“இஸ்லாமிய பார்வையில் நேர மேலாண்மை” எனும் தலைப்பிலான பயிலரங்கம், இம்மாதம் 21ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை, காயல்பட்டினம் துளிர் பள்ளி காணொளி கூடத்தில் பயிலரங்கம் நடைபெற்றது.
“இஸ்லாமிய பார்வையில் நேர நிர்வாகம்” எனும் நூலின் ஆசிரியரும், “வேர்கள்”, சிறையில் எனது நாட்கள்”, “மனித இனத்திற்கெதிரான குற்றம்”, “இம்பாக்ட் பக்கம்”, தேசியவாதமும், இஸ்லாமும்”, “மனதோடு மனதாய்” போன்ற பல நூற்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்தவருமான - ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் - காயல்பட்டினத்தைச் சேர்ந்த எழுத்தாளர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இப்பயிலரங்கத்தை வழிநடத்தினார்.
நேர மேலாண்மைக்கு இஸ்லாம் அளித்துள்ள முக்கியத்துவம், நேரத்தை வீணடிக்காமல் நன்முறையில் பயன்படுத்துவதெப்படி, நேரத்தை வீணடிக்கும் கருவிகளும் - காரியங்களும், மனிதனுக்கு வாழ்வில் கிடைத்துள்ள நேரத்தை திட்டமிட்டுப் பயன்படுத்துவதெப்படி உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் அவர் விளக்கிப் பேசியதோடு, பங்கேற்றோரின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்துப் பேசினார்.
முன்னதாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, மாணவர் முஹம்மத் ஸஜீத் இறைமறை குர்ஆனிலிருந்து சில வசனங்களை கிராஅத்தாக ஓதி துவக்கி வைத்தார். எஸ்.ஐ.புகாரீ - பயிலரங்கம் குறித்தும், நிகழ்ச்சி நடத்துநர் அறிமுகவுரையாற்றினார். நிறைவில், மாணவர் ஷமீல் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
நகரப் பிரமுகர்களான வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். மேடையில் அங்கம் வகித்த அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அரங்கத்தின் பின்பகுதியில் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
இப்பயிலரங்கத்தை, துளிர் அறக்கட்டளையுடன், உள்ளூர் இணையதளம் இணைந்து நடத்தியது. நிறைவில், துளிர் பள்ளி மாணவ-மாணவியருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இனிப்பு வழங்கினர்.
தகவல்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |