பள்ளிக்கூடம் செல்லும் சிறாருக்கு இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியைப் பயிற்றுவிப்பதற்காக, காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள மர்ஹூம் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.முஹம்மத் பாதுல் அஸ்ஹப் அவர்களின் மகன் ஹாஜி எம்.பி.ஏ.காஜா முஹ்யித்தீன் இல்லத்தில், பாஸ் கல்விக் குழுமத்தின் சார்பில், ‘மக்தப் செய்யித் ஹலீமா’ என்ற பெயரில், புதிய மக்தப் இன்று துவக்கப்பட்டுள்ளது.
இன்று (அக்டோபர் 15 புதன்கிழமை) 17.15 மணியளவில் நடைபெற்ற துவக்க விழாவிற்கு, ஹாஜி வேனா முஹம்மத் அலீ என்ற அலியப்பா தலைமை தாங்கினார். ஹாஜி டீ.வி.செய்யித் அஹ்மத், ஹாஜி எம்.பி.ஏ.ஹாஜா முஈனுத்தீன், ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், ஹாஃபிழ் கிஸார் முத்துவாப்பா, ஹாஜி பீ.எம்.எஸ்.ஹல்லாஜ், ஹாஜி பிரபு நூஹ் நெய்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் எம்.பி.ஏ.ஹாஜா முஈனுத்தீன் கிராஅத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. மக்தப் செய்யித் ஹலீமா ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான பிரபு எம்.என்.ரியாஸுத்தீன் மக்தப் மற்றும் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் உட்பட - உலகின் 32 நாடுகளில் - ஒரே பாடத்திட்டத்தின் கீழ் இந்த மக்தப் மத்ரஸாக்கள் செயல்படும் விதம் குறித்தும், பாடத்திட்டங்கள் குறித்தும், தீனிய்யாத் மக்தப் மத்ரஸாக்களின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஷாதுலீ விளக்கவுரையாற்றினார்.
மக்தப் மத்ரஸாக்களின் அவசியம், அவை இல்லாவிட்டால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மக்தப் செய்யித் ஹலீமா பொறுப்பாளர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ சொற்பொழிவாற்றியதோடு, இந்நிறுவனத்தில் பயில்வதற்காக புதிதாக மாணவ-மாணவியருக்கு திருமறை குர்ஆனின் முதல் அத்தியாயத்தை ஓதிக்கொடுத்து, பாடங்களை முறைப்படி துவக்கி வைத்தார்.
உரையாற்றிய அனைவருக்கும் மக்தப் நிர்வாகத்தின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
ஹாஃபிழ் எச்.பி.என்.ஷாஹ்ஜாத் அல்புகாரீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ஹாஃபிழ் பிரபு மஹ்மூத் மஃபாஸ், ஹாஃபிழ் பிரபு மஹ்மூத் முபாரக், பிரபு செய்யித் அத்னான், அஹ்மத் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
இப்புதிய தீனிய்யாத் மக்தப் மத்ரஸாவில், 12 மாணவ-மாணவியர் துவக்கமாக இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர், அவர்கள் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
[கூடுதல் படம் இணைக்கப்பட்டது @ 08:09 / 16.10.2014] |