காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலை, தனது விதிமீறலைத் தொடர்ந்தால், இப்பிரச்சினையை தேசிய அளவிலான விழிப்புணர்வுப் பரப்புரையாகக் கொண்டு செல்லப்படும் என, இன்று 13.00 மணியளவில், காயல்பட்டினம் கே.டீ.எம். தெருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது - சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - SDPI அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் - காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW ஆலையால், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் புற்றுநோய் உட்பட கொடிய நோய்களால் பாதிக்கப்படுவதுடன், இப்பகுதியிலுள்ள மீன்வளம், உப்பளத் தொழில் முற்றிலும் நசிந்து வருகிறது.
இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி இப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் ஆலை நிர்வாகம் அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் செயல்பட்டு வருகிறது.
பல்லாண்டு காலமாக நிலவி வரும் இப்பிரச்சினையால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் இப்பாதிப்புகள் இன்னும் அதிகரிக்கும் சூழ்நிலையுள்ளது.
>>> தமிழக அரசு உடனடியாக ஒரு நிபுணர் குழுவைக் கொண்டு, ஆலையின் கழிவு வெளியேற்றப்படும் தன்மையைப் பரிசோதனை செய்ய வேண்டும்...
>>> பாதிப்படைந்த மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்...
>>> ஆலை நிர்வாகம் புதிதாகத் துவக்கவுள்ள அலகுகளை நிறுத்தி வைக்க வேண்டும்...
என எமது SDPI வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இதுகுறித்து நடந்து வரும் போராட்டங்களுக்கு எம் கட்சி முழு ஆதரவைத் தெரிவிப்பதோடு, இப்பிரச்சினையை தேசிய அளவிலான ஒரு விழிப்புணர்வுப் பரப்புரையாகக் கொண்டு செல்வோம்... இது விஷயத்தில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையெனில், மாவட்ட தலைநகரான தூத்துக்குடியில் விரைவில் போராட்டம் நடத்தப்படும்!
இப்பிரச்சினை தொடர்பாக, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA, நகர்மன்றத் தலைவர், ஜமாஅத்துகளின் தலைவர்கள் உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசியும், பேசவும் உள்ளோம்.
இவ்வாறு SDPI மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத் கூறினார். கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ஐ.உஸ்மான் கான், தூத்துக்குடி மாவட்ட தலைவர் காதர் முகைதீன், ‘விடியல் வெள்ளி’ இதழின் துணை ஆசிரியர் எம்.எஸ்.அப்துல் ஹமீத், நகர தலைவர் ஷேக் அப்துல் காதிர், செயலாளர் அப்துல் ரஹ்மான், மருத்துவர் அணி தலைவர் எஸ்.எம்.முகைதீன், பாப்புலர் ஃப்ரண்ட் அஷ்ரஃப் உள்ளிட்டோர் இதன்போது உடனிருந்தனர்.
SDPI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |