ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு, அக்டோபர் 05. 06ஆம் நாட்களில் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் இன்பச் சிற்றுலாவாக ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
சிங்கப்பூர் ALOHA CHANGI BEACH FAIRY POINT CHALET 1 சுற்றுலா மாளிகையில், சிங்கப்பூர் காயல் நல மன்ற உறுப்பினர்களின் ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. புறப்படும் இடம், போக்குவரத்திற்கான வாகன வசதி, தங்குமிடம், உணவு ஆகியன குறித்து முன்னதாகவே உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில் உறுப்பினர்கள் யாவரும் குறித்த நேரத்தில் முறைப்படி ஆயத்தமாயினர்.
புறப்பாடு:
மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் ஏற்பாட்டில் உறுப்பினர்கள் குடும்பத்துடன் ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பேருந்து வசதி செய்யபட்டிருந்தது. அக்டோபர் 05ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 16.30 மணிக்கு லவண்டர் பீச் ரோட் ப்ளாக் ஒன்றிலிருந்து புறப்பட்ட பேருந்து 17.00 மணிக்கு பிடோக் வந்தடைந்தது. அப்பகுதியில் வசிக்கும் உறுப்பினர்களை ஏற்றிக்கொண்டு 17:15 மணிக்கு ALOHA CHANGI BEACH FAIRY POINT CHALET 1 சுற்றுலா மாளிகையை வந்தடைந்தது.
சிறார், பெண்கள் என அனைவரும் கட்டிடத்தின் மேல்தளத்தில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைகளுக்குச் சென்றனர். ஆண்களுக்கு இரண்டு பெரிய அறைகளும் கீழ்த்தளத்தில் உள்ள விசாலமான வரவேற்பறையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அஸ்ர் தொழுகை:
நிகழ்விடம் வந்தடைந்த சிறிது நேரத்தில் அஸர் தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட்டு, ஜமாஅத்துடன் தொழுகை நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து பெருநாள் தக்பீர் சொல்லப்பட்டது. இது - நம் சொந்த ஊரில், சொந்த மஹல்லாவில் தொழுவதைப் போன்ற உணர்வைத் தந்தது.
மாலை சிற்றுண்டி:
மாலை சிற்றுண்டிக்காக அனைவருக்கும் முந்திரிப் பருப்பு கலந்த காரா பூந்தி, இறால் முறுக்கு, பிஸ்கட்டுகள் மற்றும் ஆவிபறக்கும் காயல் இஞ்சி தேநீர் வழங்கப்பட்டது.
நண்பர்கள், உறவினர்கள், பெரியவர்கள் என அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அரட்டையில் மூழ்கினர். மழலையர் ‘வழமை போல’ உற்சாகத்துடன் கூச்சலிட்டபடி ஓடி விளையாடி மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.
மஃரிப் தொழுகை:
மஃரிப் வேளையை அடைந்ததும், தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட்டு, கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுகை நிறைவேற்றப்பட்டு, தக்பீர் முழக்கத்துடன் நிறைவுற்றது.
கருத்துப் பரிமாற்றமும், கலந்தாய்வும்:
மன்ற ஆலோசகர் தலைமையேற்க, செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் உறுப்பினர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் துவங்கியது. மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் தைக்கா ஸாஹிப் கிராஅத் ஓதி நிகழ்வைத் துவக்கி வைத்தார்.
மன்ற ஆலோசகர் பல்வேறு மேற்கோள்களைக் சுட்டிக்காட்டி மன்ற வளர்ச்சியில் உறுப்பினர்களின் மகத்தான பங்கு மற்றும் கடமை உணர்வுகள் குறித்து தலைமையுரையில் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
திட்டப் பணிகளுக்காக இதுவரை செலவிடப்பட்டுள்ள தொகை - இருப்பு பற்றி மன்றப் பொருளாளர் சுருக்கமாக விளக்கினார்.. நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு வழங்கப்பட்ட - நலிந்தோருக்கான சமையல் பொருளுதவி குறித்து மன்றச் செயலாளர் விளக்கினார்.
அதை தொடர்ந்து நடைமுறையில் உள்ள செயல்திட்டங்கள் குறித்த நிறை-குறைகளையும், கருத்துக்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் பரிமாறிக்கொண்டனர். விவாதிக்க வேறு அம்சங்கள் இல்லாத நிலையில் துஆ பிரார்த்தனையுடன் கூட்டம் நிறைவுற்றது.
பெருநாள் நன்கொடை சேகரிப்பு:
உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே வெள்ளை நிற வெற்றுறை (கடித உறை) வழங்கப்பட்டது. இந்திய மதிப்பின்படி 35 ஆயிரம் ரூபாய் உறுப்பினர்கள் மூலம் பெறப்பட்டு, நகர்நலத் திட்டங்கள் வகைக்காக மன்றக் கருவூலத்தில் அத்தொகை சேர்க்கப்பட்டது.
காயலர் கைவண்ணத்தில் (கலவை) களறி சாப்பாடு:
மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களின் கை வண்ணத்தில் நெய்ச்சோறு, வெறுஞ்சோறு, கத்திரிக்காய் மாங்காய், புளியானம், மோர் என இரவு விருந்துக்குத் தேவையான அனைத்தும் தயார் நிலையில் இருந்தன.
குடும்பத்துடன் சிங்கையில் வசிக்கும் உறுப்பினர்கள் தத்தம் வீடுகளிலிருந்து சமைத்த களறிக் கறியைக் கொண்டு வந்திருந்தனர். அவையனைத்தும் ஒன்றாகக் கலந்து ஒரு பாத்திரத்தில் இரவு உணவுக்காக வைக்கப்பட்டது.
இரவு இஷா தொழுகைக்குப் பின், அனைவருக்கும் காயல் பாரம்பரிய உணவான களறிச் சோறு ஸஹன் முறையில் பரிமாறப்பட்டது. சுவை, மணம் நிறைந்த இவ்வுணவை அனைவரும் இன்பமுடன் உண்டு மகிழ்ந்தனர்.
இரவு, இளைஞர் பட்டாளத்தின் வழக்கமான அரட்டை அரங்கம் நடந்தது. சிலர் காற்று வாங்க கடற்கரைக்குச் சென்றிருந்தனர். களைப்புடன் இருந்தோர் உறங்கச் சென்றனர். அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் தேநீர் வழங்கப்பட்டது.
காலை (பசியாற) சிற்றுண்டி:
மறுநாள் (அக்டோபர் 06) உறுப்பினர் பாக்கர் கைவண்ணத்தில் காலை சிற்றுண்டியாக இறால் சேமியா கமகமக்க சூடாகப் பரிமாறப்பட்டது.
விளையாட்டு:
இளவட்டங்கள் மட்டைப்பந்து விளையாட்டில் மும்முரமாக மூழ்கியிருந்தனர்.
இடைவேளையில் கறிக்கஞ்சி:
இடைப்பசியைப் போக்குவதற்காக, 11.00 மணியளவில் காயல் கறிக்கஞ்சி பரிமாறப்பட்டது.
மதிய உணவாக மட்டன் பிரியாணி:
குர்பான் இறைச்சியில் மதிய உணவுக்காக பிரியாணி சமைக்கப்பட்டது. ஹிஜாஸ் மைந்தனின் கை வண்ணத்தில் கலர்ஃபுல் பிரியாணி, வெங்காய சம்பல், பொறித்த கோழி, அவிச்ச முட்டை என படு அமர்க்களமான சாப்பாடு தயாராகிக் கொண்டிருந்தது.
லுஹர் தொழுகைக்குப் பின், அனைவருக்கும் பிரியாணி சோறு ஸஹன் முறையில் பரிமாறப்பட்டது. அத்துடன் குளிபானங்கள், மினரல் வாட்டர் வழங்கப்பட்டது.
இத்த முகத்துடன் இல்லம் திரும்பல்:
16.00 மணியளவில் தேநீர் பருகிய பின்னர், இரு நாட்கள் போனதே தெரியவில்லை எனும் ‘வழமையான’ புலம்பலுடன் உறுப்பினர்கள் புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். வரும்போது அவர்களிடமிருந்த இருந்த உற்சாகமும், ஆர்வமும் புறப்படும்போது புலப்படவில்லை. குனிந்த தலை நிமிராமல் காத்துக்கொண்டிருந்த அவர்கள், வீடு திரும்ப வாகனத்தை எதிர்பார்ப்பதற்காக மட்டும் அவ்வப்போது தலை தூக்கிப் பார்த்தனர். குறித்த நேரத்தில் வந்த பேருந்தில் அனைவரும் வசிப்பிடம் திரும்பிச் சென்றனர்.
இத்தகைய ஒன்றுகூடல்களும் சிற்றுலாக்களும் மன அழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சியைத் தரும் என்பது எத்துனை உண்மை! வாய்ப்பளித்த வல்லோனுக்கே எல்லாப்புகழும். அல்ஹம்ந்து லில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) ஹஜ் பெருநாளையொட்டி சிங்கை காயல் நல மன்றத்தின் சார்பில் நடைபெ்றற இன்பச் சிற்றுலா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |