DCW ஆலையின் மாசுக் கட்டுப்பாட்டு விதிமீறலைக் கண்டித்தும், அதன் உற்பத்தி விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காயல்பட்டினம் நகர பொதுமக்கள் கண்டன அஞ்சல் அட்டைகளைகளை அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, மனித உயிர்களுக்குக் கேடு விளைவிக்கும் வகையில், காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையை மூடக் கோரி, கடந்த ஜூன் மாதம் 20ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) ஒருங்கிணைப்பில், காயல்பட்டினத்தில் கருப்புக் கொடி போராட்டம், மனித சங்கிலி போராட்டம், விழிப்புணர்வுப் பொதுக்கூட்டம் ஆகியன நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, ஆலை விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அஞ்சல் அட்டை மூலம் கோரிக்கை வைக்குமாறு KEPA கேட்டுக்கொண்டதோடு, காயல்பட்டினம் நகர பொதுமக்களுக்கு அஞ்சல் அட்டைகளையும் வினியோகித்திருந்தது.
KEPA வேண்டுகோளை ஏற்று, பொதுமக்கள் அஞ்சல் அட்டைகளில் கண்டன வாசகங்களை எழுதி, தமது முகவரியிட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு அனுப்பி வருகின்றனர்.
ஹஜ் பெருநாளையொட்டி, இம்மாதம் 06ஆம் நாள் மாலையில், காயல்பட்டினம் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள், KEPA பொறுப்பாளர்களிடம் அஞ்சல் அட்டைகளைப் பெற்று, கண்டன வாசகங்களை எழுதி, தம் கைச்சான்று மற்றும் முகவரியிட்டு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர்.
DCW தொழிற்சாலையின் மாசு கட்டுப்பாட்டு விதிமீறலைக் கண்டித்தும், அதன் விரிவாக்கத் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியைத் திரும்பப் பெறக் கோரியும், தொழிற்சாலையை மூடக் கோரியும் அஞ்சல் அட்டைகளில் பொதுமக்கள் வாசகங்களை எழுதியனுப்பியுள்ளனர்.
இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை, KEPA செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா தலைமையில், பொருளாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால், துணைச் செயலாளர்களான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ, செயற்குழு உறுப்பினர்களான சாளை ஸலீம், ஏ.எஸ்.புகாரீ, ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், சாளை நவாஸ், எம்.ஏ.இப்றாஹீம் (48), செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |