சில மாதங்களிலேயே சேதமுற்ற அப்பாபள்ளித் தெரு புதிய சாலையை போர்க்கால அடிப்படையில் செப்பனிடக் கோரி, அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காயல்பட்டினம் நகராட்சியில் முறையிட்டுள்ளனர். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவில், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி - கடந்த 2013 ஜூன் 03ஆம் நாள் துவங்கி, இரண்டரை மாதங்களுக்குப் பின் - ஆகஸ்ட் 14ஆம் நாளன்று நிறைவுற்றது.
அப்பாபள்ளித் தெருவின் வடபகுதி தாழ்வாக இருப்பதைச் சுட்டிக்காட்டி, புதிய சாலை அமைக்கையில், இக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்; அவ்வாறில்லையேல் புதிய சாலையே வேண்டாம் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கூற, அதைக் கவனத்தில் கொள்வதாக அதிகாரிகளும் அப்போது கூறினர்.
இவ்வாறிருக்க, அடுத்த 3 மாதங்களில் (நவம்பர் 2013) காயல்பட்டினத்தில் பெய்த மழையில் - புதிதாக அமைக்கப்பட்ட இச்சாலையில் - பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்ட அதே வட பகுதியில் மழை நீர் தேங்கி, நீண்ட நாட்களுக்கு வற்றாமல் இருந்ததுடன், புதிய சாலையும் கொஞ்சங்கொஞ்சமாக சேதமுறத் துவங்கியது.
அதற்குப் பிறகு நடப்பாண்டு பிப்ரவரி, மே மாதங்களில் பெய்த மழையிலும், நடப்பு அக்டோபர் மாதத்தில் பெய்து வரும் மழை காரணமாகவும் சாலையின் வடபகுதி பெருமளவில் சேதமுற்றுள்ளது.
மழை நீர் தேங்கும் காலங்களில் மற்ற பகுதிகளில் ஓரிரு நாட்களில் நீர் வற்றி விடும் நிலையிருக்க, இப்பகுதியில் மட்டும் நீண்ட நாட்களுக்கு தண்ணீர் வற்றாத நிலையே உள்ளது. இதன் காரணமாக, இப்பகுதியைக் கடந்து செல்வோர் தேங்கிய மழை நீருக்குள் இருக்கும் பள்ளங்களை உணராமல் தடுக்கி விழுவதும், பள்ளி வாகனங்கள் போக்குவரத்துக்கு மிகுந்த இடைஞ்சல் காணப்படுவதும் தற்போது வாடிக்கையாகிப் போனது.
இதனையடுத்து, அப்பாபள்ளித் தெருவின் வடபகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், நேற்று (அக்டோபர் 15) 15.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்திற்குத் திரண்டு சென்று, ஆணையரைச் சந்தித்து - இக்குறைகளைப் போக்கக் கோரி முறையிட்டனர்.
காயல்பட்டினம் நகராட்சியில் தான் ஆணையராகப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே இச்சாலைப் பணிகள் நிறைவுற்றுவிட்டதாகக் கூறிய அவர், புதிய சாலை அமைக்கப்பட்ட நேரத்தில், நகராட்சியின் Estimate அடிப்படையிலேயே சாலை அமைக்கப்பட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியதால் அதனடிப்படையிலேயே சாலை அமைக்கப்பட்டது என அலுவலர்கள் தெரிவித்ததாகக் கூறினார்.
எனினும், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் இந்த பள்ளத்தை நிரப்புவதற்கு தீர்மானம் இயற்றப்பட்டுவிட்டதால், அதனடிப்படையில் மறுநாளே (இன்று) ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை வெளியிடுவதாகவும், அடுத்த 15 நாட்களில் பள்ளம் சரி செய்யப்படும் என்றும் அவர் கூறியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
அப்பாபள்ளித் தெரு சாலை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |