காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, மழலையரின் உற்சாகக் கொண்டாட்டங்களுடன் களைகட்டியது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் அதன் செயலாளர் எம்.செய்யித் அஹ்மத் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
ஹாங்காங் நாட்டில், இம்மாதம் 05ஆம் நாள் (ஹிஜ்ரீ 1435 துல்ஹஜ் பிறை 10) ஞாயிற்றுகிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி:
பெருநாளை முன்னிட்டு, நமதூர் மக்கள் அனைவரையும் ஒன்றாகக் காணச் செய்து, மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்வதற்காக, கடந்தாண்டுகளைப் போல இவ்வாண்டும் நமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பெருநாள் கொண்டாடப்பட்ட 05.10.2014 ஞாயிற்றுகிழமையன்று, ஹாங்காங்கிலுள்ள Middle Road Park (Sindhi Park) பூங்காவில் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்று 19.00 மணியளவில் துவங்கிய இந்நிகழ்ச்சியை ஹாஃபிழ் ஏ.எச்.ஷாஹுல் ஹமீத் நுஅய்ம் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். ஹாஃபிழ் வி.எம்.டீ.முஹம்மத் ஹஸன், அமைப்பின் செயலாளர் செயலாளர் எம்.செய்யித் அஹ்மத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். அனைவரையும் வரவேற்றுப் பேசிய செயலாளர், பேரவையின் செயல்பாடுகளையும் விளக்கிப் பேசினார்.
தலைமையுரை:
பேரவைத் தலைவர் ஏ.டபிள்யு.கிழுர் முஹம்மத் ஹல்லாஜ் தலைமையுரையாற்றினார். அவரது உரை வருமாறு:-
முன்னவனாம் இறைவனுக்கே மொழிகின்ற புகழனைத்தும் அல்ஹம்துலில்லாஹ். நம் உயிர் நிகர்த்த, நம் உயிரையும் மிகைத்த கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் , அவர்களின் வழித்தொடர்ந்தோர், தொடர்வோர் அனைவர் மீதும் இறையருள் நிறையுமாக.
மகிழ்ச்சி நிறைந்த இந்த உயரிய அவையில் சங்கமித்துள்ள காயலின் சொந்தங்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.
தியாகத் திருநாளை முன்னிட்டு, வான்புகழ் காயல்பதியை வாழும் ஊராக கொண்ட நாம், இங்கு பெரும் மகிழ்வோடு குழுமியுள்ளோம்.
சங்கை மிகுந்த இந்த சந்திப்புக்கு அருள் புரிந்த வல்ல இறைவனுக்கே மீண்டும் எல்லாம் புகழும் உரித்தாகட்டும். ஹாங்காங் காயல் ஐக்கிய பேரவையில் நமது ஊரைச் சேர்ந்த பலர் அங்கம் வகிக்கிறார்கள். இது வரவேற்புக்குரிய, வாழ்த்துக்குரிய ஒன்றாகும் .
இருப்பினும், இன்னும் பலர் தங்களை இதில் இணைத்துக் கொள்ளாமல் இருப்பது ஆதங்கத்திருக்குரியதே ஆகும். பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழுகின்ற காயல் பதியில் கொள்கையால், கோட்பாட்டால், இலட்சியத்தால் நம்மிடையே சிற்சில கருத்து வேறுபாடுகள் இருப்பதை நாம் மறைத்து விடவும் முடியாது, மறுத்து விடவும் முடியாது.
இருப்பினும், ஊரின் முன்னேற்றத்திற்கு, சமுதாய முன்னேற்றத்திற்கு, இந்த கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியிலும், பொது தளத்தில் நாம் ஒன்றிணைய முடியும். இதற்கு எடுத்துக்காட்டுதான் ஹாங்காங் காயல் ஐக்கிய பேரவை போன்ற வெளிநாடுகளில் இயங்கக் கூடிய காயல் நல மன்றங்களாகும்.
இதுபோன்ற மன்றங்களின் மூலம் கருத்து வேற்றுமைக்களுக்கிடையில் ஒற்றுமைக்கண்டு, அறப் பணிகளை சிறப்புடன் ஆற்ற முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.
காயல் நகரை சேர்ந்த இங்கு வாழும் அனைவரும் அண்ணன் தம்பிகளாக, உடன் பிறப்புக்களாக ஒன்றிணைந்து ஊர் நலம் பெற்று உயர உறுதி ஏற்போம். நம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை நாம் தியாகம் செய்வோம் . அதற்கு இந்த தியாகத் திருநாளில் உறுதி ஏற்போம்.
இங்கு வருகை புரிந்துள்ள உங்கள் அனைவரையும் பேரவையின் தலைவர் என்ற முறையில் இதயப்பூர்வமாக வரவேற்று, தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன், ஈத் முபாரக்.
எல்லாம் வல்ல இறைவன் நம் நல்ல நோக்கங்களை அங்கீகரிப்பானாக, வெற்றி அடையச் செய்வானாக . வாய்ப்புக்கு நன்றி . விடைபெற்று அமைகின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும்.
மாஷா அல்லாஹ், அனைவரின் முயற்சியாலும் ஒன்றுகூடல் நிகழ்ச்சியிலும் அதனை தொடர்ந்த 3 நாட்களிலும் 49 பேர் தம்மை உறுப்பினர்களாக்கி கொண்டுள்ளனர். இது வரை உறுப்பினர்களாகாதவர்கள் தங்களை உறுப்பினர்களாக்கிக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு பேரவைத் தலைவர் பேசினார்.
வாழ்த்துரை:
செயற்குழு உறுப்பினர் தைக்கா உபைதுல்லாஹ், இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) தலைவர் எம்.எஸ்.ஷாஜஹான், மயிலாடுதுறையை சார்ந்த புகழ்பெற்ற தொழிலதிபர் ஏ.எச்.ரஃபீயுதீன் ஆகியோர் நல்ல பல கருத்துக்களை உள்ளடக்கி வாழ்த்துரையாற்றினர். ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா தனக்கே உரித்தான நகைச்சுவையோடும், நல்லுபதேசமாகவும் பேசினார்.
மழலையரின் பலூன் கொண்டாட்டம்:
கடந்தவருடம் போல், இவ்வாண்டும் குழந்தைகளுக்காக கண்கவர் பலூன்கள் - பல வண்ணங்களில், பல வகைகளில், பல வடிவங்களில் - அதற்கான சிறப்பு நிபுணரால் தயாரித்து வழங்கப்பட்டது.
குழந்தைகள் விரும்பிய வண்ணங்களிலும், வடிவங்களிலும் பலூன்களை உடனுக்குடன் செய்து கொடுத்தது, அவர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது. இந்த மகிழ்ச்சியை மழலையருக்கு அளிப்பதற்காகவென்றே இந்த ஏற்பாடு பேரவையின் சார்பில் கவனத்துடன் செய்யப்பட்டிருந்தது.
குலுக்கல் முறையில் பரிசு:
பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவரையும் ஆர்வப்படுத்தும் நோக்குடன், இவ்வாண்டு புதிதாக குலுக்கல் முறையில் பரிசுக்குரியோர் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சி, குழந்தைகள் - தாய்மார் அனைவரையும் பரபரப்புடன் பங்கேற்கச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
நகர்நல நிதி சேகரிப்பு:
இந்நிகழ்ச்சியில், பொதுநல நிதி சேகரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவரும் தாராளமாக நிதி வழங்கினர். நிறைவில், அமைப்பின் பொது நிதிக்காக ரூபாய் 28 ஆயிரம் தொகையும், ஜகாத் நிதிக்காக ரூபாய் 20 ஆயிரம் தொகையும் மற்றும் மகளிரிடமிருந்து வருடந்திர பங்களிப்பாக ரூபாய் 50 ஆயிரம் தொகையும் சேகரிக்கப்பட்டது.
பங்கேற்றோர்:
இந்நிகழ்ச்சியில், ஹாங்காங் மற்றும் சீனா வாழ் காயலர்கள் சுமார் 250 பேர் ஆர்வத்துடன் திரளாகக் கலந்துகொண்டனர். பல நாடுகளிலிருந்து காயலர்கள் சிறப்பழைப்பாளர்களாகவும் கலந்துகொண்டனர்.
அனைவருக்கும் சுவையான தேனீருடன், இனிப்பு, தின்பண்டங்கள் பரிமாறப்பட்டன. மழலையருக்கு ஜூஸ் மற்றும் சாக்லேட் ஆகியன கூடுதலாக வழங்கப்பட்டன.
செயலாளர் எம்.செய்யித் அஹ்மத் நன்றி கூற, ஹாஃபிழ் பி.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை அவர்களின் இறை வேண்டலுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றன. மொத்தத்தில், பெருநாளையடுத்த இரவுப் பொழுது அனைவருக்கும் இன்பமாகக் கழிந்தது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே! நிகழ்ச்சிகளின் நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
மேலேயுள்ள 3 குழுப்படங்களையும் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக!
இவ்வாறு, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் பேரவை சார்பில், கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளையொட்டி நடத்தப்பட்ட பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாங்காங் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |