காயல்பட்டினம் அப்பாபள்ளி தெருவில், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆகஸ்ட் 2013இல் புதிய சாலை அமைக்கப்பட்டது.. இப்பணியை ஒப்பந்ததாரர் தளவாணிமுத்து செய்திருந்தார்.
முடிவுற்ற நிலையில் அப்பாபள்ளி தெரு சாலை (ஆகஸ்ட் 2013)
சில மாதங்களில் மழைக் காலம் துவங்கவே, இப்புதிய சாலையின் வட பகுதியில் மழை நீர் தேங்கியது.
சில வாரங்களில் சாலையில் பாதிப்புகள் தென்பட துவங்கின. இக்காலகட்டத்தில், பொதுமக்கள் சார்பில், நகராட்சியிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. பொதுவாக ஒப்பந்தப் பணி நிறைவுற்ற சில மாதங்கள் வரை - பணியில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்வது, ஒப்பந்ததாரரின் பொறுப்பாகும். அந்தக் காலகட்டம் வரை, ஒப்பந்தத் தொகையின் சிறு பகுதி பிடித்தமாக வைக்கப்படும். ஆனால், இச்சாலை விஷயத்தில் இந்நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அப்பாபள்ளி தெருவின் வட பகுதி சாலை பாதிக்கப்பட்டுள்ளது குறித்து அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டபோதெல்லாம், இரு வேறு காரணங்கள் சில அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளன.
முதலாவது காரணம்: அப்பாபள்ளி தெருவின் வட பகுதி பள்ளமான பகுதியாகும். அங்கு, பணியின் மதிப்பீட்டு விபரங்களைக் கையில் வைத்திருந்த பொதுமக்கள், சாலையை தோண்டி போட கூறினார்கள்; அதனால்தான், சாலையின் அந்தப்பகுதி, பள்ளமாக அமைந்து, மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டது.
நேற்று (அக்டோபர் 15) அப்பகுதி மக்கள் நகராட்சி ஆணையரைச் சந்தித்தபோதும் இக்காரணம் ஆணையரால் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 2013இல் சாலை தோண்டப்பட்ட காட்சி
இச்சாலைப் பணிக்கான மதிப்பீட்டை தயாரித்த - நகராட்சியின் பொறியாளர், பணி மேற்பார்வையாளர், தொழில்நுட்ப உதவியாளர் ஆகியோர், இவ்விடத்திலுள்ள பள்ளம் குறித்து அப்பகுதி பொதுமக்களால் ஏற்கனவே முறையிடப்பட்டிருந்த நிலையிலும் ஏன் அதைக் கருத்தில் கொண்டு மதிப்பீடு தயாரிக்கவில்லை என்ற கேள்விக்கு, ஆணையருடனான நேற்றைய சந்திப்பில் விடை வழங்கப்படவில்லை.
சாலையின் தன்மைகளைக் கருத்திற்கொள்ளாமல் மதிப்பீடு தயார் செய்வதனால் எழும் கேள்விகளுக்கு, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் தங்களை பாதுகாத்து கொள்ள - சாலைப்பணிகள் முறையாக இருக்கவேண்டும் என ஆர்வப்படும் பொதுமக்களைக் குறை கூறும் வகையிலேயே இவ்விளக்கம் அமைந்துள்ளது.
அதிகாரிகள் தரப்பில் கூறப்படும் இரண்டாவது காரணம்: அப்பகுதியில் உள்ள இல்லங்களின் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள கான்க்ரீட் தரை முகப்பு, சாலையோர மணற்பகுதியை மறைத்தவாறு அமைந்துள்ளதால், தேங்கும் மழை நீர் - நிலத்தால் உரியப்பட வாய்ப்புகள் குறைகிறது. இதனால் மழை நீர் தேங்குகிறது.
இக்காரணத்தை - ஆணையர், நேற்று நடந்த கூட்டத்தில் தெரிவிக்காவிட்டாலும், பிற தருணங்களில் நகராட்சி அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கருத்தை அப்பகுதி மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
மேலும், அப்பாபள்ளித் தெருவில் புதிய சாலை அமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே ஏற்பட்டுள்ள சேதத்தை, இப்பணியைச் செய்த ஒப்பந்தாரர் செலவிலேயே புனரமைக்கக் கோராமல், நகராட்சி செலவில் – ரூபாய் 5 லட்சத்து 20 ஆயிரம் தொகை மதிப்பீட்டில் மீண்டும் இச்சாலையைப் புதுப்பிக்க, கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கூட்டத்தில், அதிகாரிகளால் கூட்டப்பொருள் வைக்கப்பட்டது. ஆனால் இக்கூட்டப் பொருள் மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஒப்பந்ததாரர் செலவிலேயே இந்த புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அக்கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவற்றப்பட்டது.
ஆனால், இந்த நிகழ்வுக்கு மாற்றமாக - நேற்று நடந்த ஆணையர் - பகுதி மக்கள் சந்திப்பில், நகராட்சி செலவில் புதிதாக சாலையைப் புனரமைக்க, நகர்மன்றத்தால் ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டது என ஆணையரும், தொழில் நுட்ப உதவியாளரும் தவறான தகவலை வழங்கியுள்ளனர்.
அப்பாபள்ளித் தெரு சாலை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |