படத்திலுள்ள - சுமார் 65 வயது மதிக்கத்தக்க இப்பெண், 5 நாட்களுக்கு முன் திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனைக்குச் சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயக்கம் தெளிவித்து அவரிடம் விசாரித்தபோது, தான் காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்று கூறியிருக்கிறார். சிறிது நேரத்தில் அவர் மரணித்துவிட்டார். அவரது உடல் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்தது.
அவர் யாரென அறிவதற்காக காவல்துறையின் சார்பிலும், ஊடகங்கள் வாயிலாகவும், பொதுநல அமைப்புகள் மூலமாகவும் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், இன்று வரை அதற்கு உரிமை கோர யாரும் வரவில்லை. இதனையடுத்து, உறவினர் யாரும் இல்லாதவர் என திருச்செந்தூர் காவல்துறை தீர்மானித்து, திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அறிக்கை சமர்ப்பித்தது.
முஸ்லிம் பெண் என அறியப்பட்டதால், அவரது உடலை அடக்கம் செய்ய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்ட விருப்பம் ஏற்கப்பட்டு, அவர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து, தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக காயல்பட்டினம் சுலைமான் நகருக்கு உடல் எடுத்து வரப்பட்டது. ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியினர் - உடலைக் குளிப்பாட்டி கஃபன் ஆடையிட்டு நல்லடக்கத்திற்கு ஆயத்தம் செய்தனர்.
பின்னர் அங்கிருந்து, ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளிக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு, ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.
நல்லடக்கத்தின் நிறைவில் ஆற்றப்பட்ட உரையில், இந்த உடலைப் இத்தனை நாட்கள் பாதுகாத்து வைத்திருந்த திருச்செந்தூர் அரசு பொது மருத்துவமனை, நல்லடக்கம் வரை முழு ஒத்துழைப்புகளைச் செய்த திருச்செந்தூர் - ஆறுமுகநேரி காவல்துறையினர், நல்லடக்க ஏற்பாடுகளைச் செய்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை, குளிப்பாட்டி கஃபன் ஆடையிட்ட ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி, அடக்கம் செய்ய இட அனுமதி வழங்கிய ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளி நிர்வாகம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தகவல்:
முஹ்ஸின் முர்ஷித்
(மாவட்ட துணைச் செயலாளர் - தமுமுக)
தமுமுக குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|