் தண்ணீர் உபகரணம், அதாவது Reverse Osmosis Water Plant நிறுவப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன்.
9) ஏழை நோயாளிகள், அரசு மருத்துவமனைகளில் உயரிய மருத்துவ வசதி பெற வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவமனைகளுக்கு நவீன
மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, நடப்பாண்டில், மணப்பாறை, உடுமலைப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை,
வாலாஜா, திருப்பத்தூர், காரைக்குடி, அருப்புக்கோட்டை, பரமக்குடி, மேட்டுப்பாளையம், ஆத்தூர் மற்றும் செய்யார் ஆகிய 12 அரசு
மருத்துவமனைகளுக்கு எக்ஸ்ரே படத்தை பாதுகாத்து அனுப்பும் வசதியுடன் கூடிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் 13 கோடியே 20 லட்சம் ரூபாய்
செலவில் வழங்கப்படும்.
இதே போன்று, பொள்ளாச்சி, கடலூர், பென்னாகரம், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், பத்மநாபபுரம், கரூர், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி,
நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மேட்டூர் அணை, காரைக்குடி, கும்பகோணம், உதகமண்டலம்,
பெரியகுளம், திருவள்ளூர், தென்காசி, திருப்பூர், செய்யார், மன்னார்குடி, மணப்பாறை, கோவில்பட்டி, கள்ளக்குறிச்சி, விருதுநகர், வேலூர்
மற்றும் அரியலூர் ஆகிய 31 அரசு மருத்துவமனைகளுக்கு C-Arm எக்ஸ்ரே கருவி மற்றும் முடநீக்கியல் அறுவை சிகிச்சைக்கான கருவிகள் 9
கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிலும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
10) ஒவ்வொரு வட்டாரத்திலும் 30 படுக்கைகள் கொண்ட ஓர் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், கடந்த மூன்று
ஆண்டுகளில், 131 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் 122 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 8 ஆரம்ப
சுகாதார நிலையங்கள் 18 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் 30 படுக்கைகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக மேம்படுத்தப்படும்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
11) கிராமப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு, அவர்கள் வாழும் பகுதிகளிலேயே மருத்துவ வசதிகள் கிடைக்கப் பெற வேண்டும் என்பதன்
அடிப்படையில், கடந்த மூன்று ஆண்டுகளில், 172 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் 134 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில்
ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் 21 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் மேலும் 20 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.
12) மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவியர்கள், அவர்கள் தங்கி படிக்க வசதியாக, சென்னை மருத்துவக் கல்லூரியில்
6 கோடி ரூபாய் செலவில் நடப்பாண்டில் புதிய விடுதிகள் கட்டப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
13) அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு துல்லியமான பரிசோதனை முடிவுகள் அறிந்து சிகிச்சை தர வேண்டும் என்பதற்காக, MRI
ஸ்கேன், C.T. ஸ்கேன் போன்ற நவீன மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 5 கோடி ரூபாய்செலவில் புதியதாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் நிறுவப்படும் என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
14) அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள், முதுநிலைப் பட்டம் பயிலும் மருத்துவர்கள்,
முதுநிலை பட்டயம் பயிலும் மருத்துவர்கள், உயர்தர சிறப்பு படிப்பு பயிலும் மருத்துவர்கள், நரம்பு அறுவை சிகிச்சை முதுநிலை பட்டம் பயிலும்
மருத்துவர்கள் என 4,088 பயிற்சி மருத்துவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் பயிற்சிக் கால உதவித் தொகை உயர்த்தித் தரப்பட வேண்டுமென்று
கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் கோரிக்கையினை ஏற்று, பயிற்சி மருத்துவர்களுக்கான உதவித் தொகை 8,500 ரூபாயிலிருந்து 13,000 ரூபாயாகவும், முதுநிலைப்
பட்டம் பயிலும் மருத்துவர்களுக்கான உதவித் தொகை முதல் ஆண்டிற்கு 18,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும், இரண்டாம் ஆண்டிற்கு
19,000 ரூபாயிலிருந்து 26,000 ரூபாயாகவும், மூன்றாம் ஆண்டிற்கு 20,000 ரூபாயிலிருந்து 27,000 ரூபாயாகவும், முதுநிலை பட்டயம் பயிலும்
மருத்துவர்களுக்கான உதவித் தொகை முதல் ஆண்டிற்கு 18,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும், இரண்டாம் ஆண்டிற்கு 19,000
ரூபாயிலிருந்து 26,000 ரூபாயாகவும், உயர்தர சிறப்பு படிப்பு பயிலும் மருத்துவர்களுக்கான உதவித் தொகை முதல் ஆண்டிற்கு 21,000
ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், இரண்டாம் ஆண்டிற்கு 22,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், மூன்றாம் ஆண்டிற்கு 23,000
ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், நரம்பு அறுவை சிகிச்சை முதுநிலை பட்டம் பயிலும் மருத்துவர்களுக்கான உதவித் தொகை நான்காம்
ஆண்டிற்கு 21,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், ஐந்தாம் ஆண்டிற்கு 22,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், ஆறாம் ஆண்டிற்கு
30,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது தவிர, பயிற்சி மருத்துவர்களுக்கு ஆண்டு உதவித்
தொகை உயர்வு 400 ரூபாய் எனவும், முதுநிலை மருத்துவர்களுக்கு 700 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்படும். இதன் மூலம் அரசுக்கு 28
கோடியே 74 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.
எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள், அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மேலும் சிறந்து விளங்கவும், பொதுமக்கள்
குறிப்பாக ஏழை எளிய மக்கள் சிறப்பான உயர் தர மருத்துவ சேவையை அரசு மருத்துவமனைகளில் பெறவும், பயிற்சி மருத்துவர்கள் கூடுதல் உதவித்
தொகை பெறவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9.
|