சஊதி அரபிய்யாவில் இம்மாதம் 04ஆம் நாளன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாள் விடுமுறையையொட்டி, ஜித்தா, ரியாத், தம்மாம் வாழ் காயலர்கள் மதீனா முனவ்வராவுக்கு - இம்மாதம் 06ஆம் நாள் திங்கட்கிழமையன்று சுற்றுலா சென்று வந்துள்ளனர். இதுகுறித்து பெறப்பட்டுள்ள தகவல் வருமாறு:-
ஈதுல் அழ்ஹா – புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு புண்ணியம் பூத்து குலுங்கும் புனிதத்தலமான மதீனாவில் ஒன்று கூடிய ஜித்தா,ரியாத் மற்றும் தமாம் நகர்களில் வாழும் காயலர்கள் மகிழ்வுடன் ஜியாரத் மற்றும் எல்லா நல்லமல்களையும் அழகுடன் நிறைவேற்றியும், அவரவர் இடம் நோக்கி திரும்பும் வழியில் கடந்த 06-10-2014,திங்கள் அன்று இன்பச் சிற்றுலாவினை மேற்கொண்டனர்.
மாண்புயர் மஸ்ஜிதுன் நபவியில் அகிலத்திற்கோர் அருட்கொடை அண்ணல் அஹமது நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்கள்தம் அன்பு தோழர்கள் அமீருல் முஹ்மினீன்கள் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு, உமருல் பாரூக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களையும் ஜியாரத் செய்தும் பின்னர் இஸ்லாமிய வரலாற்றில் பதிவான அருமைமிகு தோழர் சல்மான் பாரிஸ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் தோட்டத்து கிணறையும் சென்று பார்த்தனர்.
அடுத்து இஸ்லாத்தின் முதல் போரும் வெற்றிப் போருமான பதறு போர் நடந்த புண்ணிய தலம் சென்று ஜியாரத் செய்தும் அங்குள்ள வரலாற்று சிறப்புக்குரிய மஸ்ஜிதுல் ஹரீஸ் எனும் பள்ளியில் லுகர், அசர் தொழுகைகளை கசராக தொழுதனர்.
மதீனாவில் குர்பானி கறியில் தயார் செய்து கொண்டு வந்திருந்த சவூதியின் தனி சிறப்புணவான மந்தி சாப்பாடு அனைவருக்கும் விருந்தளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து ஜித்தாவிற்கு போகும் வழியில் சுமார் 100 கிலோமீட்டர் முன்னர் உள்ள அழகிய கடற்கரை சுற்றுலா தளமான " தூவல் "எனும் நகர் சென்றும் இனிய மாலைப்பொழுதை இன்பமுடன் கழித்தனர். மழலைகள் காற்றில் பட்டம் விட்டு பரவசமடைந்தனர். மக்ரிப், இஷா தொழுகையையும் நிறைவேற்றி அங்கிருந்து பயணித்தனர்.
இதனை அடுத்து அதன் அருகில் இருக்கும் புதிதாக உதயமாகியுள்ள மிக பிரபலமான "அன்பாரிய" எனும் கடல் உணவு உணவகம் சென்று ஒருவொருக்கொருவர் செய்திகளை உளப்பெருக்குடன் பரிமாறியும் இரவு விருந்தை மனமகிழ்வுடன் உண்டு மகிழ்ந்தனர்.
பின் அங்கிருந்து இரவு 1-00 மணியளவில் புறப்பட்டும் இறையருளால் ஜித்தா வந்தும் இது போன்ற நல்லதோர் நிகழ்வினை நசீபாக்கி தந்த வல்ல அல்லாஹ்விற்கு நன்றிகளை பரிமாறியும் அவரவர் இல்லம் மகிழ்வுடன் திரும்பி கொண்டார்கள் .அல்ஹம்துலில்லாஹ்.
இனிய இப்பயணத்திற்க்கான முழு ஏற்பாடுகளை சகோதரர்கள் ஹாஜி,குளம் எம்.ஏ.அஹமது முஹியத்தீன் மற்றும் ஹாஜி,பிரபு எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னாவும் மிக அழகிய முறையில் செய்து இருந்தார்கள்.நன்றி.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஜித்தாவிலிருந்து...
சட்னி S.A.K.செய்யித் மீரான்
படங்கள்:
சட்னி S.A.K.முஹம்மத் உமர் ஒலி |