காயல்பட்டினம் கோமான் மேலத்தெரு, நடுத்தெரு, கீழத்தெரு, அருணாச்சலபுரம், கடையக்குடி (கொம்புத்துறை) ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய - காயல்பட்டினம் நகராட்சியின் 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிடம் உட்பட - தூத்துககுடி மாவட்டத்தில் வெற்றிடமாக உள்ள அனைத்து உள்ளாட்சிப் பொறுப்பிடங்களுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இம்மாதம் 18ஆம் நாள் வியாழக்கிழமையன்று 07.00 மணி முதல் 17.00 மணி வரை நடைபெற்றது.
01ஆவது வார்டு இடைத்தேர்தல்:
காயல்பட்டினம் 01ஆவது வார்டுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, அருணாச்சலபுரம் தேசிய துவக்கப்பள்ளியில் இரண்டு வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.
வாக்குப்பதிவு நிறைவுற்றதும், வாக்குப்பதிவு கருவிகள் முத்திரையிடப்பட்டு, வேட்பாளர்கள் மற்றும் அதிகாரிகளின் கைச்சான்றுகள் பெறப்பட்டு, காயல்பட்டினம் நகராட்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, நகராட்சி அலுவலக பதிவறையில் வாக்குப்பதிவு கருவிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அறையும் பூட்டி முத்திரையிடப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை:
வாக்கு எண்ணிக்கை இன்று (செப்டம்பர் 22) காலையில் சரியாக 08.00 மணிக்குத் துவங்கியது. துவக்கமாக, தபால் ஓட்டுகள் எண்ணுவதற்காக பெட்டி திறக்கப்பட்டது. தபால் ஓட்டுக்கள் எதுவும் பதிவாகியிருக்கவில்லை.
அடுத்து, பெண்கள் வாக்களித்த கருவியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில்,
பதிவான மொத்த வாக்குகள் 856
எஸ்.ஐ.அஷ்ரஃப் (சுயேட்சை) 614 வாக்குகளும்,
ம.அமலக்கனி (அதிமுக) 242 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
அடுத்து, ஆண்கள் வாக்களித்த கருவியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில்,
பதிவான மொத்த வாக்குகள் 634
எஸ்.ஐ.அஷ்ரஃப் (சுயேட்சை) 410 வாக்குகளும்,
ம.அமலக்கனி (அதிமுக) 224 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
ஆக, மொத்தம் பதிவான 1490 வாக்குகளில்,
எஸ்.ஐ.அஷ்ரஃப் (சுயேட்சை) 1024 வாக்குகளும்,
ம.அமலக்கனி (அதிமுக) 466 வாக்குகளும் பெற்றனர்.
எஸ்.ஐ.அஷ்ரஃப் (சுயேட்சை) வெற்றி:
இதன்மூலம், 558 வாக்குகள் வேறுபாட்டில், சுயேட்சை வேட்பாளர் எஸ்.ஐ.அஷ்ரஃப் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
அவருக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் தொடர்பு அதிகாரி சண்முகவள்ளி முன்னிலையில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், வெற்றிபெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
வெற்றியாளருக்கு வாழ்த்து:
சான்றிதழைப் பெற்ற பின்னர், நகராட்சி அலுவலக வளாகத்தை விட்டும் வெளியே வந்த அவருக்கு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ, கோமான் ஜமாஅத் தலைவர் ஜரூக், காயல்பட்டினம் நகராட்சியின் 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், 06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முகம்மது முகைதீன், 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்தினர். பின்னர் அவரை, கோமான் ஜமாஅத்தினர் நகர்வலமாக அழைத்துச் சென்றனர்.
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 10:30 / 18.09.2014] |