முறைப்படுத்தப்பட்ட அடிப்படையில், இம்மாதம் 17ஆம் நாள் முதல் நகரில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்புப் பணியைத் துவக்கிட, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை கலந்தாலோசனைக் கூட்டம், இம்மாதம் 12ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று 19.30 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவில் அமைந்துள்ள - கட்சியின் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மது அப்துல் காதர் மன்ஸிலில் நடைபெற்றது.
கே.எம்.என்.முஹம்மத் உமர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - கட்சியின் நகர கிளை தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையுரையாற்றினார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை, இளைஞரணி நகர அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
தீர்மானம்:
கூட்டத்தில் பின்வருமாறு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:-
கட்சியின் மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்ட படி, முறைப்படுத்தப்பட்ட உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தின் கீழ், காயல்பட்டினம் நகரின் அனைத்து வார்டுகளிலும் உறுப்பினர் சேர்க்கையை முழுவீச்சில் செய்வதென்றும், அனைத்து மஹல்லா ஜமாஅத்துகளின் ஒத்துழைப்புடன் - இதுகுறித்து பொதுமக்களுக்கு அறியத் தருவது என்றும், உறுப்பினர் சேர்க்கையை வீடு வீடாகச் சென்று செய்வது என்றும்,
உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை முறைப்படி துவக்கிடும் வகையில், 17.10.2014 வெள்ளிக்கிழமையன்று காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளியிலும், 24.10.2014 வெள்ளிக்கிழமையன்று அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், மகுதூம் ஜும்ஆ பள்ளி, பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளி ஆகிய பள்ளிகளில் ஜும்ஆ தொழுகை நிறைவுற்ற பின்பு பள்ளிக்கு வெளியே முகாமிட்டு, பொதுமக்களை ஊக்கப்படுத்தி, உறுப்பினர் சேர்ப்புப் பணியைச் செய்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
கட்சியின் நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை கலந்தாலோசனைக் கூட்டம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளையின் முந்தைய கலந்தாலோசனைக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |